Published:Updated:

`சமூகத்தாலும் சக ஆசிரியர்களாலும் மனஅழுத்தத்துக்கு ஆளானேன்' - மனம் திறக்கும் கவிஞர் இளம்பிறை #LetsRelieveStress

"நாங்கள் திட்டமிட்டபடி சினிமாவுக்குக் கிளம்பிய அன்று மாலை என்னைத் தேள் கொட்டிவிட்டது. இதை வீட்டில் சொன்னால் ‘வசந்தமாளிகை’ படத்துக்குப்போக அனுமதிக்கமாட்டார்கள். படம் பார்க்கும் வாய்ப்பே ஆறு மாதத்துக்கு ஒருமுறைதான் கிடைக்கும் என்பதால் தேள் கொட்டியதைச் சொல்லாமல் மறைத்துவிட்டேன்."

 கவிஞர் இளம்பிறை
கவிஞர் இளம்பிறை

“நான் பல வருடங்களாக ஆசிரியர் பணியில் இருப்பதால், பலதரப்பட்ட ஏழை மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. அது, வாழ்க்கை குறித்த பல்வேறு பரிமாணங்களை எனக்குச் சொல்லித் தந்திருக்கின்றது. தற்போது சென்னை தாம்பரம் சானடோரியத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வருகிறேன். கடந்த வாரம் ஒரு மாணவியைக் கூப்பிட்டு `ஏன்மா குளிக்காம ஸ்கூலுக்கு வந்திருக்க?' என்று கேட்டேன்.

`ஒரு குடம் தண்ணி 10 ரூபாய் டீச்சர். அம்மாக்கிட்ட 30 ரூபாய்தான் இருந்துச்சு. மூணு குடம்தான் வாங்க முடிஞ்சது. அதனால ‘மூஞ்சி, கை, காலை கழுவிட்டுப்போ. நாளைக்குக் குளிக்கலாம்’னு அம்மா சொன்னாங்க டீச்சர்...' என்று அந்த மாணவி சொன்னாள்.
கவிஞர் இளம்பிறை
கவிஞர் இளம்பிறை

இப்படி மாணவர்களின் குடும்பச் சூழலுடன் அவர்களைப் புரிந்துகொள்வதுதான் நல்ல ஆசிரியருக்கான அடையாளமாக இருக்கமுடியும். இல்லையென்றால் கணினியே மாணவர்களுக்குப் பாடங்களை நடத்திவிட்டுப் போய்விட முடியும்” என்று சமூகப் பார்வையோடு பேசும் இளம்பிறை, நவீன தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுள் முக்கியமானவர்.

`நீ எழுத மறுக்கும் எனதழகு’ (கவிதை), `அவதூறுகளின் காலம்’ (கவிதை), ‘வனாந்திர தனிப்பயணி’ (கட்டுரை), ‘காற்றில் நடனமாடும் பூக்கள்’ (கட்டுரை) போன்ற படைப்புகளைத் தந்தவர். அண்மையில் இவரது கவிதைகள் தொகுக்கப்பட்டு `லிங்கரிங் இம்பிரின்ட்ஸ்' (Lingering Imprints) என்கிற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

ஆசிரியரும், எழுத்தாளருமான அவரது வாழ்க்கையில் மனஅழுத்தம் தந்த தருணங்களையும் அவற்றை எதிர்கொண்ட விதத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

கவிஞர் இளம்பிறை
கவிஞர் இளம்பிறை

“எனக்குச் சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சாட்டியக்குடி. எங்கள் ஊரிலுள்ள அரசுப் பள்ளியில் அப்போது ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். இப்போது உள்ளதுபோல பொழுதுபோக்குக்கென நிறைய விஷயங்கள் அப்போதெல்லாம் இருந்ததில்லை. பாட்டிகள் சொல்லும் கதைகள், ரேடியோவில் ஒலிபரப்பப்படும் நாடகங்கள், சினிமாவுக்குப் போவது போன்றவைதான் பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்தன. வீட்டில் மின்சாரம் கிடையாது. மண்ணெண்ணெய் விளக்கு மட்டும்தான். மண்ணெண்ணெயை மிச்சம் பிடிப்பதற்காக எட்டு மணிக்கே விளக்கை அணைத்துவிடுவோம். வீட்டுக்கு வெளியே பாயை விரித்துப்போட்டு உட்கார்வோம். அக்கம் பக்கத்திலுள்ள உறவினர்கள் வந்து நிறைய கதை சொல்வார்கள். அந்தக் கதைகள் பெரும்பாலும் பேய்க் கதைகளாகத்தான் இருக்கும். முனி, காட்டேரி என்று பலவிதமான கதைகளைக் கேட்க சுவாரஸ்யமாக இருக்கும். அந்தக் கதைகளை எல்லாம் கேட்டு உண்மையென்று நம்பி, பயந்திருக்கிறேன்.

சாதாரண தேள் என்னைக் கொட்டியிருந்ததால் தப்பிவிட்டேன். அதுவே கடும் விஷத்தேளாக இருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்தால் இப்போதும் மனதை பயம் கவ்விக்கொள்கிறது.
கவிஞர் இளம்பிறை
கவிஞர் இளம்பிறை
கவிஞர் இளம்பிறை

யாரோ ஓரிருவர் வீடுகளில் மட்டும் ரேடியோ பெட்டி இருக்கும். அதற்கு பேட்டரி வாங்கக் காசில்லாமல் சும்மாதான் இருக்கும். அதனால் கதைகள் கேட்பதைத் தாண்டி பெரிய பொழுதுபோக்கு பக்கத்து ஊரிலிருக்கும் சினிமாக் கொட்டகைதான். அங்கே படம் பார்க்கப் போவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே பெரிய திட்டம் போடுவோம். அப்படி திட்டம் போட்டு பெண்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து ‘வசந்தமாளிகை’ படத்துக்குப்போவது எனத் தீர்மானித்திருந்தோம். அப்போது எங்களுடைய வீடு ஒரு பனைமரத்துக்குக் கீழே இருந்தது. அந்த மரத்திலிருக்கும் தேள்களில் சில கூரைமீது விழுந்து, வீட்டுக்குள்ளேயும் வரும்.

நாங்கள் திட்டமிட்டபடி சினிமாவுக்குக் கிளம்பிய அன்று மாலை என்னைத் தேள் கொட்டிவிட்டது. இதை வீட்டில் சொன்னால் ‘வசந்தமாளிகை’ படத்துக்குப்போக அனுமதிக்கமாட்டார்கள். படம் பார்க்கும் வாய்ப்பே ஆறு மாதத்துக்கு ஒருமுறைதான் கிடைக்கும் என்பதால் தேள் கொட்டியதைச் சொல்லாமல் மறைத்துவிட்டேன். திட்டமிட்டபடி தோழிகளோடு படத்துக்குப் போனேன். சினிமாக் கொட்டகையில்போய் உட்கார்ந்ததும் உடல் கடுக்க ஆரம்பித்துவிட்டது. தேள் கொட்டியதை வீட்டில் சொல்லாமல் மறைத்துவிட்டோமே என்று பயந்தேன். நமக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற யோசித்து யோசித்து மனஅழுத்தத்துக்கு ஆளானேன்.

சிவாஜி
சிவாஜி

‘வசந்தமாளிகை’ படத்தைவிட மனதில் தேள் கொட்டிய சிந்தனைகளே திரும்பத் திரும்ப வந்தன. ஒரு வழியாகப் படம் முடிந்ததும் வீட்டுக்குத் திரும்பினேன். மறுநாள் எனக்கு உடல்நிலை சரியில்லாமல்போய்விட்டது. பள்ளிக்குக் கிளம்பமுடியவில்லை. அப்போதுதான் என்னுடைய அம்மாவிடம் தேள்கொட்டியதைச் சொன்னேன். `அடிப்பாவி.. பாம்பு கடிச்சிருந்தாக்கூட இப்படித்தான் மறைச்சிருப்ப..’ என்று சொல்லி, பதறிப்போய் என்னை மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சிகிச்சை அளித்தார்கள். சாதாரண தேள் என்னைக் கொட்டியிருந்ததால் தப்பிவிட்டேன். அதுவே கடும் விஷத்தேளாக இருந்தால் என்னவாகியிருக்கும் என்று நினைத்தால் இப்போதும் மனதை பயம் கவ்விக்கொள்கிறது.

சில வருடங்களுக்கு முன் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போது மாணவர்களின் கல்வித் தரம் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைச் சோதிப்பதற்காக மாவட்ட கல்வி அதிகாரி வந்திருந்தார். மாணவர்களுக்கு வாய்ப்பாடு தெரிகிறதா என்று சோதிக்க விரும்பினார். என்னுடைய வகுப்புக்கு வந்தவர் ஒரு மாணவனை எழுப்பி ஒன்பதாம் வாய்ப்பாடு சொல்லச் சொன்னார். பொதுவாக மாணவர்கள் ரெண்டு, மூணாவது வாய்ப்பாடுகளை கடகடவென்று சொல்லிவிடுவார்கள். எனக்கு மொழி பற்றிய புரிதல் உண்டு. தாய்மொழி வழிக் கல்வி ஒரு மாணவனுக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதையும் அறிவேன். பல மொழியியல் அறிஞர்கள்கூட தாய்மொழியில் படிப்பதே சிறந்தது என்று வலியுறுத்துகிறார்கள்.

கவிஞர் இளம்பிறை
கவிஞர் இளம்பிறை

ஆனால், 7,8,9-வது வாய்ப்பாடு கேட்டால் திரு திருவென முழிப்பார்கள். அதிகாரி நேராக ஒன்பதாம் வாய்ப்பு கேட்டதும் மாணவன் வழக்கம்போலவே முழிக்க என்னிடம் திரும்பிய அதிகாரி, `என்னம்மா.. என்ன சொல்லிக்கொடுத்த?’ என்று கூறி கோபப்பட்டார். `ஏன்மா... உன் பையனை பிரைவேட் ஸ்கூல்ல சேர்த்துட்டு ஏழைப் பிள்ளைகளுக்கு வாய்ப்பாடுகூட சொல்லித் தர்றதில்லையா?' என்று கடிந்துகொண்டார். நான் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தேன். வகுப்பிலிருந்த மற்றொரு பையன் எழுந்து, `சார்.. மிஸ்ஸோட பையனும் இந்த ஸ்கூல்லதான் படிக்கிறான்...' என்றான்.

எனக்கு மொழி பற்றிய புரிதல் உண்டு. தாய்மொழி வழிக் கல்வி ஒரு மாணவனுக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதையும் அறிவேன். பல மொழியியல் அறிஞர்கள்கூட தாய்மொழியில் படிப்பதே சிறந்தது என்று வலியுறுத்துகிறார்கள்.
கவிஞர் இளம்பிறை

உடனே அவர், `அது மிஸ்ஸோட பையனா... மிஸ்ஸோட அக்கா பையனா?' என்று கேட்டார். அதற்கு நான் பதில் சொன்னேன். `சார்... அக்கா பையனும் இங்கேதான் படிக்கிறான் சார்'. `சரி, போய் உங்க பையனைக் கூட்டிட்டு வாங்க' என்றார். அழைத்து வந்து அவர் முன் நிறுத்தியதும் அவனிடமும் ஒன்பதாம் வாய்ப்பாட்டைக் கேட்டார். அவனும் பதில் சொல்லவில்லை. `ஏன்மா... உன் பையனுக்கும் பாடம் ஒழுங்கா சொல்லித் தரலையா?' என்று கேட்டுவிட்டு, `பொதுவா ஆசிரியர்கள் அரசுப் பள்ளியிலேயே தன் பிள்ளைகளும் படிக்கிறார்கள் என்று சொன்னால் நம்ப மாட்டேன். அதனால் அழைத்துவரச் சொன்னேன். சரி... மாணவர்களுக்கு இன்னும் நல்லா சொல்லிக்கொடுங்க' என்று சொல்லிவிட்டுச் சென்றார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அதே பள்ளியில் படிக்க வைக்கமாட்டார்கள் என்கிற அதிகாரியின் மனநிலைதான் பலரிடமும் இருக்கிறது.

கவிஞர் இளம்பிறை
கவிஞர் இளம்பிறை

அதேபோல அந்தச் சூழலில் என் சக ஆசிரியர் ஒருவர், `இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப்போயிடல.. உங்க பையனை தனியார் ஸ்கூல்ல சேர்த்துடுங்க. உங்க மேல இருக்கிற அன்பால இதைச் சொல்றேன். எனக்குத் தெரிந்த பிரைவேட் ஸ்கூல் பக்கத்துலதான் இருக்கு...' என்றார். இன்னும் சிலர் `இந்தம்மா காசுக்கு ஆசைப்பட்டு கவர்மென்ட் ஸ்கூல்லயே பையனைப் படிக்க வைக்குது' என்று கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார்கள்.

இப்படி நான் சமூகத்தாலும் சக ஆசிரியர்களாலும் மனஅழுத்தத்துக்கு உள்ளானேன். என் பையனிடமே, `தம்பி.. உனக்குத் தமிழ் மீடியம் பிடிச்சிருக்கா.. இல்லை இங்கிலீஷ் மீடியத்துல சேர்த்துவிடட்டுமா' என்று கேட்டேன். அவன் `நான் தமிழ் வழியிலேயே படிக்கிறேன்' என்று சொல்லிவிட்டான்.

கவிஞர் இளம்பிறை
கவிஞர் இளம்பிறை

எனக்கு மொழி பற்றிய புரிதல் உண்டு. தாய்மொழி வழிக் கல்வி ஒரு மாணவனுக்கு எந்தளவுக்கு முக்கியம் என்பதையும் அறிவேன். பல மொழியியல் அறிஞர்கள்கூட தாய்மொழியில் படிப்பதே சிறந்தது என்று வலியுறுத்துகிறார்கள். ஒரு குழந்தை தாய்மொழியைத் தவிர்த்துவிட்டு பிறமொழியில் கற்கும்போது புது மொழியைக் கற்றுக்கொள்வதும், அந்த மொழியிலேயே பாடத்தைப் புரிந்துகொள்வதும் என இரு பிரச்னைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். குழந்தைகள் உரிமை பற்றி பேசுகிறோம். அப்படியிருக்கும்போது தொடக்கக் கல்வியிலேயே ஒரு குழந்தைக்கு அதன் தாய்மொழியைத் தவிர்த்து பிறமொழியில் கற்பிப்பதுகூட வன்முறைதான்!” என்கிறார் இளம்பிறை.