களவு போகிறதா கர்ப்பிணிகள் உதவித்தொகை... என்ன நடக்கிறது ஆரம்ப சுகாதார நிலையங்களில்?

அரசோட திட்ட நோக்கம்படி, கர்ப்பகாலத்துல பணம் ஏறினாதானே கர்ப்பமா இருக்கும்போதே பழங்கள், காய்கறிகள், பருப்புனு அந்தப் பணத்தை வெச்சு ஊட்டச்சத்து உணவுகளா வாங்கிச் சாப்பிட முடியும்?
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால மற்றும் பேறுகால நிதி உதவித் தொகையாக ₹12,000 முதல் ₹18,000 வரை, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் இந்தத் திட்டத்தில் பதிவு எண் பெற்றவுடன் ₹2,000, நான்காவது மாதத்துக்குப் பிறகு இரண்டு தவணைகளில் தலா ₹2,000, அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் ₹4,000, குழந்தைக்கு மூன்றாம் தவணை தடுப்பூசி போட்ட பிறகு ₹4,000, குழந்தைக்கு 9 மாதம் முடிந்தவுடன் ₹2,000, கர்ப்பகாலத்தில் ₹2,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகங்கள் இரண்டு என, உதவித் தொகை பிரித்து வழங்கப்படுகிறது.
இந்த நல்ல திட்டத்தின் மூலம் தாய் மற்றும் சேய் ஊட்டச்சத்து பெறுகின்றனர். இதன் மூலம் தாய், சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்தினாலும் அதிகாரிகளும் செவிலியர்களும் பணம் மற்றும் பொருள்களை அபகரித்துக்கொள்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இன்னொரு பக்கம், பல இடங்களில் பணம் மற்றும் ஊட்டச்சத்துப் பொருள்கள் முறையாகக் கிடைத்தாலும், கர்ப்பிணிப் பெண்களின் கர்ப்பகாலம் மற்றும் பேறுகாலத்தில் கிடைக்க வேண்டிய தொகை மிகவும் தாமதமாக வழங்கப்பட்டு திட்டத்தின் நோக்கமே சிதைக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண், ``என் கணவர் ஊர் வத்திராயிருப்பு. அதனால, கோட்டையூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போகணும். சுமார் 7 கிலோ மீட்டர் போய் செக்கப் பார்த்துக்கிட்டோம். ஊசி, மாத்திரைனு அவங்க சொல்றத கரெக்ட்டா ஃபாலோ பண்ணோம். உதவித்தொகை பெற பதிஞ்சிருந்தோம். ஆனாலும், பல மாசமா பணம் அக்கவுன்ட்ல ஏறலை.

ஆரம்ப சுகாதார நிலையத்துல கேட்டா, ``பாஸ்புக்க ஒழுங்கா செக் பண்ணுங்க, பணம் ஏறி இருக்கும்"னு சொன்னாங்க. ஆனா 8 மாசம் வரை முதல் தவணை பணம்கூட ஏறலை. 9-வது மாசம் ₹4,000 பணம் போட்டிருந்தாங்க. குழந்தை பிறந்து பல மாசம் ஆச்சு. இன்னும் அடுத்தகட்ட பணம் ஏறுனபாடு இல்ல.
அரசோட திட்ட நோக்கம்படி, எங்க கர்ப்பகாலத்துல பணம் ஏறினாதானே கர்ப்பமா இருக்கும்போதே பழங்கள், காய்கறிகள், பருப்புனு அந்தப் பணத்தைவெச்சு ஊட்டச்சத்து உணவுகளா வாங்கிச் சாப்பிட முடியும்? ஏழை, எளிய கர்ப்பிணிகளுக்கு அதுக்குத்தானே இந்தப் பணத்தையே கொடுக்குறாங்க? ஆனா, கர்ப்பகாலத்துல கொடுக்க வேண்டிய தவணைகளை, குழந்தை பிறந்து பல மாசம் கழிச்சுத்தான் கொடுக்குறாங்க" என்றார் வேதனையுடன்.
மேலூரைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், ``மேலூர் நகராட்சி பகுதிக்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்கள் சந்தப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்குத்தான் செக்கப் போவோம். கர்ப்பமானது உறுதியானதும் பதிஞ்சுக்கிறோம். ரெகுலரா ஊசி, மாத்திரை வாங்கிக்கிறோம். ஆனா, எங்களுக்குத் தர வேண்டிய தொகையின் முதல் தவணையை 9-வது மாசம் வந்தாலும் அக்கவுன்ட்ல போடுறதில்ல.

கேட்டா, முதல் குழந்தைக்கு லேட்டாதான் காசு ஏறும்னு திட்டுறாங்க. நாம பணத்துக்குப் பதியும்போது, 300 ரூபாய் வாங்கிக்கிறாங்க. முழுப் பணம் ஏறிட்டா போதும். 1,000 கொடுங்க, 500 கொடுங்கனு புடுங்கிக்கிறாங்க. அவங்க சொல்றத நாம கேக்காட்டி நம்மள அலைக்கழிப்பாங்க.
ஊட்டச்சத்து பவுடர், இரும்புச்சத்து டானிக், நெய் பாட்டில், பேரீச்சம்பழம், டம்ளர், காட்டன் துண்டுனு ₹2,000 மதிப்புள்ள பெட்டகம் கொடுப்பாங்க. ஆனா, ரெண்டு முறை கொடுக்க வேண்டிய இந்தப் பெட்டகத்தை ஒரு முறைதான் கொடுக்கிறாங்க. இன்னொரு கிட் எப்போ கொடுப்பீங்கனு நாம கேட்டாலும் முறையான பதில் இல்ல. நாம அங்க ரூல்ஸ்லாம் பேச முடியாது" என்றார் ஆற்றாமையுடன்.
இது குறித்து மேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொறுப்பு வகிக்கும் மருத்துவர் ஸ்வர்ணபிரியாவிடம் கேட்டோம். ``ஆவணங்களை முறையாகக் கொடுத்தவர்களுக்குப் பணம் அக்கவுன்ட்டில் க்ரெடிட் ஆகிவிடும். மூன்றாவது மாதத்தில் ஏற வேண்டிய பணம் 6-வது மாதத்தில்தான் ஏறும். அதேபோல், அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைகள், சிகிச்சைக்கு கர்ப்பகாலம் முழுக்க வந்தால்தான் முழுமையாகப் பணம் கிரெடிட் செய்யப்படும். பாதியில் தனியார் மருத்துவமனைச் சென்றால் பாதிப்பணம் கிரெடிட் செய்யப்படாது.
மருத்துவ கிட்டைப் பொறுத்தவரை, ஒரு கர்ப்பிணிக்கு ஒரு கிட்டாவது கிடைக்க வேண்டும் என்று கொடுத்துவிடுவோம். ஸ்டாக் வந்த பின்னர், அடுத்து அடுத்து கொடுப்போம். மேலூரில் பல பெண்கள் சரியாக ரெகுலர் செக்கப்புக்கு எங்களிடம் வருவதில்லை. நாங்கள்தான் போனில் அழைத்து வரச்சொல்லிக் கொடுக்கிறோம். இவை அனைத்தையும் முறையாக ஆவணம் செய்து மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கிறோம்" என்று பேசி போனைத் துண்டித்தார்.

மேலூர் கர்ப்பிணி தெரிவித்த புகார் குறித்து மதுரை சுகாதாரத்துறை இணை இயக்குநர் அர்ஜுனிடம் கேட்டோம். ``கர்ப்பிணிப் பெண்கள் சிலர் தங்களின் வங்கிக் கணக்கை சரியாகப் பார்க்காமல், பணம் கிரெடிட் ஆகவில்லை என்று நினைக்கின்றனர். கர்ப்பிணிகளுக்கு சரியான இடைவெளிகளில் பணம் கிடைக்கும்.
தாமதம் ஏற்பட்டால் அதிகபட்சம் ஒரு மாதம் ஆகலாம். அதற்கு மேல் தாமதம் ஏற்பட வாய்ப்பில்லை. அப்படியும் பணம் கிரெடிட் ஆகவில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் விசாரணை செய்துகொள்ளலாம். அங்கேயும் திருப்தி ஏற்படவில்லை என்றால் எங்களைத் தொடர்புகொள்ளலாம்.
மேலூர் பகுதியில் கர்ப்பிணி பெண்களுக்கு 2 கிட் கொடுப்பதில் பிரச்னை இருப்பதாகச் சொல்லப்பட்டது. அதை விசாரித்து சரி செய்கிறேன். அதேபோல், கர்ப்பிணிகளிடம் ஹெல்த் சென்டர்களில் பணம் வாங்குவதாகத் தெரிந்தால் புகார் அளிக்கலாம்; கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.
விருதுநகர் பெண் தெரிவித்த பிரச்னை குறித்து விசாரிக்க சிவகாசி சுகாதாரத்துறை துணை இயக்குநர் ராம் கணேஷ் அவர்களிடம் பேசினோம். ``குறிப்பிட்ட விதியின் கீழ் தகுதியுடைய கர்ப்பிணிகள்தான் பணம் பெற முடியும். பணம் பெற தகுதியுள்ள பெண்களுக்குப் பணம் கிடைக்கவில்லை என்றால் 104 என்ற எண்ணுக்கு அழைத்து அவரின் பிக்மி (PICME - Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation) நம்பரை தெரிவித்து நிலையை தெரிந்துகொள்ளலாம். பொதுவாக, பெண்ணின் முதல் குழந்தைக்கு மத்திய அரசு மூலமும் உதவித் தொகை கிடைக்கிறது. அந்த ஆவணங்கள் டெல்லி சென்று வருவதால் அதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழக அரசால் கிடைக்கும் உதவித்தொகை சரியான நேரத்தில் கிடைத்துவிடும்" என்றார்.

கர்ப்பிணிப் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய பணம் மற்றும் ஊட்டச்சத்துப் பொருள்கள் அரசு ஆவணங்களுக்கு முறையாகக் கணக்குக் காட்டப்பட்டாலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த உதவி முழுமையாகக் கிடைக்கிறதா என்றால் கண்டிப்பாகக் கேள்விக்குறிதான். இந்தப் பிரச்னை குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல இடங்களில் இருந்துவருகிறது என்பது உண்மை. எனவே, சுகாதாரத்துறை மேல்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களுக்கும், அரசின் மகப்பேறு நிதி உதவித் திட்ட அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு கொடுக்கப்பட வேண்டும்.