மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பெண் உடலைப் பேசுவோம்... 2 - ஒழுக்கத்தைத் தீர்மானிப்பதல்ல பெண் பிறப்புறுப்பின் வேலை!

பெண் உடலைப் பேசுவோம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெண் உடலைப் பேசுவோம்

நோய்களைப் பரப்பும் பாக்டீரியா கிருமிகள் பிறப்புறுப்பினுள் நுழைந்து கர்ப்பப்பை வரை செல்லாமல் தடுப்பதுதான் கன்னித்திரையின் வேலை

முதுகும் பெண்ணின் பிறப்புறுப்பும் ஒருவகை யில் ஒன்றுதான். இரண்டும் நம்முடைய உடலிலிருந்தாலும் முழுமையாகப் பார்க்க முடியாது. பிறப்புறுப்பின் உள் பாகங்கள் குறித்தும், அவற்றில் நிகழ்கிற மாறுபாடுகள் குறித்தும், பராமரிப்பு குறித்தும் ஒவ்வொரு பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இதற்காகச் சென்னையின் மூத்த மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜிடம் பேசினோம்.

பெண் உடலைப் பேசுவோம்... 2 - ஒழுக்கத்தைத் தீர்மானிப்பதல்ல பெண் பிறப்புறுப்பின் வேலை!

‘`பிறப்புறுப்பின் அமைப்பு (Anatomy) பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வதுதான், அந்த உறுப்பு பற்றிப் பேசுவதற்கான முதல்படி. பிறப்புறுப்பின் ரோமங்கள் நிறைந்த மேல் பாகம் `மான்ஸ் பியூபஸ்’ (Mons Pubis). அடுத்து இருக்கிற பெரிய உதடுகள் `லேபியா மஜோரா’ (Labia Majora). அதற்கடுத்து இருக்கிற சிறிய உதடுகள் `லேபியா மினோரா’ (Labia Minora). இவை மூன்றுமே பிறப்புறுப்பை மூடி பாதுகாப்பவை. இதற்குள் சிறிதும், பெரிதுமாக இரு துளைகள் இருக்கும். சிறியது, சிறுநீரை வெளியேற்றும். பெரிய துளை, மாதவிடாய் வெளியேற்றம், தாம்பத்திய உறவு, சிசுவை வெளியேற்றுதல் என மூன்று முக்கிய பணி களைச் செய்கிறது. பிறப்புறுப்பின் வாசல் என்றழைக்கப்படும் இந்தத் துளைக்குள்தான், பெண்ணுடல் தொடர்பான முக்கிய விவாதப் பொருளான ‘ஹைமன்’ எனப்படும் மெல்லிய கன்னித்திரை இருக்கிறது.

நோய்களைப் பரப்பும் பாக்டீரியா கிருமிகள் பிறப்புறுப்பினுள் நுழைந்து கர்ப்பப்பை வரை செல்லாமல் தடுப்பதுதான் கன்னித்திரையின் வேலை. தவிர, இதிலிருக்கிற சிறு சிறு துவாரங்கள் வழியாக மாதவிடாய் வெளியேறும். மற்றபடி, பெண்களின் ஒழுக்கத் தைப்பற்றி நன்சான்றிதழ் கொடுப்பதெல்லாம் இதன் வேலை கிடையாது. பிறை வடிவில் இருக்கும் ஹைமன், முதல் உறவின் போதுதான் கிழிய வேண்டுமென்பதில்லை. ஓடுவது, ஆடுவது, விளையாடுவது, சைக்கிள் ஓட்டுவது என எந்தச் செயல்களின்போதும் கிழியலாம். `டாம்பூன்’ அல்லது `மென்ஸ்ட்ருவல் கப்’ பயன்படுத்தும்போதுகூட ஹைமன் சேதமாகலாம். முதல் உறவின்போது ஹைமன் கிழியாமல் நெகிழ்ந்து கொடுக்கலாம்.

அதீத சுத்தமும் ஆபத்தே...

தினசரி இரண்டு வேளை குளிக்கும்போது பிறப்புறுப்பை சுத்தம் செய்வதே போதுமானது. வஜைனல் வாஷெல்லாம் அவசியமில்லை. நீங்கள் பயன் படுத்துகிற சோப் லேசான நறுமணம் கொண்ட, அதிக ரசாயனங்கள் சேர்க்காததாக இருந்தால் பிறப்புறுப்பு அதன் இயற்கை வழுவழுப்பை இழக்காமல் இருக்கும். பிறப்புறுப்புக்குள் நகங்கள் கொண்ட விரல்களால் சுத்தம் செய்வது, ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பிறகும் சோப் போட்டுக் கழுவுவது, அந்தப் பகுதியில் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்து வதெல்லாம் கூடவே கூடாது. இந்த அதீத சுத்தத்தால், பிறப்புறுப்பின் அமிலத்தன்மை குறைந்து தொற்று ஏற்படலாம்.

பெண் உடலைப் பேசுவோம்... 2 - ஒழுக்கத்தைத் தீர்மானிப்பதல்ல பெண் பிறப்புறுப்பின் வேலை!

அதென்ன அமிலத்தன்மை?

வாய் உலர்ந்து புண் வராமல் இருப்பதற்காக எச்சில் சுரப்பதுபோல, பிறப்புறுப்பு வறண்டு புண்ணாகாமல் இருக்க அங்கு வாடையும் நிறமுமற்ற திரவம் கசியும். அந்தத் திரவத்தில் 3.8 முதல் 4.5 வரை அமிலத்தன்மை இருக்கும். இது ‘பிஹெச் பேலன்ஸ்' (pH balance) எனப்படும். இது பிறப்புறுப்புக்குள் கிருமிகள் நுழையாமல் அழித்துவிடும்.

கடைகளில் விற்பனையாகிற கெமிக்கல்களால் சுத்தம் செய்வது, தாம்பத்திய உறவின்போது கிருமித்தொற்று ஏற்படுவது, சுகாதாரமற்ற டாம்பூன், மென்ட்ஸ்ருவல் கப், நுரைக்குளியல், கடினமான சோப், கருத்தடைக்குப் பயன்படுத்துகிற நுரை அல்லது ஜெல்லி, நாள் முழுக்க ஒரே உள்ளாடையை அணிந்துகொண்டிருப்பது, இறுக்கமான, காற்றுப் புகாத சிந்தெடிக் உள்ளாடை, டாய்லெட் டிஷ்யூ பேப்பர், பிறப்புறுப்பு வறட்சியை சரி செய்ய பயன்படுத்தும் க்ரீம், காண்டம் என்று பிறப்புறுப்பில் தொற்று ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. தொற்று ஏற்பட்டால், அமிலத்தன்மை குறையும். அமிலத்தன்மை குறைந்தால் பாக்டீரியா, ஃபங்கஸ், ஈஸ்ட் என்று பல தொற்றுகள் சுலபமாக ஏற்பட்டுவிடும்.

பெண் உடலைப் பேசுவோம்... 2 - ஒழுக்கத்தைத் தீர்மானிப்பதல்ல பெண் பிறப்புறுப்பின் வேலை!

பெண்ணின் பிறப்புறுப்பில் பொதுவாக மூன்று வகையான தொற்றுகளே அதிகம் வரும். அமிலத்தன்மை குறையும்போது வருகிற பாக்டீரியா தொற்று, நிறைய நீர் அருந்தினாலே சரியாகிவிடும். அடுத்து பாராசைட் தொற்றால் பிறப்புறுப்பு வீங்கி, சிவந்து, கூடவே அரிப்பும் மீன் வாடையும் வரும். மூன்றாவது ஈஸ்ட்டால் வருவது. தயிர்போல வெள்ளைப்படும். இது பிறப்புறுப்பின் உள்பகுதியிலும் ஒட்டியிருக்கும் என்பதால் அந்தப் பகுதியே சிவந்து, வீங்கி, வலிக்கும். கூடவே, சிறுநீர் போகும்போது எரிச்சலிருக்கும். மேலே சொன்ன பிரச்னைகளுக்கு மருத்துவ தீர்வுகள் இருக்கின்றன. ‘தானா சரியாகிடும்’ என்ற அலட்சியம் வேண்டாம்’’ என்றவர், பெண்ணின் பிறப்புறுப்பு ஆரோக்கியத்துக்கான அடிப்படை டிப்ஸையும் அறிவுறுத்தினார்...

‘`மலம் கழித்த பிறகு, ஆசன வாயை நீரால் சுத்தம் செய்யும்போது, கைகள் முன்பக்கத்திலிருந்து பின்பக்கமாகத்தான் செல்ல வேண்டும். பின்பக்கத்திலிருந்து முன்பக்கமாக நீர் ஊற்றி சுத்தம் செய்தால், மலத்திலிருக்கிற கிருமிகள் பிறப்புறுப்புக்குள் சென்று தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு இதைக் கட்டாயம் சொல்லித் தர வேண்டும். உடலின் மற்ற உறுப்புகளுக்கு தருகிற முக்கியத்துவத்தைவிட, பிறப்புறுப்புக்குக் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுங்கள்’’ என்கிறார் டாக்டர் கமலா செல்வராஜ்.

- பேசுவோம்...

இதற்கெல்லாம் பயப்பட வேண்டாம்!

முதல் முறை உறவு கொள்ளும்போது, யூரினரி இன்ஃபெக்‌ஷன் வரலாம். இது நார்மல்தான். சீக்கிரமே சரியாகி விடும். வலி, வீக்கம் என்று ஏற்பட் டால் மருத்துவரை நாடுங்கள்.

தேவையான நீர் அருந்தவில்லை யென்றால், அந்தப் பகுதியில் எரிச்சல் ஏற்பட்டு சொட்டு சொட்டாக சிறுநீர் வெளியேறும். நிறைய தண்ணீர் குடித்தாலே இது சரியாகிவிடும்.

வாடை வராத, நிறமில்லாத லேசான வெள்ளைப்படுதல் நார்மல்தான். கெட்ட வாடை, நிறத்துடன் கூடிய வெள்ளைப்படுதல் இருந்தால் மட்டும் மகப்பேறு மருத்துவரைப் பாருங்கள்.

நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதால் பிறப்புறுப்பிலும் மரு வரலாம். மருத்துவரை அணுகி தெளிவு பெறுங்கள்.

வெயிலும் தேங்காய் எண்ணெயும்...

உள்ளாடைகளை மறைத்து காய வைக்கத் தேவையில்லை. அவற்றை நேரடி வெயிலில் காய வைத்தால்தான் தொற்று வராமல் தடுக்க முடியும்.

24 மணி நேரமும் ஒரே உள்ளாடையை அணிந்துகொண்டிருக்காதீர்கள். இரவில் உங்கள் உள்ளாடை தளர்வாக இருக்கட்டும். எப்போதும் பருத்தியிலான உள்ளாடைகளை மட்டும் அணியுங்கள்.

மாதவிடாய் நாள்களில் நாளொன்றுக்கு குறைந்தது 4 நாப்கின்களைப் பயன் படுத்துங்கள். நாப்கின் வைத்துப் புண்ணான பகுதியில் கலப்படமில்லாத தேங்காய் எண்ணெய் தடவினால் போதும்

பெண் உடலைப் பேசுவோம்... 2 - ஒழுக்கத்தைத் தீர்மானிப்பதல்ல பெண் பிறப்புறுப்பின் வேலை!

பெண்ணின் பிறப்புறுப்பு ரோமத்தை நீக்குவது அவசியமா?

மகப்பேறு மருத்துவர் நிவேதா பாரதி

``மருத்துவரீதியாக அவசியமில்லை. பிரசவத்துக்கு முன்னால்கூட இந்த ரோமத்தை நீக்க நாங்கள் அறிவுறுத்துவது இல்லை. மாதவிடாய் நேரத்தில் கசகசப்பாக உணர்ந்தால் ட்ரிம் செய்துகொள்ளலாம். ரேசர், கெமிக்கல் க்ரீம் போன்றவற்றைப் பயன்படுத்தினால் பிறப்புறுப்பு வறண்டு போய் தொற்று ஏற்படக்கூடும்.’’

கன்னித்திரை எனும் கப்ஸா!

`ஹைமன்' என்பது ஒரு மெல்லிய ஜவ்வு. இதைத்தான் காலம்காலமாக 'கன்னித்திரை' என்று சமூகம் குறிப்பிட்டு வருகிறது. 'முதலிரவின் போது இந்த ஜவ்வு கிழிந்து ரத்தம் வரும். அப்படி நிகழ்ந்தால்தான் அந்தப் பெண்ணுக்கு அது முதல் உறவு' என்றும் நம்பிக்கொண்டிருக் கிறார்கள். இதைக் கண்டுபிடிப்பதற் காக இன்றைக்கும் சில வீடுகளில் வெள்ளை நிற படுக்கை விரிப்பை முதலிரவுக் கட்டிலில் விரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஹைமன் ஜவ்வுக்கும் முதல் உறவுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறது மருத்துவம்.