
இன்றைக்கு ஐம்பது ப்ளஸ்ஸில் உள்ள பல பெண்கள் 15 அல்லது 16 வயதில் பூப்பெய்தி யிருப்பார்கள். இவர்களின் மகள்கள் 12 அல்லது 13 வயதில் பூப்பெய்தியிருப்பார்கள்.
பூப்பெய்தாமை... அரிதினும் அரிதாக சிலருக்கே இந்தப் பிரச்னை நிகழ்கிறது. இது ஏன் நடக்கிறது, இதற்குத் தீர்விருக்கிறதா... இந்த இதழில் அதைப் பற்றிதான் பேசப் போகிறோம்.
‘`இன்றைக்கு ஐம்பது ப்ளஸ்ஸில் உள்ள பல பெண்கள் 15 அல்லது 16 வயதில் பூப்பெய்தி யிருப்பார்கள். இவர்களின் மகள்கள் 12 அல்லது 13 வயதில் பூப்பெய்தியிருப்பார்கள். இந்தக் காலச் சிறுமிகளில் சிலர் பத்து வயதி லேயே பூப்பெய்துகிறார்கள். மரபணு, உணவு, சுற்றுச்சூழல் என்று இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 14 வயதுக்கும் மேல் உங்கள் மகள் பூப்பெய்தவில்லை என்றால், உடனடியாக மகப்பேறு மருத்துவரைப் பார்க்க வேண்டும். பூப்பெய்தாமை என்பது அரிதான பிரச்னை என்றாலும், பெரும்பாலும் இதைச் சரி செய்து விடலாம்...’’ நம்பிக்கை வார்த்தைகளுடன் பேச ஆரம்பித்தார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் சிறுநீரகவியல் நிபுணருமான ராஜ மகேஸ்வரி.

‘`சினை முட்டை வெளிப்படுதல் சரிவர நிகழவில்லையென்றால் ஹார்மோன் செயல் பாடுகளும் சரியாக இருக்காது. இந்தப் பிரச்னை உள்ள சிறுமிகள் பூப்பெய்த மாட் டார்கள். மருந்து, மாத்திரைகள் மூலமே ஹார் மோன் பிரச்னையை சரிசெய்து, இவர்களை பூப்பெய்த வைத்துவிடலாம். சில சிறுமிகளுக்கு கர்ப்பப்பை, சினைப்பை இரண்டின் வளர்ச்சியும் இயல்பாக இருக்கும். ஹார்மோன் சுரப்பும் சரியாக இருக்கும். ஆனாலும் பூப்பெய்த மாட்டார்கள். உண்மையில் இவர்கள் பூப்பெய்தியிருப்பார்கள். ஆனால், மாதவிடாய் உதிரப்போக்கு வெளியேற இயலாமல் கர்ப்பப்பையிலும், கர்ப்பப்பைக் குழாய்களிலும், சிறுநீர்ப் பைக்கும் மலம் வெளியேறும் பகுதிக்கு இடையிலும் சேகரமாகிக்கொண்டிருக்கும். பிறப்புறுப்பில் ஜவ்வுப்படலமோ அல்லது அடைப்போ இருப்பதுதான் காரணம். இந்தச் சிறுமிகள், மாதந்தோறும் உடலுக்குள் மாதவிடாய் வெளிப்படும்போது ‘பீரியட்ஸ் வலி’யையும் உணர்வார்கள். உடலுக்குள் மாதவிடாய் உதிரம் சேர்ந்துகொண்டே இருப்பதால், ஒருகட்டத்துக்கு மேல் அது கட்டிபோல மாறி சிறுநீர்ப்பையை அழுத்த ஆரம்பிக்கும். விளைவு ‘பொண்ணு யூரின் போக முடி யாம கஷ்டப்படுறா டாக்டர்’ என்று அழைத்து வருவார்கள்.
பிறப்புறுப்பில் ஜவ்வுப்படலம் இருந்து, அதன் காரணமாக மாதவிடாய் உதிரம் வெளிவராமல் இருந்தால் சிறிய அறுவை சிகிச்சை செய்து, தேங்கியுள்ள உதிரத்தை வெளியேற்றி விடுவோம். அதன்பிறகு சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மாதந்தோறும் மாதவிடாய் வர ஆரம்பித்து விடும். ஏற்கெனவே உடலுக்குள் தேங்கியிருக்கிற உதிரமும் படிப்படியாக வெளியேறிவிடும். சில சிறுமிகளுக்குப் பிறப்புறுப்பில் சதை அடைப்பு இருப்பதோடு, கர்ப்பப்பையுடனும் தொடர்பில் இருக்காது. இவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் சதை அடைப்பை நீக்கி, கர்ப்பப்பையுடன் பாதையை உருவாக்கி விடுவோம்.

சிலருக்கு, இரண்டு கர்ப்பப்பை, அவற்றுக்கு ஒன்றாகவோ, தனித்தனியாகவோ வாய்ப்பகுதி இருக்கும். இதில் ஒரு கர்ப்பப்பை வாய் மட்டும் பிறப்புறுப்புடன் தொடர்பில் இருக்கும். அதன் வழியாக மாதவிடாய் வெளியேறிக்கொண்டிருக்கிற அதே நேரம் இன்னொரு கர்ப்பப்பையிலும் சிறிதளவு மாதவிடாய் உதிரம் சேகரமாகிக் கொண்டிருக்கும். இந்தச் சிறுமிகளும் பூப்பெய்திய சில வருடங்களில் வயிற்றுவலி, சிறுநீர் கழிக்க இயலாத பிரச்னையுடன் மருத்துவமனைக்கு வருவார்கள். இவற்றையும் சரி செய்து விடலாம்’’ என்றவர், சிறுமிகளின் உடலுக்குள் பூப்பெய்தல் நிகழ்ந்திருந்தால் அதை எப்படிக் கண்டறிவது என்பதையும் விளக்குகிறார்.
‘`உங்கள் மகள் 14 வயதாகியும் பூப்படையவில்லை என்றாலும், அந்த வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சியும், அக்குள் மற்றும் பிறப்புறுப்பு ரோம வளர்ச்சியும் இருந்தால், பூப்பெய்தல் நிகழ்ந் திருக்கலாம் என்பதைப் புரிந்து கொண்டு உடனடியாக மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்’’ என்கிறார்.
- பேசுவோம்...
பூப்பெய்தவில்லை... திருமணம் செய்துகொள்ளலாமா?
கர்ப்பப்பை வளர்ச்சியின்மையால் பூப்பெய்தல் நிகழவில்லை என்றாலும், பிறப்புறுப்பில் தாம்பத்திய உறவு வைத்துக் கொள்வதற்கான பாதையிருக்கிறது என்றால் தாராளமாகத் திருமணம் செய்துகொள்ளலாம்.
ஒருவேளை பிறப்புறுப்பில் சதை அடைத்துக் கொண்டு தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வழியே இல்லையென்றால், அறுவை சிகிச்சை மூலம் பாதையை உருவாக்கிய பிறகு திருமணம் செய்துகொள்ளலாம். பாதையை உருவாக்க முடியவில்லையென்றால், குடலின் சிறு பகுதியை எடுத்து வைக்கும் அறுவை சிகிச்சை யின் மூலம் சரி செய்துவிடலாம்.

டர்னர் சிண்ட்ரோமும் பூப்பெய்தலும்..!
நாளமில்லா சுரப்பியியல் மருத்துவர் ஸ்ருதி, சென்னை
சில பெண் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே பூப்பெய்தலுக்கான குரோமோசோம் இருக்காது. இதை `டர்னர் சிண்ட்ரோம்' (Turner Syndrome) என்போம். இவர்கள் வயதுக் கேற்ற வளர்ச்சியுடன் இருக்க மாட்டார்கள். இந்தப் பிரச்னையை சிறுவயதிலேயே கண்டறிந்து ஹார்மோன் சிகிச்சையளிப்பதன் மூலம் கர்ப்பப்பையை வளரவைத்து, மாதவிடாயையும் வரவழைக்கலாம். மார்பகங்களும் வளர்ச்சிபெறும். ஆனால், கரு முட்டைகள் உருவா காது என்பதால் குழந்தைப்பேறு இருக்காது.
இவையும் இயற்கைதான்!
சில சிறுமிகளுக்குக் கர்ப்பப்பை வளர்ச்சி யடையாமல் மிளகு சைஸில் இருக்கும். சிலருக்கு சினைப்பைக்கு பதிலாக விதைப்பை இருக்கும். இவையிரண்டும் அரிதிலும் அரிதானவை என்றாலும் இயற்கையே... இவர்களால் பூப்பெய்த இயலாது என்றாலும், மருத்துவ ஆலோசனை பெற்று திருமணம் செய்துகொள்ளலாம்.
மருத்துவம் வளராத காலகட்டத்தில் பூப்பெய்தாமை பெரிய பிரச்னையாகப் பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால், அறிவியலும் மருத்துவமும் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் அது அவசியமில்லை.