Published:Updated:

கடவுளுக்கு மட்டுமே தெரிந்த காரணம்... இப்படியும் ஒரு பிரச்னையா?

ஃபைப்ரோமயால்ஜியா

பிரீமியம் ஸ்டோரி

பெண்களின் வாழ்க்கை வலி நிறைந்தது. பூப்பெய்துவது தொடங்கி, பிரசவம், மெனோபாஸ் என தன் வாழ்வின் ஒவ்வொரு பருவத்திலும் பலவித வலிகளைச் சுமந்தபடியே வாழப் பழகுகிறாள் பெண். வலி நிவாரணிகளை நம்பியே இருக்கிறது பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை.

வலி நிவாரணிக்கெல்லாம் கட்டுப்படாத, மருத்துவர்களுக்கே சவாலான வலி ஒன்றையும் சில பெண்கள் அனுபவிக்கிறார்கள். அதன் பெயர் ‘ஃபைப்ரோமயால்ஜியா’. காரணம் அறியாத அந்த வலியைவிட, அதைப் புரிந்துகொள்ளாத உறவினர் களின் அலட்சியம், சம்பந்தப்பட்ட பெண்களை அதிக வேதனைக்குள்ளாக்கும்.

மானசாவுக்கு 40 வயது. தினமும் காலை 5 மணிக்கு விடியும் அவளது பொழுது இரவு 10 மணி வரை ஓய்வின்றி பரபரப்பாக நகரும்.

நித்யா மனோஜ்
நித்யா மனோஜ்

‘வேலைக்கும் போறே... விதம் விதமா சமைக்கிறே... வீட்டையும் நல்லா பார்த்துக்கறே... உன்னால மட்டும் எப்படித்தான் முடியுதோ....’ - மானசாவை பார்க்கிற யாரும் இப்படிக் கேட்கத் தவறியதில்லை. அடுத்தவர்கள் கண்கள் படும்படி ஓடிக்கொண்டிருந்த மானசா, திடீரென சுணக்கமானாள். அடிக்கடி கை கால்களில் வலிப்பதாகச் சொன்னாள். 40 ப்ளஸ்ஸில் வரும் பலவீனமாக இருக்கும் என்று மருத்துவரைப் பார்த்து கால்சியம், மல்ட்டி வைட்டமின் சப்ளிமென்ட்டுகள் சாப்பிட்டாள். நாளாக ஆக அவளது சுறுசுறுப்பு குறைய ஆரம்பித்தது. வழக்கமான வேலைகளைச் செய்யவே சிரமப்பட்டாள். எப்போதும் களைப்பாகக் காணப் பட்டாள். மகளிர்நல மருத்துவர், எலும்பு மருத்துவர், நரம்பு மருத்துவர் என எல்லோரையும் பார்த்து, எல்லா டெஸ்ட்டுகளையும் எடுத்துவிட்டாள். ‘உங்களுக்கு உடம்புல ஒரு பிரச்னையும் இல்லை. எதுக்கும் சைக்யாட் ரிஸ்ட்டை ஒருமுறை பார்த்துடுங்க’ என்றார்கள். ‘’எனக்கெதுக்கு சைக்யாட் ரிஸ்ட் எல்லாம்’ என்பது மானசாவின் வாதம். ‘அத்தனை டாக்டர்ஸும் உடம்புல ஒரு பிரச்னையும் இல்லைங்கிறாங்க... சைக்யாட்ரிஸ்ட்டும் வேணாங்குறே... அப்போ என்னதான் உனக்குப் பிரச்னை... வேலை செய்யாம இருக்கிறதுக்காக எப்பப் பார்த் தாலும் வலின்னு சொல்றியா’ என கிண்டலாகவும் கோபமாகவும் கேட்டார்கள் வீட்டிலிருப்போர்.

கடவுளுக்கு மட்டுமே தெரிந்த காரணம்... இப்படியும் ஒரு பிரச்னையா?

‘இத்தனை வருஷங்கள் இந்த வீட்டுக்காக உழைச்சதெல்லாம் மறந்துடுச்சா.... யாராவது சும்மாவாவது இங்கே வலிக்குது, அங்கே வலிக்குதுன்னு சொல்வாங்களா... எனக்கென்ன பைத்தியமா?’ என்று கத்திய மானசாவை, கஷ்டப்பட்டு கன்வின்ஸ் செய்து, கடைசி முயற்சியாக தனக்குத் தெரிந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள் அவளின் தோழி பவித்ரா. அந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வலிகளுக்கு சிகிச்சையளிக்கும் மற்றொரு மருத்துவரைச் சந்தித்தாள்.

‘`பார்க்காத டாக்டர் இல்லை. எடுக்காத டெஸ்ட் இல்லை. எனக்கு என்னதான் பிரச்னைன்னு அந்தக் கடவுள்தான் வந்து சொல்லணும் போல’ என்ற மானசாவுக்கு, அந்த மருத்துவர் ‘நிஜமாவே உங்களுக்கு வந்திருக்கிறது ‘காட் ஒன்லி நோஸ் சிண்ட்ரோம்தான்’. அதாவது ஃபைப்ரோமயால்ஜியானு ஒரு பிரச்னை. அதை நகைச்சுவையா ‘காட் ஒன்லி நோஸ் சிண்ட்ரோம்’னு சொல்றதுண்டு’’ என்றார். அதன் பிறகு மானசாவுக்கான பரி சோதனைகள், சிகிச்சைகள் ஆரம்பமாகின. சில மாதங்களில் மானசாவும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினாள்.

கடவுளுக்கு மட்டுமே தெரிந்த காரணம்... இப்படியும் ஒரு பிரச்னையா?

ஃபைப்ரோமயால்ஜியா என்பது எப்படிப்பட்ட பிரச்னை... அது யாரைத் தாக்கும்... அதை எப்படிக் கண்டுபிடிப்பது, என்ன சிகிச்சைகள்... எல்லாவற்றையும் விளக்குகிறார் சேலத்தைச் சேர்ந்த புனர் வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

‘`30 முதல் 55 வயதிலுள்ள பெரும்பாலான பெண்களும் அரிதாகச் சில ஆண்களும் உடல் வலி, உற்சாகமின்மை, அசதி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இவற்றுக்கு மூட்டுவலி, நரம்புத்தளர்ச்சி, அழற்சி, மன அழுத்தம் போன்ற காரணங்களைத் தாண்டிய இன்னொரு காரணம்தான் ‘ஃபைப்ரோமயால்ஜியா’. தசைநார் அழற்சி வலி எனப்படும் இப்பிரச்னையால் ஒவ்வொரு நாட்டிலும் 4 முதல் 5 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களில் 90 சதவிகிதம் பேர் பெண்கள்.

இவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் என எல்லாமே நார்மலாக இருக்கும். ஆனால் வலி மட்டும் தொடரும். அதனால் இது பலராலும் பெரும்பாலும் மனநோயாகவே பார்க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும் அறிகுறிகளை வைத்துதான் உறுதிசெய்ய வேண்டும். வலியின் ஆரம்பத்தில் பலரும் தாமாகவே வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி உபயோகிப்பார்கள். வலி குறையாத போது, மருத்துவரைப் பார்ப்பார்கள். மருத்துவர் பரிந்துரைக்கிற மருந்துகளும் பலன் தராதபோது, வேறு வேறு மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். வலி ஒருபக்கமும், வலி குறையவில்லையே என்ற மன அழுத்தம் இன்னொரு பக்கமுமாக அவதிப்படுவார்கள்.

கடவுளுக்கு மட்டுமே தெரிந்த காரணம்... இப்படியும் ஒரு பிரச்னையா?

நவீன வலி நிர்வாக மருத்துவத்துறையில் இதற்கான தீர்வு கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய பரிசோதனை கேள்வித்தாள் ஒன்று வழங்கப்படும். அதில் அவர்கள் தங்களின் வலிகளையும் அறிகுறிகளையும் எழுது வார்கள். அவர்கள் தந்திருக்கும் பதிலை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்வார்கள். அதன் முடிவில்தான், அந்தப் பிரச்னையின் பின்னணியில் அவர்களது மூளை செல்களின் வலி தாங்கும் சக்திக்கான ஒரு பகுதியில் செயலிழப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பது கண்டறியப்படும். அது மன நோயா இல்லையா என்பதும் உறுதி செய்யப்படும்.

ஃபைப்ரோமயால்ஜியாவுக்கான சிகிச்சை பன்முகப்பட்டது. பாதிக்கப்பட்ட நரம்புகளின் வலிதாங்கும் தன்மையை அதிகரிக்க மருந்துகள், தூக்கம் சீராகி, புத்துணர்ச்சி திரும்ப மருந்துகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்கள், உடற்பயிற்சிகள் போன்றவை ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல வடிவமைக்கப்படும். மூன்று வார தீவிர சிகிச்சையும், அதன் பிறகான தொடர் சிகிச்சையும் இந்த எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுதலை அளிக்கும்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு