Published:Updated:

`பெண்ணுடல் புனிதமும் அல்ல... கேவலமும் அல்ல!' - மனநல மருத்துவர்

தற்கொலை செய்துகொண்ட வேலூர் சிறுமிக்கு, தனக்கு நடந்த அநீதியை வெளியில் சொல்லி, நியாயம் கேட்கக்கூட சரியான வாய்ப்பும், நம்பிக்கையும் வழங்கப்படவில்லை என்பதே உண்மை.

வேலூர் பாகாயத்தை அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் மேலும் அதிர்ச்சிகரம்.

தற்கொலை செய்து கொண்ட வேலூர் சிறுமி
தற்கொலை செய்து கொண்ட வேலூர் சிறுமி

இந்தச் சிறுமி, தன் வீட்டின் பின்புறம் உள்ள திறந்தவெளிக் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை மாணவியிடமே காண்பித்து ஆசைக்கு இணங்கச் சொல்லியும், பணம் கேட்டும் வற்புறுத்தியுள்ளனர். சம்மதிக்கவில்லை என்றால் அந்த வீடியோவை சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டுவிடுவோம் என்று கூறி மிரட்டியும் உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, தனக்கு நடந்த வன்கொடுமையை வெளியே சொல்லமுடியாமல் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இது, தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அவரைத் தூண்டியுள்ளது. உடலில் 90% தீக்காயங்களுடன் சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தற்போது அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 3 பேர்
கைது செய்யப்பட்ட 3 பேர்

வாரத்திற்கு ஒன்றிரண்டு இதுபோன்ற சம்பவங்களை கேள்விப்பட்டுக்கொண்டுதானிருக்கிறோம். பெண்களை அவர்களுக்கே தெரியாமல் யாரேனும் தவறாக வீடியோ எடுத்தாலோ அல்லது பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாலோ இந்தச் சமூகம் அந்தப் பெண்களைப் பார்க்கும் பார்வையே வேறு.

`பழிவாங்குறதுக்காகத்தான் எடுத்தோம்!’-3 இளைஞர்களால் விபரீத முடிவெடுத்த வேலூர் மாணவி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கள் மீது தவறே இல்லை என்றாலும் பல இடங்களில் பெண்கள் பலிகடா ஆகிறார்கள். வெளிப்படையாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்படவில்லை என்றாலும் மறைமுகமாகத் திணிக்கப்படும் அழுத்தத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி, இனி வாழ்வதற்கு பதில் தற்கொலையே மேல் என்று முடிவெடுத்துவிடுகிறார்கள். இதற்கு ஓர் எடுத்துக்காட்டுதான் வேலூர் சிறுமி.

Sexual Abuse
Sexual Abuse

பெண்களின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்து, அவர்களை எமோஷனல் பிளாக் மெயில் செய்வோர்களின் மனநிலை குறித்தும், இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பெண்கள் எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும் மனநல மருத்துவர் அபிராமியிடம் பேசினோம்.

தங்களுக்கு ஏதாவது பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலோ அல்லது யாராவது எமோஷனல் பிளாக் மெயில் செய்தாலோ, அவற்றைப் பெற்றோர்களிடம் சொல்லும் அளவுக்கு பெண் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும்.
மனநல மருத்துவர் அபிராமி

"பெண்கள் குளிப்பதையோ அல்லது உடை மாற்றுவதையோ அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து அவர்களை எமோஷனலாக பிளாக் மெயில் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதானிருக்கின்றன. 'ஒரு பெண்ணை உடலில் ஆடையில்லாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டால், அதை வைத்தே அவளை மிரட்டி அவள் மூலம் என்ன வேண்டுமானாலும் சாதித்துக்கொள்ளலாம்' என்ற மனநிலை ஆண்களிடையே காலங்காலமாக இருந்துவருகிறது. காரணம், நம் சமூகச் சூழல்.

மனநல மருத்துவர் அபிராமி
மனநல மருத்துவர் அபிராமி

நம் நாட்டில் பெண் குழந்தைகள் சிறு வயது முதற்கொண்டு என்ன மனநிலையில் வளர்க்கப்படுகிறார்கள்? 'உன் உடலின் அந்தரங்க உறுப்புகளை யாரும் பார்க்கக்கூடாது. அவை யார் கண்களுக்கும் தெரியாததுபோல் முழுவதுமாக மறைத்துதான் நீ உடை உடுத்த வேண்டும். நீ உன் கணவனுக்கானவள். அவனைத் தவிர வேறு யாராவது உன்னை உனக்கே தெரியாமல் தவறாகப் பார்த்துவிட்டால்கூட உன் கற்பு, மானம் எல்லாம் போய்விடும். அதன் பிறகு இந்தச் சமூகத்தில் உனக்கு மரியாதை இருக்காது. உனக்குத் திருமணமும் நடக்காது!' என்ற கருத்தை தெரிந்தோ, தெரியாமலோ அவர்களின் மனதிற்குள் திணித்துவருகிறோம்.

திரைப்படங்களில்கூட, ஒரு பெண்ணை ஒருவன் ஆடையில்லாமல் பார்த்துவிட்டால், அவன்தான் அவளைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை கொடுக்க வேண்டும். அவன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும் அந்தப் பெண் அவனோடுதான் வாழ வேண்டும். வேறு யாரும் அவளைத் திருமணம் செய்ய மாட்டார்கள். அவளுக்கான மரியாதையும் இனி கிடைக்காது என்பதுபோன்ற காட்சிகள் சித்திரிக்கப்படுகின்றன.

sexual harassment
sexual harassment
தொடரும் ஆன்லைன் வகுப்புகள்... பாதிப்படையும் குழந்தைகளின் கண்கள்! - பிரச்னைகளும் தீர்வுகளும்

இதன் காரணமாகவே, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களில் பெரும்பாலானோர், தனக்கு நடந்த கொடுமைக்கு எதிராகப் போராடுவதற்குப் பதில், தற்கொலையே மேல் என்று நினைத்துவிடுகிறார்கள். தற்கொலை செய்துகொண்ட வேலூர் சிறுமி விஷயத்திலும் இந்த நிலைதான் ஏற்பட்டுள்ளது. தனக்கு நடந்த அநீதியை வெளியில் சொல்லி, நியாயம் கேட்கக்கூட அந்தச் சிறுமிக்கு சரியான வாய்ப்பும், நம்பிக்கையும் வழங்கப்படவில்லை என்பதே உண்மை.

'தான் குளிக்கும் வீடியோவை எல்லாரும் பார்த்துவிட்டால் பெற்றோர்கள், உறவினர்கள் என்ன நினைப்பார்கள்... சக மாணவர்கள், தோழிகள் தன்னை ஏற்றுக்கொள்வார்களா...' போன்ற கேள்விகள் நிறைந்த எண்ணங்களால் ஏற்பட்டிருக்கும் ஒருவித மன உளைச்சலே அச்சிறுமியைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியிருக்கும்.

Sexual Harassment
Sexual Harassment

இதுபோல் எத்தனையோ பெண்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை வெளியில் கூற முடியாமல் மனஅழுத்தத்தில் சிக்கித் தவித்துவருகிறார்கள். இந்த மனஅழுத்தமே அவர்களைத் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்குத் தள்ளுகிறது.

தீர்வு என்ன?

parenting
parenting

தங்களுக்கு ஏதாவது பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலோ அல்லது யாரவது எமோஷனல் பிளாக் மெயில் செய்தாலோ அவற்றைப் பெற்றோர்களிடம் சொல்லும் அளவுக்குப் பெண் குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும்.

தங்களிடம் எந்த விஷயத்தைப் பற்றியும் மனம் விட்டுப் பேசும் அளவிற்கான வாய்ப்பை குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் தரவேண்டும். அதற்கு, முதலில் பெற்றோர்கள் இந்தப் பிரச்னைகளைப் பக்குவமாக அணுகக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

சுஷாந்த் தற்கொலை... கரண் ஜோஹர், நெப்போட்டிஸம், ஸ்டார் வார்ஸ்தான் காரணிகளா?

பெற்றோர்களும், ஆசிரியர்களும் தற்போது வளர்ந்துவரும் இருபாலின குழந்தைகளிடமும் பாலியல் கல்வி குறித்த விளக்கத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளுக்குப் பாலியல் கல்வி சரியான முறையில் எடுக்கப்பட வேண்டும்.

தங்களுக்கு ஏதாவது வன்கொடுமைகள் நடந்து, அவற்றைக் குழந்தைகள் உங்களிடம் கூறினால், 'எல்லாரும் என்ன பேசுவாங்களோ... இனி அவ்ளோதான். இருக்குறதுக்கு செத்தே போயிடலாம்' என்பதுபோல் பேசி, அவர்களை மேலும் மன உளைச்சலுக்குக் கொண்டுசெல்லாமல், பிரச்னையைப் பற்றி யோசிக்காமல் பிரச்னைக்கான தீர்வு பற்றி யோசிக்க வேண்டும்.

Sex education
Sex education

முக்கியமாக, பெண்களின் அந்தரங்க உறுப்புகளை வெறும் உடல் உறுப்புகளாக மட்டுமே பார்க்கக்கூடிய மனநிலை ஏற்பட வேண்டும். அவற்றைப் புனிதப்படுத்தவும் வேண்டாம். கேவலப்படுத்தவும் வேண்டாம்.

ஒரு பெண்ணை அவளுக்கே தெரியாமல் ஆடையில்லாமல் யாராவது பார்த்துவிட்டால் அவள் கற்பு போய்விடும். மானம் போய்விடும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நம் மனநிலை மாற வேண்டும். இந்த மாற்றம் ஓர் இரவில் ஏற்பட்டுவிடாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இந்தப் பக்குவ மனநிலையை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்" என்கிறார் மனநல மருத்துவர் அபிராமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு