Published:Updated:

நாப்கின் உபயோகம்... ஏ டு இஸட்

நாப்கின்
பிரீமியம் ஸ்டோரி
நாப்கின்

#Health

நாப்கின் உபயோகம்... ஏ டு இஸட்

#Health

Published:Updated:
நாப்கின்
பிரீமியம் ஸ்டோரி
நாப்கின்

ரு பெண் சராசரியாகத் தன் வாழ்நாளில் 35 வருடங்கள் மாதந்தோறும் மாதவிடாயைச் சந்திக்கிறாள். அத்தனை வருடங்களிலும் அவள் உபயோகிக்கும் நாப்கின்களின் தோராய எண்ணிக்கை 16 ஆயிரம். 1970களின் இறுதியில் இந்தியாவுக்கு அறிமுகமானவை நாப்கின்கள். அதுவரை துணிகளுக்கே பழகியிருந்த பெண்களுக்கு நாப்கின்களுக்கு மாறுவதில் சின்ன தயக்கம் இருந்தது. 2015-16ல் எடுக்கப்பட்ட தேசிய குடும்பநல சர்வேயின் படி, 77 சதவிகித நகர்ப்புற பெண்களும் 47 சதவிகித கிராமத்துப் பெண்களும் துணியிலிருந்து சானிட்டரி நாப்கினுக்கு மாறியிருப்பது தெரிகிறது. மாதவிடாய் கால அவதிகளுக்கு விடுதலை அளிப்பதாக, சுகாதாரமானதாக, உபயோகிக்க எளிதானதாக, நோய்களிலிருந்து காப்பதாக... இப்படிப்பட்ட உத்தரவாதங்களுடன் மெள்ள மெள்ள பெண்களின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக இடம்பிடித்தன நாப்கின்கள்.


பல வருட உபயோகத்துக்குப் பிறகு நாப்கின்களாலும் பிரச்னைகள் ஏற்படுவதாகப் புகார்கள் எழத் தொடங்கின. சாதாரண அலர்ஜியில் தொடங்கி, புற்றுநோய்வரை பல பிரச்னைகள் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.


இளவயதில் பூப்பெய்தும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மாதவிடாய் சுகாதாரத்தோடு சேர்த்து நாப்கின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வையும் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.


நாப்கின் உபயோகம் குறித்த ஏ டு இஸட் தகவல்களைப் பகிர்கிறார்கள் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சுமித்ரா சுந்தர் ராமனும், புற்றுநோய் கதிர்வீச்சு மற்றும் நோய்த் தடுப்பு மருத்துவர் கலாவதி குருசாமியும்.

நாப்கின் உபயோகம்... ஏ டு இஸட்

நாப்கின் உபயோகிக்க வயது வரம்பு உண்டா?

சானிட்டரி நாப்கின் உபயோகிக்க வயது வரம்பு இல்லை. ஆனால் வயது மற்றும் ரத்தப்போக்கின் அளவுக்கேற்ப நாப்கினின் சைஸ் வேறுபடும். பூப்பெய்திய புதிதில் பெண்களுக்கு ரத்தப்போக்கு குறைவாக இருக்கும் என்பதால் அதற்கேற்ற சைஸை தேர்வுசெய்யவும்.

மகள், பருவ வயதில் இருக்கிறாள் என்று தெரிந்தால், அவளுக்கு சானிட்டரி நாப்கின் உபயோகிக்கும் முறை பற்றி கற்றுக்கொடுக்க வேண்டியது ஒவ்வோர் அம்மாவின் பொறுப்பு. அதை எப்படி உபயோகிப்பது, நகராமல் பார்த்துக்கொள்வது, எப்படி டிஸ்போஸ் செய்வது போன்ற விஷயங்களை அவசியம் கற்றுத் தர வேண்டும். இன்னும் சொல்லப்போனால் முதல் இரண்டு பீரியட்ஸின்போதும் குழந்தைகளை விடுப்பு எடுக்கச் சொல்லிவிட்டு, அவர்கள் அந்த நாள்களில் சரியாக நாப்கின் பயன்படுத்துகிறார்களா என்று பார்ப்பது நல்லது. அம்மா இல்லாத பட்சத்தில் வீட்டிலோ, விடுதியிலோ பொறுப்பான பெண் இதைக் கற்றுத் தர வேண்டும்.

நாள் முழுக்க ஒரே நாப்கின் வேண்டாமே...

ஒவ்வொரு 4 மணி நேரத்துக்கொரு முறை நாப்கினை மாற்ற வேண்டும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு அவர்களை அறியாமல் நாப்கினை மீறி உடைகளில் கறை படியலாம். நகர்ந்துபோய் அசௌகர்யத்தை ஏற்படுத்தலாம். இதையெல்லாம் அவர்களுக்கு எடுத்துச் சொல்லி, குறிப்பிட்ட நேரத்துக்கொரு முறை நாப்கினை மாற்ற அம்மாக்கள் கற்றுத் தர வேண்டும்.
நாப்கின் முழுவதும் நனைந்த பிறகுதான் அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் தவறானது. உபயோகிக்கும் நேரம்தான் இங்கே முக்கியம். 4-5 மணி நேரத்துக்கொரு முறை அது நனைந்தாலும் இல்லாவிட்டாலும் மாற்றி விட வேண்டும். பல மணி நேரம் ஒரே நாப்கினை உபயோகிக்கும்போது பல பிரச்னைகள் வரும். பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு பிரேக்கின்போதும் இதைப் பின்பற்றச் சொல்லலாம். மிக முக்கியமாக இரவு தூங்கப் போகும்போது ஃப்ரெஷ்ஷான நாப்கினை மாற்ற வேண்டும். இது எல்லாப் பெண்களுக்குமான அட்வைஸ்.

நாப்கின் உபயோகம்... ஏ டு இஸட்

நாப்கின் அலர்ஜி... அலர்ட்


அளவுக்கதிக அரிப்பு, அந்தரங்க உறுப்பில் அதீத வறட்சி, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், தொடை மற்றும் அந்தரங்க உறுப்புகளைச் சுற்றி வியர்க்குரு போன்ற சிவந்த தடிப்புகள், சிலருக்கு கொப்புளங்கள், சருமம் வழண்டு, உரிந்து போவது, அதன் தொடர்ச்சியாக அங்கே ரத்தக் கசிவு.... இவையெல்லாம் நாப்கின் அலர்ஜிக்கான அறிகுறிகள்.நாப்கின்கள் பெரும்பாலும் மரக்கூழால் தயாரிக்கப்படுகின்றன. அந்தக் கூழை பஞ்சுபோன்ற பதத்துக்குக் கொண்டு வந்து, ப்ளீச் செய்து, மேலே லேயர்கள் பொருத்திதான் விற்பனைக்கு வருகின்றன. இப்படிப் பயன்படுத்தப்படும் பொருள்களால் ஒருவருக்கு அலர்ஜி வரலாம்.பல மணி நேரம் ஒரே நாப்கினை உபயோகிப்பதாலும் அலர்ஜி வரலாம்.உடலுக்குள் ஏதோ தொற்று இருந்தாலும் அலர்ஜியை ஏற்படுத்தலாம்.

அலர்ஜி இருந்தால் நாப்கின் உபயோகிக்கலாமா?


அலர்ஜி இருப்பவர்கள் நாப்கின் உபயோகிக்கவே கூடாது என்று அர்த்தமில்லை. அலர்ஜிக்கு காரணமான நாப்கினை தவிர்த்துவிட்டு டிஸ்போசபிள் காட்டன் நாப்கின் மாதிரியான மாற்று பற்றி யோசிக்கலாம். துணி நாப்கின்களை உபயோகிப்பவர்கள் அதை முறையாக அலசி, வெயிலில் காயவைத்து உபயோகிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

 மென்ஸ்ட்ருவல் கப்
மென்ஸ்ட்ருவல் கப்

நார்மலா... அப்நார்மலா?


சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஒரு மாதவிலக்கு சுழற்சி மொத்தத்துக்கும் சேர்த்து 35 முதல் 50 மி.லி இருக்கலாம். 80 மி.லியை விட அதிகமானால் அதை 'ஹெவி ப்ளீடிங்' என்போம். அப்படி இருந்தால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம். அதைத் தவிர்த்து எக்ஸ்ட்ரா லார்ஜ் நாப்கின் உபயோகிக்கச் சொல்வதோ, அடல்ட் டயாப்பர் உபயோகிக்கச் சொல்வதோ சரியல்ல. ரத்தப் போக்கு அதிகரிப்பதற்கான காரணத்தை முதலில் கண்டறிய வேண்டும்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

ஒரு நாப்கின் முழுவதும் நனைந்துவிட்டது என்றால் அது 5 மி.லி அளவு ரத்தப்போக்காக இருக்கும். அதைவைத்து மொத்த மாதவிடாய் நாள்களிலும் எத்தனை நாப்கின்கள் மாற்றுகிறீர்கள் என்று கணக்கிட்டு நார்மலா, ஹெவி ப்ளீடிங்கா என்று கணக்கிடலாம். அதேபோல ரத்தம் கட்டிகளாக வெளியேறினலும் அது ஹெவி ப்ளீடிங்தான். அதை அலட்சியப்படுத்தக்கூடாது.

டாம்பூன்
டாம்பூன்

வாசனையும் விங்ஸும்...


சிலர் மாதவிடாயின் போது ஏற்படும் நாற்றத்திலிருந்து விடுபட, வாசனை சேர்த்த நாப்கின்களை உபயோகிப்பதுண்டு. ஆனால் அலர்ஜியை ஏற்படுத்தலாம் என்பதால் அதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானது. பக்கவாட்டில் பரந்து விரிந்த விங்ஸ் வைத்த நாப்கின்களை உபயோகிக்கும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். அந்த விங்ஸ் பகுதி தொடைகளை உரசி, ஒருவித அசௌகர்யத்தை ஏற்படுத்தலாம். அது தேவையா இல்லையா என்பது அவரவர் வசதியைப் பொறுத்தது.

நாப்கின் வாங்கும்போது....

உங்களுக்கேற்ற சைஸ் எது? டீன் ஏஜில் இருப்போருக்கு, மெனோபாஸில் இருப்பவர்களுக்கு, அதிக ப்ளீடிங் இருப்போருக்கு என ஒவ்வொருவரின் வயது மற்றும் தேவைக்கேற்ற நாப்கின் சைஸை தேர்வுசெய்ய வேண்டும். உங்களுக்கேற்ற சரியான நாப்கின் எது என்பதை வேறு வேறு நாப்கின்களை உபயோகித்துப் பார்த்து முடிவுக்கு வரலாம். தவறில்லை.

பேன்ட்டி லைனர்ஸ் தேவையா?


தேவையில்லை. ஏற்கெனவே மூன்று முதல் ஐந்து நாள்கள் பீரியட்ஸின் போது நாப்கின் உபயோகிக்க வேண்டியிருக்கிறது. பேன்ட்டி லைனர் என்பது மாதம் முழுக்க உபயோகிக்க வேண்டியது. எல்லோருக்கும் அது தேவையுமில்லை. அசாதாரணமான வெள்ளைப்போக்கோ அல்லது திரவக் கசிவோ இருப்பவர்கள் இதை உபயோகிப்பதுண்டு. ஆனால் அப்படி இருந்தால் அதற்குத் தீர்வு பேன்ட்டி லைனர் உபயோகிப்பதல்ல. மருத்துவரைப் பார்ப்பது. அதற்கு ஏதாவது காரணமிருக்கிறதா, தொற்று உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

ஸ்மெல் ஏன்?


பீரியட்ஸின்போது நீங்கள் உணரும் துர்நாற்றம், உங்கள் உடலிலிருந்து வெளியேறும் ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினால் ஏற்படுவதுதான். அதைத் தாண்டி சகித்துக்கொள்ள முடியாத நாற்றம் வருகிறது என்றால் தாமதிக்காமல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

நாப்கினா, டாம்பூனா, கப்பா...?

மாதவிலக்கின் போது உபயோகிக்க நாப்கின், டாம்பூன், மென்ஸ்ட்ருவல் கப் என எத்தனையோ உள்ளன. யாருக்கு, எது என்ற கேள்வி எப்போதும் உண்டு. எல்லா வயதுப் பெண்களுக்கும் ஏற்றது நாப்கின். மேலே குறிப்பிட்ட அத்தனை விஷயங்களையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திருமணமாகாத பெண்களுக்கு நாப்கின்தான் சிறந்தது. பிறப்புறுப்பினுள் சொருகிக்கொள்ளும் டாம்பூனை உபயோகிக்க வேண்டாம். அது அவர்களுக்குப் பிற்காலத்தில் வேறு பிரச்னைகளைத் தரக்கூடும் என்பதே காரணம்.
வெளிநாடுகளில் டாம்பூன்களை இளவயதுப் பெண்களும் உபயோகிக்கிறார்கள். ஆனால் நம்மூரில் வயதானவர்களுக்கு மட்டுமே அவை பரிந்துரைக்கப்படுகின்றன. நாப்கினை நீண்ட நேரம் வைத்திருப்பதால் ஏற்படும் தொற்றைவிட டாம்பூன் உபயோகத்தில் அது அதிகம்.குறிப்பிட்ட மணிநேரத்துக்கு மேல் அதை உபயோகித்தால் ''டாக்சிக் ஷாக் சிண்ட்ரோம்' என்ற பிரச்னை வரலாம். அவசரநிலையாகக் கருதி சிகிச்சையளிக்கப்பட வேண்டிய அளவுக்கு உயிருக்கே ஆபத்தான பிரச்னை இது.
சமீப வருடங்களில் அதிகம் பேசப்படுவது மென்ஸ்ட்ருவல் கப். சுற்றுச்சூழலுக்கு உகந்தது. ஐந்து வருடங்கள்வரை ஒரே கப்பை உபயோகிக்கலாம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனாலும் இளவயதுப் பெண்களுக்கு அது சரியானதல்ல. அளவும் சரியாகப் பொருந்தும் முறையும் இதில் மிக முக்கியம். இந்த இரண்டும் சரியில்லை என்றால் ரத்தப்போக்கு ஏற்பட்டு, தர்மசங்கடத்தை ஏற்படுத்தலாம். மென்ஸ்ட்ருவல் கப்தான் உபயோகிப்பேன் என உறுதியாக இருப்பவர்கள், மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து அதைப் பயன்படுத்தும் முறையைத் தெரிந்துகொண்டு உபயோகிக்கலாம். நாப்கினை போலவே மென்ஸ்ட்ருவல் கப்பையும் குறிப்பிட்ட இடைவேளைகளில் சுத்தம் செய்ய வேண்டும்.


மென்ஸ்ட்ருவல் ஹைஜீனும் முக்கியம்


மாதவிடாயின் போது தினமும் இருவேளைகள் குளிக்கவும்.
கை கழுவுதலின் அவசியத்தை கொரோனா காலம் எல்லோருக்கும் கற்றுத் தந்திருக்கிறது. மாதவிடாய் காலத்தில் அதில் இன்னும் அதிக கவனம் செலுத்துங்கள். நாப்கின் உபயோகிப்பதற்கு முன்பும் உபயோகித்த பிறகும் கைகளை சோப் போட்டு நன்கு கழுவுங்கள்.

பிறப்புறுப்பை வெறும் தண்ணீரால் சுத்தப்படுத்திவிட்டு நாப்கின் மாற்றுங்கள். சோப் போட வேண்டாம். குளிக்கும்போது மட்டும்தான் பிறப்புறுப்புக்கு சோப் உபயோகிக்க வேண்டும். ஒவ்வொரு முறை சோப் உபயோகித்துக் கழுவினால் அலர்ஜி வரலாம்.

தண்ணீர் இல்லாத இடங்களில் நாப்கின் மாற்ற வேண்டியிருந்தால் டிஷ்யூ உபயோகித்துவிட்டு, அதை முறையாக அப்புறப்படுத்தத் தவறாதீர்கள்.

அதிக அலைச்சலைத் தவிர்க்கவும்.


நிறைய திரவ உணவுகள், பழங்கள் எடுத்துக்கொள்ளவும். இது உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் காக்கும். மாதவிடாயின்போது உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் எளிதில் தொற்றுகள் ஏற்படலாம். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தொற்று வரலாம். குறிப்பாக சிறுநீர்ப்பாதை தொற்று வரலாம்.
4-6 மணி நேரத்துக்கொரு முறை நாப்கினை மாற்ற வேண்டும். நாப்கின் உபயோகிப்பதற்கு முன்னரும் பிறகும் கைகளைக் கழுவ வேண்டும்.
எளிதில் செரிமானமாகும் உணவுகளைச் சாப்பிடவும். மாதவிடாய் நாள்களில் நீங்கள் மலையையை புரட்டலாம் என்ற மாதிரியெல்லாம் நிறைய விளம்பரங்கள் வருகின்றன. ஆனால் அந்த நாள்களில் உடலுக்கு ஓய்வு தேவை. கடினமல்லாத எளிய உடற்பயிற்சிகள் போதும்.


ஆனியான் ஆபத்து


னியான் (Anion) பேட்ஸ் பற்றி இப்போது நிறைய விளம்பரப்படுத்துகிறார்கள். பாக்டீரியல் இன்ஃபெக்ஷன் இருக்காது, அரிப்போ, துர்நாற்றமோ இருக்காது என்றெல்லாம் சொல்லி விளம்பரப்படுத்துகிறார்கள். இந்த வகை நாப்கின்களிலுள்ள கதிர்வீச்சு, கெட்ட கிருமிகளை அழித்துவிடும் என்கிறார்கள். அது மட்டுமா? அந்தக் கதிர்வீச்சானது, நல்ல பாக்டீரியாவையும் சேர்த்து அழித்துவிடும். கதிர்வீச்சு என்பது ஆபத்தானது. பலமணி நேரம், தொடர்ந்து பல நாள்கள் இவ்வகை நாப்கின்களை உபயோகிப்பதால் பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படலாம். தொடர்ச்சியான உபயோகத்தால் பிற்காலத்தில் புற்றுநோய் தாக்கும் அபாயமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ரத்தப் போக்கின் அளவு குறையும், கர்ப்பப்பை ஆரோக்கியம் பாதிக்கப்படும். ரத்தப்போக்கின் அளவு குறையும், கர்ப்பப்பயைன் அகப்பை படலத்தின் செல்களின் லைனிங் பாதிக்கப்பட்டு, குழந்தையின்மை பிரச்னையும் வரலாம். இப்படி ஏற்படுகிற குழந்தையின்மை பிரச்னையை சரிசெய்வது ரொம்பவே சிக்கலானதும்கூட. ஆனியான் நாப்கின்களால் இளவயதிலேயே மெனோபாஸும் வரலாம் என்கிறார்கள். இது எதுவும் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மிகமிக மென்மையான உணர்வைத் தருவதால் இவ்வகை நாப்கின்களை உபயோகிப்பதாகப் பல பெண்கள் சொல்கிறார்கள். அவர்கள் அனைவரும் மேற்சொன்ன விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். மொத்தமாக ஆனியான் பேடுகளை வாங்கிவைத்துவிட்டேனே, வாங்கியவற்றை என்ன செய்வது என்று கேட்பவர்களுக்கு ஒரு விஷயம்.... அந்த நாப்கினின் நடுவில் லேசாகக் கீறி, உள்ளே உள்ள ஸ்ட்ரிப்பை எடுத்து அப்புறப்படுத்திவிட்டு, நாப்கினை உபயோகிக்கலாம்.

டிஸ்போஸ் செய்வதில் கவனம்

நாப்கின் உபயோகிப்பதைவிடவும் முக்கியமானது அதை அப்புறப்படுத்துவது. உபயோகித்த நாப்கினை கண்ட இடங்களில் வீசிவிட்டு வருவது மிகப்பெரிய தவறு. யாருக்கும் தெரியக்கூடாதென அதை டாய்லெட்டில் போட்டு ஃபிளஷ் செய்வது, குப்பைத் தொட்டிக்கு அருகில் வீசுவதெல்லாம் கூடாது. அவற்றை அப்புறப்படுத்தும் துப்புரவுத் தொழிலாளர்களையும் நினைத்துப் பார்த்தால் இப்படியெல்லாம் வீசத் தோன்றாது.

தனிமைப்படுத்துதல் தேவையில்லை!

அந்தக் காலத்தில் மாதவிலக்கான பெண்களை மூன்று நாள்களுக்கு வீட்டின் ஓரத்தில் ஒதுங்கவைக்கும் பழக்கம் இருந்தது. இன்றும் கிராமங்களில் வெகுசில இடங்களில் அந்தப் பழக்கம் தொடர்கிறது. அந்த மூன்று நாள்களிலும் அவர்களுக்கு வழக்கமான வேலைகளில் இருந்து முழுமையான ஓய்வு கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் அந்தப் பழக்கம். ஓய்வின்றி ஓடத் தயாரான பெண்களுக்கு காலப்போக்கில் அந்த மூன்று நாள்கள் அவசியப்படவில்லை. ஆனாலும், அந்த நாள்களில் உடல் மற்றும் மனத்தளவில் சோர்வாக இருப்பார்கள் என்பதால் வீட்டிலுள்ள மற்றவர்கள் அவர்களுக்கு ஓய்வு கொடுத்து அவர்களின் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளலாம்... ஓரத்தில் உட்கார வைக்காமலேயே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism