Published:Updated:

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: எந்த டயட் நல்ல டயட்? எனக்கேற்ற டயட் எது?

எடைக்குறைப்பு ஏ டு இஸட்

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: எந்த டயட் நல்ல டயட்? எனக்கேற்ற டயட் எது?

டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்

Published:Updated:
எடைக்குறைப்பு ஏ டு இஸட்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பேலியோ டயட் மோகம் மக்களைப் பாடாகப் படுத்திக்கொண்டிருந்தது. இது ‘கீட்டோ டயட்’ சீஸன்!

‘கீட்டோவில் இருக்கேன்’ என்று சொல்லிக்கொள்வது கிட்டத்தட்ட ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டாகவே மாறியிருக்கிறது. இது எத்தனை நாள்களுக்கோ தெரியாது. அடுத்த சில மாதங்களில் வேறொரு டயட் பிரபலமாகலாம். இது காலங்காலமாகத் தொடர்வதுதான்.

‘எந்த டயட், நல்ல டயட்... எனக்கேற்ற டயட் எது?’ எனும் கேள்வி பலருக்கும் இருக்கும்.

பக்குவமாக வறுத்த பாதாமை ஒவ்வொன்றாக உள்ளே தள்ளிக்கொண்டிருக்கும் பக்கத்து கேபின் நண்பர், `பேலியோதான் பெஸ்ட்' என்பார்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: எந்த டயட் நல்ல டயட்? எனக்கேற்ற டயட் எது?

‘வீகனுக்கு மாறிடுங்க...’ என எள்ளுருண்டையை உங்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பார் இந்தப் பக்கத்து கேபின் தோழி.

பேலியோவா, வீகனா என நீங்கள் முடிவெடுப்பதற்குள் ‘கேபேஜ் சூப் டயட் ட்ரை பண்ணுங்களேன்... ஒரே வாரத்துல ரிசல்ட் தெரியும்’ எனக் கிளப்பி விடுவார் இன்னொரு நண்பர்.

எல்லாம் ‘ஃபேடு டயட்’டுகளின் (FAD Diets) விளையாட்டுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஃபேடு டயட்டா? அப்படியென்றால்?

ஒரு டயட், குறிப்பிட்ட ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும். அதிக சிரமமின்றி எளிய முறையில் எடையைக் குறைக்க உத்தரவாதம் தருவதாகச் சொல்லப்படும். குறிப்பிட்ட உணவுகளைத் தவிர்க்கச் சொல்லிக் கறாராக அறிவுறுத்தும். உடலுக்குத் தேவையான ஊட்டங்கள் கிடைக்காததன் விளைவாக பலவிதமான உடல்நல பாதிப்புகள் உண்டாகும். வருடத்துக்கு இப்படி ஒரு டயட் பரபரப்பாகப் பேசப்படுவதுண்டு. அவற்றில் சில, உணவு முறைகளில் மாற்றங்களைக்கொண்டவையாக இருக்கும். எதிலும் வித்தியாசத்தை விரும்புகிற மக்களுக்கு இப்படிப்பட்ட டயட் பிடித்துப்போவதுண்டு. என்னுடைய 20 வருட அனுபவத்தில் செளத் பீச் டயட், ஸோன் டயட், கேபேஜ் சூப் டயட், புரோட்டீன் பவர் டயட், பிளட் குரூப் டயட் என எத்தனையோ வகையான டயட் முறைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். இவற்றால் பலனடைந்ததாகச் சிலரும், தனக்குச் சரிவரவில்லை என்று சிலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: எந்த டயட் நல்ல டயட்? எனக்கேற்ற டயட் எது?

ஆரோக்கியமான டயட் என்பது வாழ்க்கை முறைக்கும் பட்ஜெட்டுக்கும் ஏற்ப டிசைன் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் நீங்கள் உங்கள் இலக்கை அடைய உதவுவதாகவும், பக்க விளைவுகளை ஏற்படுத்தாதவையாகவும், எதிர்கால உடல் நலனை பாதிக்காத வகையிலும் இருக்க வேண்டியதும் முக்கியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃபேடு டயட்டுகளை எப்படி அடையாளம் காண்பது?

 • விரைவில் பலன் தருவதாக உத்தரவாதம் தரும்.

 • மிகவும் நம்பகமானது என விளம்பரப்படுத்தப்படும்.

 • ஒரே ஓர் ஆய்வின் அடிப்படையில் டயட் ஆலோசனைகள் வழங்கப்படும்.

 • எடையைக் குறைப்பது மட்டுமே பிரதான நோக்கமாக இருக்கும்.

 • பழங்கள், காய்கறிகள், தானியங்கள், புரதம் மற்றும் பால் உணவுகள்... முக்கியமான இந்த ஐந்து உணவுகளில் ஒன்றையோ, ஒன்றுக்கு மேற்பட்ட உணவுகளையோ முற்றிலும் தவிர்க்கச்சொல்லி அறிவுறுத்தப்படும்.

ஃபேடு டயட் வகைகள் சில...

லோ கார்ப் ஹைஃபேட் டயட் Low Carb High Fat Diet (LCHFD)

இந்த டயட் முறையில் கார்போ ஹைட்ரேட்டின் அளவைக் குறைத்துவிட்டு ஆரோக்கியமான கொழுப்புகளை அதிகம் சேர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படும். கீட்டோஜெனிக் மற்றும் அட்கின்ஸ் இரண்டும் இந்த வகை டயட்டுக்கு உதாரணங்கள். பின்வரும் உணவுகளுக்கு இந்த டயட்டில் தாராளமாக அனுமதி வழங்கப்படும்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: எந்த டயட் நல்ல டயட்? எனக்கேற்ற டயட் எது?

பால் உணவுகள்

தயிர் சீஸ், க்ரீம், வெண்ணெய் அசைவ உணவுகள், மீன், முட்டை, காய்கறிகள், ஆலிவ் ஆயில் அல்லது கனோலா ஆயில், வீட்டிலேயே தயாரிக்கப்படுகிற சாஸ்.

இந்த டயட்டில் அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படும். அசைவ உணவுகளைச் சாப்பிடுவோருக்கு அவற்றிலுள்ள கொழுப்பை நீக்கச் சொல்வதற்கு பதில், கொழுப்புடன் எடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கிறது.

கீட்டோஜெனிக் டயட் (Ketogenic Diet)

வலிப்புநோய் உள்ள குழந்தைகளுக்கு அதை எந்த மருந்தாலும் குணப்படுத்த இயலாத நிலையில் மருத்துவர்கள் கீட்டோஜெனிக் டயட்டைப் பரிந்துரைக்கிறார்கள். இது கிளினிக்கல் டயட்டீஷியனால் கண்காணிக்கப்படும்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: எந்த டயட் நல்ல டயட்? எனக்கேற்ற டயட் எது?

கேட்ஜெட்டுக்கு அடிமையாகிப்போன இன்றைய வாழ்க்கை முறை, உடற்பயிற்சி இல்லாதது, இரவில் தாமதமாகத் தூங்கச் செல்வது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்வது போன்றவை இன்சுலின் ரெசிஸ்டன்ஸ், பிசிஓடி, டைப் 2 வகை நீரிழிவு, புற்றுநோய் மற்றும் தொற்றா நோய்கள் பலவற்றுக்கும் வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது. இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு மற்ற டயட் முறைகள் பலனளிக்காதபோது இந்தவகை எல்சிஹெச்எஃப் டயட் நல்ல மாற்றங்களைத் தந்திருக்கிறது. எல்சிஹெச்எஃப் டயட்டுக்கு கீட்டோஜெனிக் என்ற வார்த்தை பயன்படுத்தப் படுகிறது. கீட்டோ என்பது கொழுப்பை அடிப்படையாகக்கொண்ட கிளினிகல் டயட். இதில் வலிப்புநோயை குணமாக்க உணவே மருந்தாகப் பரிந்துரைக்கப்படும்.

கீட்டோஜெனிக் டயட் வகைகள்

1. ஸ்டாண்டர்டு கீட்டோஜெனிக் டயட் Standard Ketogenic Diet (SKD)

இதில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், புரதமும் கொழுப்பும் அதிகமாகவும் உள்ள உணவுகளைச் சாப்பிடப் பரிந்துரைக்கப்படும். அதாவது இந்த டயட்டில் தினசரி உணவில் 5 சதவிகிதம் கார்போஹைட்ரேட், 20 சதவிகிதம் புரதம், 75 சதவிகிதம் கொழுப்பு இருக்க வேண்டும்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: எந்த டயட் நல்ல டயட்? எனக்கேற்ற டயட் எது?

2. டார்கெட்டடு கீட்டோஜெனிக் டயட் Targeted Ketogenic Diet (TKD)

குறைந்த அளவு கார்போஹைட்ரேட், அதிக அளவில் புரதம் மற்றும் கொழுப்புள்ள உணவுகளே இதிலும் பரிந்துரைக்கப்படும். ஆனால், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்காக உடற்பயிற்சிகளுக்கு முன்போ, பிறகோ சிறிதளவு கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப் படும்.

3. சைக்ளிகல் கீட்டோஜெனிக் டயட் Cyclical Ketogenic Diet (CKD)

குறைந்த அளவு கார்போஹைட்ரேட், அதிக அளவு கார்போஹைட்ரேட் என இரண்டையும் மாறி மாறி எடுத்துக்கொள்ளும் டயட் முறை இது. வாரத்தில் 5, 6 நாள்களுக்கு குறைந்த கார்போஹைட்ரேட்டும், அதிக புரதமும் எடுத்துக்கொள்ள வேண்டும். மீதமுள்ள ஒன்றிரண்டு நாள்களில் அதிக கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு மாற வேண்டும்.

4. ஹை புரோட்டீன் கீட்டோஜெனிக் டயட் High Protein Ketogenic Diet (HPKD)

இதுவும் கிட்டத்தட்ட ஸ்டாண்டர்டு கீட்டோ ஜெனிக் டயட்டைப் போன்றதுதான். இதில் அதிக அளவிலான புரதமும், குறைவான கொழுப்பும் எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படும்.

சாதகங்கள்

 • எடை குறையும்.

 • ஆரோக்கியமான கொழுப்புகளை உண்ணும் பழக்கம் வரும்.

 • சர்க்கரை மற்றும் இனிப்பு உணவுகளிலிருந்து விலகி இருப்பதால் தீவிரமான இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் பாதிப்பு கட்டுப்படும்.

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: எந்த டயட் நல்ல டயட்? எனக்கேற்ற டயட் எது?

பாதகங்கள்

 • பின்பற்ற சிரமமான டயட் முறை இது.

 • தவறாகப் புரிந்துகொண்டு ஆரோக்கியமற்ற கொழுப்புகளை அளவுக்கதிகமாக உண்ணும் அபாயம் இதில் உண்டு.

 • நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும் எடைக்குறைப்பு இதில் சாத்தியமா என்பது சந்தேகமே.

 • இதயத்துக்கும் குடலுக்கும் ஆரோக்கியம் தரும் உணவுகளைத் தவிர்க்கும் வாய்ப்புகள் அதிகம். போதுமான அளவு நார்ச்சத்தும் கிடைக்காமல் போகலாம்.

 • விரும்பியதைச் சாப்பிட அனுமதிக்கப்படுகிற ‘சீட் டே’ (Cheat Day) அன்று ரத்த நாளங்கள் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பேலியோ டயட் (Paleo Diet)

இதுவும் எல்சிஹெச்எஃப் வகையைச் சேர்ந்ததுதான். கடந்த சில வருடங்களில் நிறைய மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது இந்த டயட். கீட்டோவில் உள்ளதுபோல ஒரிஜினல் பேலியோ டயட்டில் பால் பொருள்களுக்கு அனுமதியில்லை.

சாதகங்கள்

 • ஃபிரெஷ்ஷான, பதப்படுத்தப்படாத காய்கறிகள், பழங்கள், நட்ஸ், சீட்ஸ், அசைவ உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளில் கவனம் செலுத்தப்படும்.

 • சைவமோ, அசைவமோ... ஆர்கானிக் கானவையாக, ஆன்டிபயாடிக் செலுத்தப் படாதவையாக இருப்பது சிறப்பு.

 • வீக்கத்தை ஏற்படுத்தும் அன்சாச்சுரேட்டடு கொழுப்புகளுக்குப் பதில் தரமான சாச்சுரேட்டடு கொழுப்புக்கு மட்டுமே இதில் அனுமதி.

 • ஆட்டோஇம்யூன் டிஸ்ஆர்டர் பாதிப்புகளுக்கும், இரிடபுள் பவல் சிண்ட்ரோம், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ், பிசிஓஎஸ், டைப் 2 நீரிழிவு, கல்லீரல் கொழுப்பு நோய் மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கு இந்த டயட் ஏற்றது.

பாதகங்கள்

 • இதை நீண்ட காலத்துக்குத் தொடர முடியாது.

 • மிகவும் கறாரான பேலியோ டயட் சார்ட் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருப்பதில்லை.

 • கார்போஹைட்ரேட்டைக் கட்டுப்படுத்துவது வளர்சிதை மாற்றத்தை தாமதப்படுத்தும். மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

 • சதைப்பகுதி அதிகமுள்ள அசைவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளச் சொல்கிறது இந்த டயட். இவை அழற்சியை ஏற்படுத்தலாம். அழற்சியை ஏற்படுத்தாத மீன் வகைகள், எலும்புச் சாறு, முட்டைகள் போன்றவற்றையும் எடுத்துக்கொண்டால்தான் அது சமச்சீர் உணவாக இருக்கும்.

 • உணவுத் தேடல் அதிகமாக இருக்கும்.

 • பால் உணவுகள் முற்றிலும் தவிர்க்கப் படுகின்றன. ஆரோக்கியமான உடலுக்கு, தரமான பால் உணவுகளும் அவற்றின் மூலம் கிடைக்கும் ஊட்டமும் அவசியம்.

வீகன் டயட் (Vegan Diet)

வீகன் டயட்டில் காய்கறிகள், பழங்கள், கீரைகள், முழு தானியங்கள், நட்ஸ், சீட்ஸ், செக்கு எண்ணெய், பருப்பு வகைகள் போன்றவையே அடிப்படை. அசைவம் மற்றும் பால் உணவுகளுக்கு அனுமதியில்லை.

சாதகங்கள்

 • எடைக்குறைப்புக்கு உதவும்.

 • கொலஸ்ட்ரால், இதயநோய், டைப் 2 நீரிழிவு போன்ற பாதிப்புகளைத் தவிர்க்கும்.

 • உணவின் சத்துகள் உடலால் முழுமையாக கிரகிக்கப்படும். செரிமானம் சீராகும்.

 • வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த உணவுகளை உண்ண முடியும்.

பாதகங்கள்

 • மிகவும் காஸ்ட்லியானது, எல்லோராலும் பின்பற்ற முடியாதது.

 • கால்சியம், வைட்டமின் பி12, ஃபோலேட், வைட்டமின் டி, இரும்பு மற்றும் துத்தநாகச் சத்துக் குறைபாடுகள் ஏற்படலாம்.

 • இந்த டயட்டைப் பின்பற்றுவோருக்கு வெளியிடங்களில் இத்தகைய உணவுகள் எளிதில் கிடைப்பதில்லை.

 • இன்னும் சில ஃபேடு டயட் வகைகளைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

- நம்மால் முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism