
டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்
அண்மையில் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் போயிருந்தேன். கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பெரும்பாடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்களுடைய சிரமங்களை அருகிலிருந்து கவனித்தபோது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. பலமணி நேரம் அந்த வேலையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர்கள் என்ன சாப்பிட்டிருப்பார்கள்... எப்போது சாப்பிட்டிருப்பார்கள்... அந்த வேலைக்கிடையில் இயற்கை உபாதைகளுக்கு எங்கே செல்வார்கள்... இப்படி எனக்குள் ஏகப்பட்ட கேள்விகள்.

ஏற்கெனவே காவல்துறையினருடன் வேலைபார்த்த அனுபவம் எனக்கிருக்கிறது சீனியர் பெண் போலீஸ் ஒருவர் பகிர்ந்துகொண்ட தகவல்... `பந்தோபஸ்து வேலையில் இருக்கும்போது போதுமான அளவு தண்ணீர் குடிக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு தண்ணீர் குடிச்சிட்டு டாய்லெட்டைத் தேடி நாங்க எங்கே போறது...' என்றார்.
அது மட்டுமா? வேலை நிமித்தம் அவர்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டியிருக்கும். முதலமைச்சர் மற்றும் பிற அமைச்சர்களுக்குப் பதில் சொல்லும் இடத்தில் இருப்பதால் எந்த நேரமும் அலெர்ட்டாக இருக்க வேண்டும். நேரத்துக்குச் சாப்பிட முடியாது. உங்கள் குடும்பத்திலோ, தெரிந்தவர்களிலோ யாரேனும் காவல்துறையில் இருந்தால், நான் சொல்வது உங்களுக்குப் புரியும். காவலர்களின் மனைவிகளுடன் பேசியிருக்கிறேன். கணவரின் முறையற்ற உணவுப்பழக்கம், உறக்கமில்லாத இரவுகள் மற்றும் நலிந்துவரும் ஆரோக்கியம் குறித்த அவர்களின் கண்ணீர்க்கதைகள் பரிதாபத்தை ஏற்படுத்தும்.

நான் பார்த்ததில் காவல்துறையினருக்கு அடுத்தபடியாக கவலையளிப்பவர்கள் பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள். நம்மூரின் குறுகலான, நெரிசலான சாலைகளில், பிதுங்கும் கூட்டத்துடன் பேருந்தை ஓட்டிச் செல்வது சாதாரண காரியமில்லை. பிஸியான நேரத்தில் வாகனங்களை இயக்குவது அதிகபட்ச மன அழுத்தத்தைக் கொடுக்கும். அவர்களெல்லாம் சரியான நேரத்துக்குச் சாப்பிடுவார்களா... ஊட்டமான உணவுகளைச் சாப்பிடுவார்களா... அவர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் அவர்களை நம்பிப் பயணம் செய்கிற அத்தனை மக்களையும் பாதுகாப்பாக அழைத்துச்செல்ல முடியும். வாகனம் ஓட்டிக்கொண்டிருந்த போதே மாரடைப்பிலும், தூக்கக் கலக்கத்திலும் உயிரிழந்த எத்தனையோ டிரைவர்களைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோமல்லவா?
ஐடி மற்றும் பிபிஓ துறையினருடனும் நான் வேலைபார்த்திருக்கிறேன். அவர்களுடைய வேலைநேரமும் பலமணி நேரம் நீளக்கூடியது. வேலைநிமித்தம் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக நள்ளிரவு அல்லது விடியற்காலைவரை வேலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அலுவலக கம்ப்யூட்டருடன் பசைபோட்டு ஒட்டப்பட்டதுபோன்ற நிலையில் வேலையிடமே கதியென இருப்பார்கள். உடற்பயிற்சிக்கெல்லாம் நேரமென்பதே இருக்க வாய்ப்பில்லை.
இவர்களையெல்லாம் விடுங்கள். உங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண், டிரைவர், வாட்ச்மேன் போன்றோரை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் என்ன மாதிரியான உணவுகளைச் சாப்பிடுவார்கள்... உணவுக்கான அவர்களது மாதாந்தர பட்ஜெட் எவ்வளவாக இருக்கும்? நம் வாழ்க்கை இவர்களைப் போன்ற பலரைச் சார்ந்திருக்கும் நிலையில் இப்படிப் பட்டவர்களின் ஆரோக்கியத்திலும் நமக்குக் கொஞ்சமாவது அக்கறை வேண்டாமா?
மேற்குறிப்பிட்ட பணிகளில் இருப்போருக்கான ஆரோக்கிய உணவுக்கான சாய்ஸ் சிலவற்றை முன்பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்.
- நம்மால் முடியும்!
இது உங்களுக்காக...
உங்கள் வீட்டின் பணிப்பெண்ணுக்கும், வாட்ச் மேனுக்கும் நீங்கள் சாப்பிட்டது போக மீந்த உணவு களைத்தான் தர வேண்டும் என்றில்லை. காய்கறிகள் வாங்கும்போது கொஞ்சம் எக்ஸ்ட்ரா வாங்கி வாரத்தில் ஒருநாளாவது அவர்களுக்கும் கொடுக்கலாம். அல்லது சமைத்த உணவில் ஃப்ரெஷ்ஷாக கொஞ்சம் தரலாம். காய்கறி விலை ஏற்றம் நமக்கே கஷ்டமாக இருக்கும்நிலையில், பணிப்பெண்களும், வாட்ச்மேனும் என்ன செய்வார்கள்? எல்லாவிதமான காய்கறிகளையும் வாங்க வசதியில்லாமல் எப்போதும் உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்களுடனே முடிந்துபோகும் அவர்களின் சமையல்.
மொத்தவிலைக்கு முட்டை விற்பனை செய்கிறவர்கள் உடைந்த முட்டைகளை மலிவுவிலையில் சில கடைகளுக்கு விற்றுவிடுவார்கள். உடைந்துபோன அந்த முட்டைகளை வாங்கிவந்து முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடுவதாக என் வீட்டுப் பணிப்பெண் சொன்னபோது வருத்தமாக இருந்தது.
யாரோ முகம்தெரியாத நபர்களுக்குத்தான் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும் என்றில்லை. உங்கள் வீட்டுப் பணிப்பெண்ணுக்கோ, வாட்ச்மேனுக்கோ வாரத்தில் ஒருநாள் நன்றாகச் சமைத்துக் கொடுக்கலாம். அவர்களுடைய ஆரோக்கியத்தில் நீங்கள் காட்டும் துளி அக்கறை பலமடங்கு அன்பாக அவர்களிடமிருந்து உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்.
காலை உணவுக்கு.... (ஏதேனும் ஒன்று)
சத்துமாவுக்கஞ்சி
இட்லி அல்லது தோசை - தொட்டுக்கொள்ள நிறைய காய்கறிகள் சேர்த்துச் செய்த சாம்பார் அல்லது சட்னி அல்லது துவையல்
சீஸ் அல்லது வெண்ணெய் சேர்த்த பிரெட், கூடவே கொஞ்சம் காய்கறித் துண்டுகள்
புரோட்டீன் பவுடர் அல்லது சோயா பவுடர் சேர்த்த பால்
முட்டையும் முளைகட்டிய தானியங்களும்
முட்டையும் சுண்டலும்
முட்டையும் ஃப்ரூட் சாலட்டும்
மோர் சேர்த்த பழைய சாதம்

முன்பகலில்... (ஏதேனும் ஒன்று)
டீ அல்லது காபி (ஒருநாளைக்கு 2 கப்புக்கு மேல் வேண்டாம்)
வீட்டிலேயே தயாரித்த மோர் (ஒரு நாளைக்கு ஒரு லிட்டர்)
பொட்டுக்கடலை அல்லது அவல்பொரி அல்லது நெல்பொரி
வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் அல்லது ஆரஞ்சு - இவற்றில் ஒன்று
புதினா சட்னியுடன் பிரெட்
மதிய உணவுக்கு... (ஏதேனும் ஒன்று)
60 சதவிகிதம் காய்கறிகள் சேர்த்த புலாவ், தயிர்ப் பச்சடி
அரிசி - பருப்பு சாதம், துவையல்
புதினா சாதம், தக்காளி, வெள்ளரி சேர்த்த தயிர்ப் பச்சடி
பாலக் கீரை விழுது, கொத்தமல்லி - புதினா விழுது, வெந்தயக்கீரை, துருவிய கேரட், பீட்ரூட் அல்லது வேகவைத்த முள்ளங்கி... இவற்றில் ஒன்று ஸ்டஃப் செய்த சப்பாத்தி, கூடவே கொஞ்சம் தால், மிக்ஸ்டு வெஜ் கறி அல்லது பனீர்
தயிர் சாதமும் பொரியலும் (எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போரும், நீரிழிவு உள்ளவர்களும் உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய் பொரியல்களைத் தவிர்க்கவும்)
பருப்பு சாதம் அல்லது பருப்பு உசிலி சாதம், காய்கறிகள் அல்லது வேர்க்கடலை சேர்த்த சாம்பாருடன்
சாதம், ஏதேனும் ஒரு கிரேவி (மிக்ஸ்டு வெஜிடபிள்ஸ் + பிரவுன் சன்னா + பட்டாணி)
அந்தந்த சீஸனில் கிடைக்கும் காய்கறிகளை வாங்கிப் பயன்படுத்தத் தவறாதீர்கள். அவை மலிவாக மட்டுமன்றி, ஃப்ரெஷ்ஷாகவும் கிடைக்கும்.

மாலை வேளையில்...(ஏதேனும் ஒன்று)
குடிக்க....
டீ, காபி, லெமன் சேர்த்த பிளாக் டீ, மோர், லெமன் ஜூஸ் - இவற்றில் ஒன்று
கொறிக்க....
வேகவைத்த பட்டாணி அல்லது வேர்க்கடலைச்சுண்டல்
பச்சை மாங்காய்
வெள்ளரிக்காய்
கேரட்
பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்த மசாலா பொரி
புதினா சட்னி சேர்த்த வெஜிடபுள் சாண்ட்விச்
வேகவைத்த முட்டை அல்லது ஆம்லட்
வீட்டிலேயே தயாரித்த லட்டு (எண்ணெய் சேர்க்காமல் வறுத்த அரிசி அல்லது அவல், பருப்பு, வறுத்த கடலைப்பருப்புடன் வெல்லம் சேர்த்தது அல்லது ராகி லட்டு அல்லது கடலை உருண்டை அல்லது எள்ளுருண்டை)
வாழைப்பழம், கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு அல்லது ப்ளம்ஸ் (இவற்றில் ஒன்று)
தவிர்க்க வேண்டியவை
பஃப்ஸ், சமோசா, பிஸ்கட், பட்டர் பிஸ்கட், வெள்ளை பிரெட், பொரித்த உணவுகள் (இவற்றிலுள்ள கொழுப்பு ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல)
இரவு உணவுக்கு... (ஏதேனும் ஒன்று)
இட்லி, தோசை, ஊத்தப்பம், ஆப்பம் - இவற்றில் ஏதேனும். தொட்டுக்கொள்ள சாம்பார் அல்லது சட்னி அல்லது மிக்ஸ்டு வெஜ் கறி
தால், வெஜ் கறி, கூட்டு, துவையல் அல்லது அசைவ கறி - இவற்றில் ஒன்றுடன் சப்பாத்தி
கோதுமை தோசை அல்லது ஓட்ஸ் கஞ்சி அல்லது கோதுமை ரவை கஞ்சி - தொட்டுக்கொள்ள காய்கறிகள் அல்லது துவையல்
பொட்டுக்கடலை, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்தது அல்லது சௌசௌ, கேரட், பீர்க்கங்காய், பீட்ரூட் எனக் காய்கறியுடன் இஞ்சி சேர்த்து அரைத்த சட்னியாக இருக்க வேண்டும்.