Published:Updated:

பேசாக் கதைகள் - 7 | வாடகைத்தாய் - ஏழைப் பெண்களை இலக்கு வைக்கும் மெடிக்கல் மாஃபியா!

வாடகைத்தாய் | பேசாக் கதைகள்

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

பேசாக் கதைகள் - 7 | வாடகைத்தாய் - ஏழைப் பெண்களை இலக்கு வைக்கும் மெடிக்கல் மாஃபியா!

பேசாப்பொருளைப் பேசும் பகுதி. குடும்ப உறவுச் சிக்கல்கள், மன அழுத்தம், தனிமையுணர்வு, அவநம்பிக்கை, பிரிவு, எதிர்மறை சிந்தனைகளால் தவிப்போருக்கான வெளி... பகிரலாம்... தீர்வு தேடலாம்!

Published:Updated:
வாடகைத்தாய் | பேசாக் கதைகள்

தாய்மையை வரமாக் கொண்டாடுற மண் இது. உலகத்துல எல்லாத்துக்கும் விலை இருக்கு. தாய்மைக்கு விலையே இல்லேன்னு சொல்வாங்க. அம்மாங்கிறது ரொம்ப எமோஷனலான உறவு. எவ்வளவு கோபங்கள்... சண்டைகள்... வருத்தங்கள் இருந்தாலும் அம்மாவின் முகம் பார்க்கிற பிள்ளை, பிள்ளையோட முகம் பார்க்கிற அம்மா எல்லாத்தையும் மறந்துட்டு கருணையும் கனிவுமா அரவணைக்கிற தருணங்களைப் பார்த்திருக்கலாம். அந்த அளவுக்கு தாய்மையைப் போற்றுற இந்த மண்ணுலதான் தாய்மைக்கு விலை நிர்ணயிக்கப்படுறதும் நடக்குது.

சுதாங்கிற பேர்ல தன்னை அறிமுகம் செஞ்சுக்கிட்டாங்க அந்தப்பெண். சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவங்க. முப்பத்தெட்டு வயசு. கணவர் ஆட்டோ டிரைவர். சுதா சென்னையோட இருண்ட ஒரு பக்கத்தைப் பத்தி என்கிட்ட விரிவாப் பகிர்ந்துக்கிட்டாங்க.

சுதா வாடகைத்தாயா இருந்து இரண்டு குழந்தைகளை பெத்துக் கொடுத்தவங்க. அவங்க முகத்துல நிரந்தரமா படிஞ்சிருக்கிற சோர்வும் சோகமுமே அதுக்கு ஆதாரமா இருக்கு. ஏற்கெனவே சுதாவுக்கு ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. அந்தக் குழந்தைகளையுமே சிசேரியன் செஞ்சுதான் எடுத்திருக்காங்க. அதுக்கப்புறம் அடுத்தடுத்து ரெண்டு குழந்தைகளை வாடகைத்தாயா இருந்து பெத்தெடுத்திருக்காங்க சுதா. அந்தப் பிரசவங்களும் அறுவை சிகிச்சையில நடந்ததுங்கிறதால அவங்க ரொம்பவே சோர்வாயிருக்காங்க.

வாடகைத்தாய்
வாடகைத்தாய்
வாடகைத்தாய்கள் பத்தி நமக்கெல்லாம் பெரிய அளவுக்குத் தெரியாது. ஆனா, அது மிகப்பெரிய வணிகமா தமிழகத்தோட பெரு நகரங்கள்ல சத்தமில்லாம வளர்ந்துக்கிட்டிருக்கு. சென்னையில மட்டும் சுதா மாதிரி 500க்கும் மேற்பட்ட வாடகைத்தாய்கள் இருக்கிறதா சொல்லுது ஒரு புள்ளி விவரம். இந்தியாவுல வருஷத்துக்கு முப்பதாயிரம் குழந்தைகள் வாடகைத்தாய் மூலமா பிறக்குதுன்னும் சொல்லப்படுது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆணோட உயிரணு பெண்ணோட கருமுட்டையில இணைஞ்சு கருவாகி குழந்தையா ஜனிக்கிறது இயற்கை. ஆணோட உயிரணு வலுவற்றதா இருந்தாலோ பெண்ணோட கருமுட்டை வடிவற்றதா இருந்தாலோ, கருப்பையால குழந்தையை சுமக்கமுடியாமப் போனாலோ குழந்தைப்பேறு இல்லாமப் போகலாம். இதுக்கு மருத்துவ ரீதியா நிறைய காரணங்கள் இருக்கு. இந்தியாவில 6ல 1 தம்பதி குழந்தை இல்லாமத் தவிக்கிறாங்கன்னு ஓர் ஆய்வு சொல்லுது. கணவன் - மனைவி ரெண்டு பேருமோ வேலைக்குப் போய் பொருளீட்ட வேண்டிய அவசியம் ஏற்படுறதால வர்ற ஸ்ட்ரெஸ், மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம்ன்னு இதுக்கு பல காரணங்களை மருத்துவர்கள் சொல்றாங்க. இந்த மாதிரி இயற்கையா குழந்தை பிறக்க வழியில்லாத சூழல்ல இருக்கிற தம்பதிகளுக்கு தங்கள் கருப்பையை வாடகைக்குத் தர்றவங்கதான் இந்த வாடகைத்தாய்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலக அளவுல ஒப்பிடும்போது இந்தியாவில தாய்மைக்கான விலை ரொம்பவே மலிவு. அமெரிக்காவுல வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற 80 லட்சம் செலவாகும்னா நம்மூர்ல வெறும் பத்து லட்சத்துல கருப்பையை வாடகைக்கு வாங்கிடலாம்.

சுதா தான் வாடகைத்தாயான கதையைப் பகிர்ந்துக்கிட்டாங்க.

‘‘குழந்தை இல்லேங்கிற விஷயம் பெண்களை ரொம்பவே பாதிக்கும். ஒரு தாயா எனக்கு அந்த வலி தெரியும். அப்படித் தவிக்கிற யாரோ ஒரு பெண்ணுக்கு கருப்பையைத் தந்து துயரத்தை ஆத்தமாட்டமான்னுதான் நான் வாடகைத்தாயா இருக்க முடிவெடுத்தேன். இன்னொரு காரணம், என் குடும்பத்தோட வறுமை. என் வீட்டுக்காரர் கல்யாணத்துக்கு முன்னால வம்பு தும்புன்னு திரிஞ்சவர். இப்போ எந்தப் பிரச்னைக்கும் போறதில்லை. ஆனா இப்பவும் எங்க பகுதியில ஏதாவது பிரச்னைன்னா நேரா எங்க வூட்லதான் வந்து நிக்கும் போலீஸ். எதையாவது எழுதி அவரை ஜெயில்ல போட்ருவாங்க. ரிமாண்ட் எடுக்க நான் யார்கிட்டயாவது கடன் வாங்கணும். அப்படியே வாங்கி வாங்கி பெருங்கடன் சேந்திருச்சு.

வாடகைத்தாய்
வாடகைத்தாய்

எங்க தெருவுக்கு ஒரு அம்மா புதுசா குடி வந்தாங்க. ரொம்ப அனுசரணையா பேசுவாங்க. அப்பப்போ பணம் கொடுத்தும் உதவுவாங்க. ஒருநாள், "ரொம்பக் கஷ்டப்படுறியேம்மா... வாடகைத்தாயா வாரியா... நிறைய பணம் வாங்கித்தாரேன்"னு கூப்பிட்டாங்க. முதல்ல நான் ஒத்துக்கலே... யாரோ ஒருத்தனோட கருவைச் சுமந்துக்கிட்டு வாழ்றது ஒரு வாழ்க்கையான்னு தோணுச்சு. என் வீட்டுகாரரும் இந்தப் பிழைப்புக்கு நாண்டுக்கிட்டுச் செத்துப்போகலாம்ன்னு சொன்னார். நல்லா யோசிச்சுப் பார்த்தா இது ஒரு புனிதமான வேலைன்னு பட்டுச்சு. குழந்தையில்லாம தவிக்கிற ஒரு தம்பதிக்கு உதவிச் செய்யப்போறோம்... அதுதவிர அவங்களுக்கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இருக்கப்போறதில்லை. யாரோட குழந்தையைச் சுமக்கிறோம்ன்னுகூட நமக்குத் தெரியப்போறதில்லை. குடும்பக் கஷ்டத்தைப் போக்க ஓரளவுக்குப் பணமும் கிடைக்கும்ன்னு என் வீட்டுக்காரர்கிட்ட பேசி சம்மதிக்க வச்சேன். ஒரு கட்டத்துல அவரும் ஒத்துக்கிட்டார்"ங்கிறாங்க சுதா.

அடுத்த சில நாள்கள்ல அந்த அம்மா சுதாவை மருத்துவமனைக்குக் கூட்டிக்கிட்டுப் போயிருக்காங்க. 2 லட்ச ரூபாய் தர்றோம்ன்னு சொல்லி சில பத்திரங்கள்ல கையெழுத்து வாங்கியிருக்காங்க. ரத்தப் பரிசோதனையெல்லாம் செஞ்சுட்டு கருவை கருப்பையில வச்சிருக்காங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"16 நாள் வரைக்கும் மரண வேதனைங்க. கரு நம்ம கருப்பையில தங்கி வளரத் தொடங்குகிற வரைக்கும் அசையக்கூடக்கூடாது. பாத்ரூம் போற நேரம் தவிர மத்த நேரங்கள்ல படுக்கையிலேயே இருக்கணும். 16 நாளுக்குப்பிறகு கரு தங்கினவுடனே வீட்டுக்கு வந்துட்டேன். ரெண்டு, மூணு மாசத்துல வயிறு தெரியத் தொடங்குச்சு. ஊருல இருந்தா ஒருமாதிரி பேசுவாகளேன்னு, அம்மா வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு ஆஸ்பத்திரியிலயே போய் தங்கிட்டேன். மாசா மாசம் சாப்பாடுச் செலவுக்கு ரெண்டாயிரம் பணம் கொடுத்தாங்க. பழம், பருப்புன்னு சாப்பிட வாங்கிக்கொடுப்பாங்க.

ஸ்கேன் பண்றதைக்கூட பாக்க விடமாட்டாங்க. பாத்தா குழந்தை மேல பாசம் வந்திடுமாம். 9ம் மாசம் வலி வந்தவுடனே சிசேரியன் பண்ணுனாங்க. மயக்கம் தெளிஞ்சு பாத்தா, பக்கத்துல குழந்தை இல்ல. ஆணா, பெண்ணான்னு கூட சொல்லல. உயிரே போன மாதிரி இருந்துச்சு. கதறி அழுதேன். ‘அது உன்னோட குழந்தை இல்லை. அதனால அதை மறந்துடு’ன்னு சொல்லி அனுப்பி வச்சுட்டாங்க. அதுவரைக்கும் அக்கறையா கவனிச்சுக்கிட்டவங்க, அதுக்குப்பிறகு மருத்துவமனையில இருந்த நாள்கள்ல சாப்பிட்டியான்னு கூட கேக்கலே...’’ கலங்கின கண்களோட சொல்றார் சுதா.

கர்ப்பிணி
கர்ப்பிணி

வாடகைத்தாய் தொழில்ல புரோக்கர்கள் ஆதிக்கம் அதிகமாயிருக்கு. பெரும்பாலும் பெண்கள்தான் புரோக்கரா இருப்பாங்க. ஏழைகள் அதிகம் வசிக்கிற குப்பங்கள்ல, வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகள்ல ஒரு வாடகை வீடெடுத்து குடியேறுவாங்க. கஷ்டப்படுற பெண்களை அடையாளம் கண்டு அவங்களுக்கு ஆறுதல் சொல்றமாதிரி சொல்லி பண உதவிகளும் செய்வாங்க. சரியான சூழல் பார்த்து வாடகைத்தாயாகுற ஆசையைக் காட்டி சபலப்படு்த்துவாங்க.

அவங்க ஒத்துக்கிட்ட பிறகு, மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப்போய் ஒப்படைச்சுருவாங்க. அதோட அவங்க வேலை முடிஞ்சிடும். அதுக்காக கணிசமான தொகையை வாங்கிட்டு ஒதுங்கிடுவாங்க. ஆனா பேசினபடி வாடகைத்தாய்க்கு பணம் வாங்கித் தரமாட்டாங்க. வெளியில தெரியாம நடக்குறதால இதுபத்தி யார்க்கிட்டயும் சொல்லமுடியாம நிறைய பெண்கள் தவிக்கிறாங்கன்னு சொல்றாங்க சுதா.

பதிவு செய்யனும்... நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்கணும், 25 முதல் 35 வயதுக்குட்பட்டவரே வாடகைத்தாயாக இருக்கணும். ஒருவர் ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்கணும்ன்னு நிறைய விதிமுறைகள் வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டத்துல இருக்கு. ஆனா அதெல்லாம் நடைமுறையில இல்லை. வாடகைத்தாயா ரெண்டு குழந்தை மூணு குழந்தை பெத்தவங்கள்லாம் இருக்காங்கன்னும் சுதா சொல்றார்.

சுதாவுக்கு முதல்ல 2 லட்சம் ரூபாய் தர்றேன்னு பேசியிருக்காங்க. மாசம் ரெண்டாயிரம் கொடுத்திருக்காங்க. குழந்தை பிறந்த பிறகு 1 லட்சம் ரூபாயை மட்டும் கொடுத்து ‘மீதம் 1 லட்சத்தை ஏஜென்ட் வாங்கிட்டுப் போயிருச்சு’ன்னு சொல்லி விரட்டிட்டாங்க. கூட்டிட்டுப் போன பெண்ணைத் தேடுனா வீட்டைக் காலி பண்ணிட்டு தலைமறைவாகிடுச்சாம்.

குழந்தை இல்லாத தம்பதிகள் சாதாரணமா வாடகைத்தாய்களை தேர்வு செய்றதில்லை. முக்கியமா உருவ ஒற்றுமை. வெளிநாடுகள்ல இருக்கவங்க டூரிஸ்ட் விசாவில கிளம்பி வந்து கருவை கொடுத்துட்டு போயிடுவாங்க. 9வது மாசம் திரும்பவும் டூரிஸ்ட் விசாவில வந்து குழந்தையை வாங்கிட்டுப் போவாங்களாம்.

சுதா ரெண்டு குழந்தைகள் பெற்றுக்கொடுத்த பிறகு, உடலளவுல ரொம்பவே சோர்ந்துட்டாங்க. அதுக்கப்புறம் கருமுட்டை கொடுக்கிறது, ரத்தம் கொடுக்கிறதுன்னு தொடர்ந்து அவங்க பயன்படுத்தப்பட்டிருக்காங்க.

Pregnant woman
Pregnant woman
photo created by rawpixel.com - www.freepik.com

"ரத்தம் கொடுக்கப் போகும்போது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வோட்டர் ஐ.டி கொண்டு போனா போதும். பிபி, சுகர்லாம் செக் பண்ணுவாங்க. நார்மலா இருந்தா ரத்தம் வாங்கிக்குவாங்க. ஆரம்பத்துல 5,500 ரூபாய்தான் கொடுத்தாங்க. இப்போல்லாம் 10,000 ரூபாய், 15,000 ரூபாய்னு கொடுக்குறாங்கன்னு சொல்றாங்க. கருமுட்டைக்கு 25,000 ரூபாய் தருவாங்க. ரத்தம் கொடுக்கப் போற பெண்கள்கிட்ட கிட்னி தாறீங்களான்னு கேட்டு அதையும்கூட வாங்கிக்குவாங்க. கிட்னிக்கு 3 லட்சம் தருவாங்களாம். என்கிட்டகூட ஒருமுறை பேசினாங்க.

என்னதான் கஷ்டப்பட்டு உழைச்சாலும் பிள்ளைகளுக்கு நல்ல சோறு போடமுடியலே. கடனை அடைக்க முடியலே. நாங்கள்லாம் லட்சத்தை கண்ணால பாக்கணும்ன்னா இறைவன் கொடுத்த உறுப்புகள வித்தாத்தானே முடியும்..." ரொம்பவே ஆதங்கமாப் பேசுறார் சுதா.

சுகாதாரத்துறையில நாம இந்தியாவிலேயே நம்பர் ஒண்ணுன்னு சொல்லிக்கிறோம். உலகத்தோட மருத்துவத் தலைநகரம் சென்னைன்னு பெருமைப்பட்டுக்கிறோம். ஆனா, வளர்ச்சி, முன்னேற்றமெல்லாம் ஏழைகளுக்கில்லைங்கிற எதார்த்தத்துக்கு ஆதாரமாயிருக்கு சுதா மாதிரி பெண்களோட கதை.

சென்னை குடிசைப்பகுதிகள்ல ஏழைப்பெண்களைக் குறிவச்சு மிகப்பெரும் மெடிக்கல் மாபியா இயங்கிக்கிட்டிருக்குன்னு சொல்றாங்க. அவங்க ஏழ்மையைப் பயன்படுத்தி உடல் உறுப்புகளை விலை கொடுத்து வாங்குறதும் நடக்குதுங்கிறாங்க.

pregnant woman
pregnant woman
Pixabay

கனடா, இங்கிலாந்துன்னு உலகத்துல உள்ள 70 சதவீத நாடுகள்ல வாடகைத்தாய் மூலம் குழந்தை பெத்துக்கிறதுக்கு தடை இருக்கு. இந்தியாவில் 2002ல் வாடகைத்தாய் முறை சட்டப்பூர்வமாக்கப்பட்டுச்சு. 2016 ஆகஸ்ட்ல வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வந்து ஓரளவுக்கு இதை முறைப்படுத்தியிருக்காங்க. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் இதுக்கு விதிமுறைகளையும் வகுத்துக் கொடுத்திருக்கு. ஆனா, மருத்துவம் இதை வளம்கொழிக்கும் தொழிலாக்கியிருச்சு.

சென்னை, கோவை மாதிரி நகரங்கள்ல மெடிக்கல் டூரிசம் பெருசா வளர்ந்துக்கிட்டிருக்கு. ஒவ்வோராண்டும் ஏராளமான வெளிநாட்டவர்கள் சிகிச்சைக்காக இங்கே வர்றாங்க. ஏழ்மையில தவிக்கிற சுதா மாதிரி பெண்களை இலக்குவச்சு உறுப்புகளை மலிவான விலை கொடுத்து வாங்குறது, சொற்ப தொகைக்கு வாடகைத்தாயா அமர்த்துறதுன்னு திரைமறைவுல நிறைய நடந்துக்கிட்டிருக்கு. அரசாங்கம் இன்னும் தீவிரமா இந்த விஷயத்துல நடவடிக்கை எடுக்கனும். தொண்டு நிறுவனங்கள் இந்த மக்களை இலக்கு வச்சு விழிப்புணர்வு ஏற்படுத்தணும்!

- பேசுவோம்...

வாசகர்களே... உங்கள் மனதை அழுத்தும் பிரச்னைகளை kppodcast@vikatan.com என்ற மெயில் ஐடியில் பகிர்ந்து கொள்ளுங்கள். தீர்வு தேடுவோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism