Published:Updated:

பிள்ளை பெற்ற பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பு இயல்பாக இருக்கிறதா?! வீட்டிலேயே தெரிந்து கொள்ளலாம்!

பாட்டி வைத்தியங்கள் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அனுபவங்களின் அடிப்படையில் எல்லா நோய்களுக்கும் ஏதோ ஒரு தற்காலிகத் தீர்வை தந்திருக்கிறது.

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் உணர்வு பூர்வமான ஒன்று. தன் குழந்தையைக் கையில் ஏந்தப்போகிறோம் என்று எந்த அளவு சந்தோஷம் ஒரு பெண்ணின் மனதில் குடிகொள்ளுமோ... அதே அளவுக்கு மகப்பேறு குறித்த பயமும் மனதுக்குள் இருக்கும். எந்த டெக்னாலஜியும் இல்லாத காலத்தில் வீட்டில் இருக்கும் பாட்டிகளின் அனுபவங்கள்தாம் வேதவாக்காகவும் முதலுதவியாகவும் இருந்தது. பாட்டி வைத்தியங்கள் மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அனுபவங்களின் அடிப்படையில் எல்லா நோய்களுக்கும் ஏதோ ஒரு தற்காலிகத் தீர்வை தந்துகொண்டிருந்தது. தனிக்குடும்ப கலாசாரங்கள் பெருகிய பின், அனுபவங்களைச் சொல்ல பாட்டிகள் இல்லாமல் போனார்கள். நம்முடைய எல்லா தேவைகளுக்கும் கூகுளில் வழிகாட்டுதல்களை தேடத்தொடங்கிவிட்டோம்.

தாய்ப்பால்
தாய்ப்பால்
pixabay

தாய்மை விஷயத்தில் என்னதான் ஆன்லைன் பார்த்துக் தகவல்களைத் தெரிந்துகொண்டாலும். மற்றவர்களின் நேரடி வழிகாட்டுதல்களும் அனுபவமும் அவசியம் தேவைதான்.

"நான் நகரத்தில் தங்கி வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். சொந்த ஊரில் இருக்கும் அம்மாவோ, மாமியாரோ 10 மாதங்கள் என்னுடனே இருந்து என்னைப் பார்த்துக்கொள்ள முடியாது" என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. இது போன்ற சூழல்களில் தாய்மை குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு ஒரு அம்மா போன்று சில மணிநேரங்கள் உங்களின் கூடவே இருந்து உங்களுக்கு வழிகாட்டுகிறார்கள் பிரசவநேர அறிவுரையாளர்கள். யார் இந்த பிரசவகால அறிவுரையாளர்கள், என்ன மாதிரியான வழிகாட்டுதல்களை வழங்குவார்கள்? யாருக்கெல்லாம் பிரசவகால அறிவுரைகள் அவசியம் வேண்டும் என்பது தொடர்பான தகவல்களை விளக்குகிறார் சென்னையைச் சேர்ந்த பிரசவகால அறிவுரையாளர் மற்றும் தாய்ப்பால் அறிவுரை நிபுணர் நீலா சிவக்குமார்.

கருவுறும் பெண்களுக்கு இயல்பாகவே நிறைய சந்தேகங்கள் இருக்கும். எல்லா சந்தேகங்களையும் மகப்பேறு மருத்துவர்களிடம் கேட்டு தெளிவு பெற முடியாது. அதனால் நிறைய வீடியோக்கள் பார்த்து கத்துக்கிறாங்க. உண்மையில் ஆன்லைனில் வரும் வீடியோகள் எல்லாம் சரியானதுனு சொல்ல முடியாது. நல்ல ரீச் கிடைக்கணுங்கிறதுக்காக எல்லோரும் வீடியோ எடுத்து அப்லோட் பண்றாங்க. வீடியோ பார்க்கிறவங்களும் அது சரியா, உண்மையான்னு பார்க்கிறது கிடையாது. அப்படித் தப்பான செயல்முறை கொண்ட ஒரு வீடியோவைப் பார்த்து தன் மனைவிக்குப் பிரசவம் பார்த்த ஒருவர், மனைவியையும் குழந்தையையும் பிரசவத்தில் இழந்த செய்தியை எல்லாருமே படிச்சிருப்பீங்க.

தினமும் குழந்தை ஆறுமுறை சிறுநீர் கழித்து இரண்டு முறை மலம் கழித்தாலே உங்களுடைய பால் குழந்தைக்குப் போதுமானதாக இருக்கிறது என்றே அர்த்தம்.
பிரசவகால அறிவுரையாளர் நிபுணர் நீலா சிவக்குமார்.

சரியான வழிகாட்டுதல் இல்லாததுதான் இதற்குக் காரணம். முன்பெல்லாம் நம் வீடுகளில் இருக்கும் பெரியவங்க சொல்லும் கருத்தை எல்லோருமே மதிப்போம். டெக்னாலஜி வளர வளர பெரியவங்க சொல்லுக்கும் அவங்க அனுபவத்துக்கும் மதிப்பு இல்லாமல் போச்சு. உங்க வீட்டில் இருக்கும் பாட்டிகள், அம்மாக்கள் தங்களுடைய அனுபவத்தில் சொன்னதைத்தான், அதற்கான படிப்பை படிச்சுட்டு பிரசவகால அறிவுரையாளர்கள் வழங்குகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு பெண்ணின் பிரசவ காலத்தில் 32 வது வாரத்தில் இருந்து அவங்களை பிரசவத்துக்கு மனதளவில் தயார் செய்ய ஆரம்பிப்போம். பிரசவம் எப்படி இருக்கும், எப்படி நடைபெறும் என அவங்களுக்கு வீடியோக்களாகவும் பயிற்சிகளாகவும் வழங்குவோம். தாய்மார்களைக் குழந்தைகளிடம் பேசச் சொல்வோம். நிறைய பெண்கள் சுகப்பிரசவத்துக்குப் பயப்படுவாங்க. சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு இருந்தும் சிசேரியன் பண்ணிக்கிறேன்னு சொல்லுவாங்க. சுகப்பிரசவம் என்பது தாய்மார்களுக்கான நலன் என்பதைத் தாண்டி குழந்தைகளுக்கும் ஆரோக்கியமானது என்று படிப்படியாக அறிவுரைகள் வழங்கி அவங்களை பிரசவத்துக்குத் தயார் செய்வோம்.

குழந்தை
குழந்தை
pixabay

குழந்தைகளுக்கு எப்படித் தாய்ப்பால் கொடுக்கணும்? குழந்தை பிறந்த பின் ஏற்படும் மனஅழுத்ததில் இருந்து எப்படி வெளியியே வருவது என அவர்களை மனதளவில் தயார்படுத்துவோம்'' என்ற நீலா சிவக்குமார் கருவுற்று இருக்கும் தாய்மார்கள், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டும் தாய்மார்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய தகவல்களை பகிர்கிறார்.

''கருவுற்ற ஐந்தாவது மாதத்தில் இருந்தே உங்கள் குழந்தையுடன் பேச ஆரம்பியுங்கள். உங்களின் எல்லா உணர்வுகளையும் குழந்தைகள் நிச்சயம் உள்வாங்கும். தாய்ப்பால் சுரப்பு என்பது தாய்மார்களின் உணவுடன் சம்பந்தப்பட்டது அல்ல. உணர்வுடன் சம்பந்தப்பட்ட ஒன்று. எனவே, என் குழந்தைக்கு நான் தாய்ப்பால் கொடுப்பேன். என் குழந்தைக்கான ஆரோக்கியம் என்னிடம் இருந்துதான் கிடைக்கும் என்பதை உங்களின் மனதில் முதலில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.

குழந்தை
குழந்தை
pixabay

நிறைய பெண்கள் தங்களிடம் இருந்து சுரக்கும் பால் தங்களின் குழந்தைகளுக்குப் போதுமானதாக இல்லையோ என்ற பதற்றத்திலேயே இருப்பார்கள். பால் பற்றாக்குறையால்தான் குழந்தை அழுகிறது என எண்ணி தங்களையும் மன அழுத்தத்துக்குக் கொண்டு செல்வார்கள். குழந்தைகள் எல்லா நேரத்திலும் பால் பற்றாக்குறையால் மட்டும் அழுவதில்லை. தாயின் அரவணைப்பு தேவைப்படும் நேரங்களையும் குழந்தைகள் அழுகையாத்தான் வெளிப்படுத்துவார்கள். எனவே, பால் சுரப்பு பற்றி யோசித்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். பிறந்த மூன்று மாதம் வரை குழந்தைகளுக்குத் தினமும் 750 மில்லிகிராம் பால் போதுமானதாக இருக்கும். மூன்று மாதம் வரை தினமும் குழந்தை ஆறுமுறை சிறுநீர் கழித்து இரண்டு முறை மலம் கழித்தாலே உங்களுடைய பால் குழந்தைக்குப் போதுமானதாக இருக்கிறது என்றே அர்த்தம்.

குழந்தைக்கு பால் புகட்டும்போது மார்புக்காம்புகளை மட்டும் குழந்தையின் வாயில் வைக்காமல் முழு மார்பு பகுதியையும் குழந்தையின் வாய்க்குள் பதியவையுங்கள். குழந்தை குடிக்கத் தொடங்கினாலே பால் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும். சில பெண்களுக்கு பால் புகட்டுவதால் மார்பு பகுதியில் வலியுணர்வு இருக்கிறது என்பார்கள். குழந்தைகள் பால் குடிக்கும்போது அவர்களின் நாக்கு சரியாகச் செயல்படாவிட்டாலும் தாய்மார்களுக்கு வலி இருக்கும். இது போன்ற சமயத்தில் குழந்தைகள் பல் மருத்துவரை அணுகி குழந்தைகளின் நாக்குக்கு மசாஜ் செய்து பயிற்சி வழங்கலாம்.

ஒரு குழந்தைக்கு பாலூட்டும்போதே தாய்மார்கள் கர்ப்பம் தரித்துவிட்டால் உடனே குழந்தைக்கு பால் ஊட்டுவதை நிறைய பெண்கள் நிறுத்திவிடுகிறார்கள். இது தவறு. சத்தான உணவுகள் எடுத்துக்கொண்டால் கர்ப்பம் தரித்த பின்பும்கூட முதல் குழந்தைக்கு பாலூட்டலாம்.

காய்ச்சல் அல்லது வேறு ஏதேனும் உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால் பால் கொடுப்பதை நிறுத்த வேண்டுமா என்பது நிறைய பெண்களின் கேள்விகளாக இருக்கும். அதற்கு எந்த அவசியமும் இல்லை. உங்கள் உடல் நிலையை சரிப்படுத்த வழக்கம்போல் மருந்துகள் எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் ரத்தத்தில் கலந்து குழந்தைக்கு ஆன்டிபயாடிக்காகச் செயல்படும்.

குழந்தை
குழந்தை
pixabay

உங்களுக்கு பால்சுரப்பு இல்லை என்றாலோ, அதிகமான பால் சுரப்பு இருக்கிறது என்றாலோ அருகில் இருக்கும் தாய்ப்பால் சேமிப்பு வங்கியை அணுகி குழந்தையின் ஆரோக்கியத்துக்குத் துணை நிற்பது அவசியம். தாய்ப்பால் சேமிப்பு வங்கியில் இருந்து பாலைப் பெறுவதற்கு எந்தத் தயக்கமும் கொள்ளாதீர்கள், உங்களின் மனநிலையை விட குழந்தையின் ஆரோக்கியம் முக்கியமானது என்பது நினைவில் கொண்டு செயல்படுங்கள். எல்லாப் பெண்களுக்கும் பிரசவகால அறிவுரையாளரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காது. இது போன்ற சூழலில் ஆன்லைன் பார்த்து தவறான செய்திகளைத் தெரிந்துகொள்ளாமல், அம்மாக்களின் அனுபவங்களைக் கேளுங்கள்.

தாய்ப்பால் வார வாழ்த்துகள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு