Published:Updated:

அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம்: தெலங்கானா, கேரளாவில் உண்டு; தமிழகத்தில் ஏன் இல்லை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கோவை செயற்கை உறுப்பு நிலையம்
கோவை செயற்கை உறுப்பு நிலையம்

அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கான மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவது தமிழக சுகாதாரத்துறைக்கு எளிதான காரியமே. ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி, பல ஆண்டுகளாக இதைச் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்திவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

குழந்தையின்மை, இப்போது மக்களிடம் அதிகரித்து வரும் பிரச்னையாக இருக்கிறது. அதற்கான சிகிச்சையளிக்கப் பெருகிவரும் தனியார் கருத்தரித்தல் மையங்கள் (Fertility centres), கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் கார்ப்பரேட் தொழிலாக மாறிவருகிறது. இன்னொரு பக்கம், மதுரை அரசு இராசாசி மருத்துவமனை உட்பட தமிழக அரசு மருத்துவமனைகளில் குழந்தையின்மை சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்த பல வருடங்களாக இழுத்தடிப்பு செய்துவருகிறார்கள். மத்திய அரசு மருத்துவமனைகளில் 13 ஆண்டுகளுக்கு முன்பே இந்த சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் இன்னும் இது ஆரம்பிக்கப்படவில்லை. இதனால் குழந்தையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் தம்பதிகள் பலர், கடன் வாங்கியாவது தனியார் மருத்துவமனைகளில் குழந்தையின்மை சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர். அதற்கு வழியற்ற ஏழை எளிய மக்கள், சிகிச்சை கிடைக்க வழியின்றி தவித்து நிற்கிறார்கள்.

இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் கருத்தரித்தல் மையங்களை ஏற்படுத்தாமல், தனியார் குழந்தையின்மை சிகிச்சை மையங்களின் வளர்ச்சிக்குத் துணைபோகிறதா தமிழக அரசு என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

Pregnancy
Pregnancy
Pixabay

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல சமூக ஆர்வலரான நான், `தனியார் குழந்தையின்மை சிகிச்சை மையங்களில் உள்ள வசதிகளுடன் கூடிய செயற்கை கருத்தரித்தல் மையங்கள்போல, தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் ஏற்படுத்த வேண்டும்' என்று 2018-ம் ஆண்டு இறுதியில், மதுரை உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தாக்கல் செய்திருந்தேன். வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் சாராம்சம் மற்றும் தற்போதைய நிலை இதுதான்...

தமிழகத்தில் தற்போது குழந்தையின்மை பிரச்னை தம்பதிகளிடம் அதிகரித்துவருகிறது. வசதியுள்ளவர்கள், கடன் வாங்கி வைத்தியம் பார்க்கும் நடுத்தர வர்க்க தம்பதியினர் ஓரளவுக்கு இச்சிகிச்சைகளை மேற்கொண்டு குழந்தை பெறுகின்றனர். ஆனால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஏழை தம்பதிகள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியுள்ளனர். ஆனால், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் இந்த வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

குறிப்பாக, மதுரை அரசு இராசாசி மருத்துவமனை, தமிழகத்திலேயே நோயாளிகள் அதிகம் வருகை தரும் இரண்டாவது மிகப் பெரிய மருத்துவமனை. இங்கு தாய், சேய் நலனுக்காக ரூ.50 கோடியில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிநவீன சீமாங் (CEmONC - Comprehensive Emergency Obstetric and New born care Services) மையம் கொண்ட பிரமாண்ட அதிநவீன மருத்துவக் கருவிகளுடன் பிரசவம் பார்க்கப்படுகிறது. குழந்தையின்மை தீர்வுக்கான கருத்தரித்தல் சிகிச்சைக்காகக் கருத்தரித்தல் மையம் அமைப்பதற்கான

PGD-IVF,

Intracytoplasmic Sperm Injection (ICSI),

Morphologically Selected Sperm Injection (IMSI),

Laser Hatching,

PGD Sperm bank,

Egg bank,

Embryo bank,

Time Lapse,

Fibroid clinic,

Laparoscopic Surgery உள்ளிட்ட மருத்துவ வசதிகளை இங்கு ஏற்படுத்துவது தமிழக சுகாதாரத்துறைக்கு எளிதான காரியமே. ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறி, பல ஆண்டுகளாக இதைச் செயல்படுத்தாமல் காலம் தாழ்த்திவருகின்றனர்.

Pregnancy
Pregnancy

மேலும், தமிழகத்தில் சிவகங்கை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், கோவை, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 30 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்படுகின்றன. ஆனால், ஒரு மருத்துவமனையில்கூட கருத்தரித்தல் மையம் வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

குழந்தையின்மை சிகிச்சைக்காக தினம்தோறும் அரசு மருத்துவமனையை நாடிவரும் நூற்றுக்கணக்கான ஏழை தம்பதிகள், அங்கு அவர்களுக்குத் தேவையான செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வசதிகள் இல்லை என்பதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

குழந்தையின்மை, செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொள்வதற்கு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தேவைக்கேற்ப மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் இதர சிகிச்சைக்கு சம்பந்தப்பட்ட மருத்துவர்களும், துறை வல்லுநர்களும் உள்ளனர். ஆனால், அந்தச் சிகிச்சையை மக்களுக்கு வழங்குவதற்கான எந்த முயற்சியையும் மருத்துவமனை நிர்வாகத்தினரும், மாநில சுகாதாரத் துறையினரும் முன்னெடுக்காமல் அலட்சியப்படுத்திவருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுவே, மத்திய அரசு மருத்துவமனைகளான எய்ம்ஸில் 2007-ம் ஆண்டு முதலே இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயனடையும் வகையில் செயல்பட்டு வருகின்றன. மேலும், கடந்தாண்டு தெலங்கானா மற்றும் கேரளா அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சை வசதியை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சை வசதியை ஏற்படுத்தாமல், மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை, அவலத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தியாவில் குழந்தையின்மை பிரச்னையால் சுமார் 2.75 கோடி தம்பதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, நகர்புறப்பகுதிகளில் 6 தம்பதிகளில் ஒரு தம்பதி குழந்தையின்மை பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திலும் குழந்தையின்மை பிரச்னையால் பாதிக்கப்படும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் குழந்தையின்மை பிரச்னை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். சில குடும்பங்களில் கணவன், மனைவி விவகாரத்து செய்வதுவரை இது சென்றுவிடுகிறது. நீதிமன்றத்துக்கு வரும் விவகாரத்து வழக்குகளில் கணிசமான வழக்குகளில் குழந்தையின்மை பிரச்னையே பிரதானமாக முன்வைக்கப்படுகிறது.

Government Hospital
Government Hospital

குழந்தையின்மை பிரச்னைக்கு மருத்துவத் துறையில் செயற்கை கருத்தரித்தல் முறையில் பல்வேறு அதிநவீன சிகிச்சை முறைகள் நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம், குழந்தையின்மை பிரச்னையால் பாதிக்கப்படும் தம்பதிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியா மட்டுமல்ல, சர்வதேச அளவில் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை மையப்படுத்தி மருத்துவ சிகிச்சைகளும், அதற்கான வசதிகளும் புற்றீசல்போல் எல்லா நாடுகளிலும், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவிவருகின்றன. 2017 அறிக்கையின்படி இந்தியச் சந்தையில் இந்தச் சிகிச்சைக்கான மருந்துகள், கட்டணங்கள் மட்டும் ஆண்டுக்கு ₹1,831,18,43,750 (₹1,832 கோடி) வரை சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறது. இது படிப்படியாக உயர்ந்து 2023-ல் 5,000 கோடிக்கு மேல் தாண்டும் என்கின்றனர் மருத்துவப் பொருளாதார நிபுணர்கள்.

கோடிக்கணக்கான ரூபாய் புரளும் இத்துறையில், இந்தப் பணம் முழுக்க குழந்தையின்மை பிரச்னையால் அவதிப்படும் தம்பதிகளிடமிருந்துதான் வசூலிக்கப்படுகிறது. லட்சக்கணக்கில் கட்டணங்களை பணக்கார தம்பதிகள் கட்டிவிடுவார்கள். நடுத்தர வர்க்க மக்கள் கடன் வாங்கிச் செலவழித்துக் கடனாளியாகிக் கொண்டிருக்கின்றனர். ஏழைகளின் நிலைமை மிகவும் மோசம். அவர்கள் அரசு மருத்துவமனைகளை நம்பித்தான் உள்ளனர். தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒரு மருத்துவமனையில்கூட இச்சிகிச்சை மையம் ஆரம்பிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

Pregnancy
Pregnancy

பரிந்துரைகள்

  • மதுரை, தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, கரூர், தஞ்சாவூர், சேலம், தர்மபுரி, விழுப்புரம், சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் PGD-IVF, Intracytoplasmic Sperm Injection(ICSI), Morphologically Selected Sperm Injection(IMSI), Laser Hatching, PGD Sperm bank, Egg bank, Embryo bank, Time Lapse, Fibroid clinic, Laparoscopic Surgery உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன்கூடிய கருத்தரித்தல் மையங்களை ஏற்படுத்த வேண்டும்.

  • இந்தச் சிகிச்சையை ஏழைத் தம்பதிகள் பயன்பெறும் வகையில் இலவசமாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

அரசு, தன் மாநிலத்தில் குழந்தையின்மை பிரச்னையால் தவித்து வரும் தம்பதிகளுக்குச் செய்ய வேண்டிய மருத்துவக் கடமைகளை ஆற்ற, இன்னும் எத்தனை வருடங்கள் நாம் காத்திருக்க வேண்டும்?

- வெரோணிக்கா மேரி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு