வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சிறப்புரிமைகள் சிலவற்றை சட்டம் வரையறுக்கிறது. ஆனால், சில நிறுவனங்கள் சட்டம் வரையறுக்கும் உரிமைகளை, பெண்களுக்குக் கொடுப்பதில்லை. இதில் அரசுத்துறைகளும் விதிவிலக்கல்ல.
ராஜேஸ்வரி என்னும் பெண், 2013-ம் ஆண்டு அக்டோபரில் இருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் உதவிப் பொறியாளராக தற்காலிகப் பணி அடிப்படையில் பணியாற்றினார்.

இவருக்கு, ஜூன் மாதம் 2013-ம் ஆண்டு திருமணமானது. இதைத் தொடர்ந்து ராஜேஸ்வரி கருவுற்றார். இதையடுத்து, மகப்பேறு விடுப்புக்கு மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2014 வரை (180 நாள்கள்) விண்ணப்பித்தார். மகப்பேறு விடுப்பு விண்ணப்பித்த போதும் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சம்பளத்துடன் பேறுகால விடுப்பைக் கொடுக்கவில்லை.
ராஜேஸ்வரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பளத்துடன்கூடிய பேறுகால விடுப்பு வேண்டுமென்று வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கு ஒரே ஒரு நீதிபதியால் விசாரிக்கப்பட்டது. இவ்வழக்கில் உயர் நீதிமன்றம் ராஜேஸ்வரிக்கு போக்குவரத்துக் கழகம் சம்பளத்துடன்கூடிய பேறுகால விடுப்பு அளிக்க உத்தரவிட்டது. அதன்படி சம்பளத்துடன்கூடிய பேறுகால விடுப்பு ராஜேஸ்வரிக்குக் கிடைத்தது.

தற்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் இவ்வழக்கை மேல் முறையீடு செய்தது. நிரந்தர பணியாளர் களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்க முடியும். ஆனால், ராஜேஸ்வரி தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்தவர் என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் கூறுகிறது.
அதைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம், `பெண்கள் குடும்பத்துக்காக பல தியாகங்கள் செய்கின்றனர். பேறுகாலத்தில் பெண்கள் வேலையா, தாய்மையா என்று அலைக்கழிக்கப்படக் கூடாது. அவர்களுக்கு பேறுகால சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும்'' என்று தீர்ப்பளித்தது.