Published:Updated:

ஹார்மோன் பிரச்னை, மாதவிடாய்க் கோளாறு, சினைப்பை கட்டி.... பலன் தரும் எளிய யோகாசனங்கள்!

நாம் அனைவருமே தினமும் ஒரு மணி நேரம் யோகா பயிற்சிகள் செய்வது நல்லது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் பிசிஓஎஸ் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க உதவும் சில பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்...

பத்த கோனாசம்
பத்த கோனாசம்

இன்று பதின் பருவப் பெண்களை பலரையும் அச்சுறுத்துவது மாதவிடாய்க் கோளாறு மற்றும் பிசிஓஎஸ் என்னும் நீர்க்கட்டிப் பிரச்னை. மனஅழுத்தம், ஒழுங்கற்ற வாழ்வியல் வழிமுறைகள், ஹார்மோன் குறைபாடுகள் என பல காரணங்களால் இது வருகிறது. மாதவிடாய்க் கோளாறை மருந்து மாத்திரைகளைக் கொண்டு ஓரளவு குணப்படுத்தினாலும் நீர்க்கட்டி பிரச்னையை தீர்க்கும் வழி தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கின்றனர்.

 சத்துள்ள  உணவு
சத்துள்ள உணவு

வாழ்வியல்முறை மாற்றங்கள்தான் இதற்கு தீர்வு தரும். குறிப்பாக முறையான தூக்கம், ஒழுங்கான உணவு முறைகள் மற்றும் யோகா பயிற்சிகளை தொடந்து செய்தால் நீர்க்கட்டி பிரச்னைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். அத்துடன் அது மீண்டும் வராமல் தடுக்க உதவும்.

முதலில் முறையான தூக்கம் அவசியம். தினமும் குறைந்தபட்சம் ஏழு மணி நேரமாவது தூங்கவேண்டும். இது எல்லோருக்குமே அவசியமான ஒன்றுதான். முறையான தூக்கம் மனஅழுத்தம் வராமலும், ஹார்மோன் முறையாகச் செயல்படவும் உதவும். பொதுவாக ஹார்மோன் குறைபாடுகளுக்கு முறையற்ற தூக்கமே முக்கியக் காரணம் என்பதை மனதில்கொண்டு செயல்படவேண்டும்.

டயட்
டயட்

அடுத்தது, சரியான நேரத்துக்குச் சாப்பிடவேண்டியது அவசியம். நேரம் தவறிச் சாப்பிடுவது, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது போன்றவை நோய்கள் வர முக்கியக் காரணமாகும். நாம் சாப்பிடும் உணவுகள் சத்தானவையாக மட்டுமன்றி முழுமையான சத்துகள் நிறைந்தவையாக இருக்கவேண்டும். ஒரு நாளைக்கு 200 கிராம் காய்கறிகள், 200 கிராம் பழங்கள், மற்றும் ஏதாவது இரண்டு பழச்சாறுகளை அருந்தவேண்டும். மேலும் ஒரு வேளை சிறுதானிய உணவும், ஒரு வேளை அரிசி உணவும், ஒருவேளை பழ உணவும் எடுத்துக் கொள்வது நல்லதொரு மாற்றத்தைத் தரும். விருப்பமிருந்தால் வாரம் ஒரு நாள் அசைவ உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். இவை எல்லோராலும் மிக எளிமையாக பின்பற்றக்கூடிய ஓர் அட்டவணையாகத்தான் இருக்கும்.

இதற்கு அடுத்ததாக யோகா பயிற்சிகள். நாம் அனைவருமே தினமும் ஒரு மணி நேரம் யோகா பயிற்சிகள் செய்வது நல்லது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் மற்றும் பிசிஓஎஸ் போன்ற பிரச்னைகள் வராமல் தடுப்பதற்கென்றே தனியாக சில பயிற்சிகள் இருக்கின்றன. இதற்கு சூர்ய நமஸ்காரம் செய்வது நல்லது. பன்னிரண்டு நிலைகளைக் கொண்ட இந்தப் பயிற்சியை ஒவ்வொருநாளும் பன்னிரண்டு முறை செய்யவேண்டும். இந்தப் பயிற்சி மனிதர்களுக்கு சக்தியை அதிகப்படுத்தும். மேலும் மூளையில் இருக்கும் ஹார்மோன் மையங்களை முறையாக செயல்பட வைக்கும். இதை அதிகாலை நேரங்களில் செய்வது நல்லது.

யோக முத்ரா
யோக முத்ரா

அடுத்தது யோக முத்ரா. அமர்ந்த நிலையில் செய்யவேண்டிய ஆசனம் இது. இரண்டு கால்களையும் மடித்துவைத்துக் கொண்டு கைகளை மடக்கி அடிவயிற்றில் வைத்து முன் பக்கமாக குனிந்து செய்யவேண்டும். இதைச் செய்வதால் சினைப்பை தூண்டப்படும். அத்துடன் நீர்க்கட்டிகள் வளராமல் தடுக்க உதவும்.

பத்த கோனாசம் செய்வதால், மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலி, முதுகு வலி போன்றவை வராமல் பாதுகாக்கும். இதை ஒரு வருடம் தொடர்ந்து செய்தால், பெரிய அளவில் மாற்றம் ஏற்படும். இரண்டு கால்களையும் ஒன்றோடு ஒன்று சேர்த்தபடி முழங்கால்களை மேலும் கீழுமாக அசைக்கவேண்டும்.

அர்த்த மாட்சியேந்திர ஆசனம்
அர்த்த மாட்சியேந்திர ஆசனம்

அர்த்த மாட்சியேந்திர ஆசனம். கால்களை மடித்துக்கொண்டு முதுகைப் பின்பக்கமாகத் திருப்பவேண்டும். இதைச் செய்யும்போது அடி வயிற்றில் இருக்கும் கொழுப்பு குறையும். மேலும், பிசிஓஎஸ் இருப்பவர்களுக்கு இன்சுலின் குறைபாடுகளும் இருக்கும். அர்த்த மாட்சியேந்திர ஆசனம் செய்வதால் இவை இரண்டும் சரியாகும்.

அடிவயிற்றைக் குறைப்பதற்காக செய்யவேண்டிய ஆசனம், பாஸ்ச்சிமோத்தாசனம். இரண்டு கால்களையும் நேராக நீட்டிவைத்து முன்னோக்கி குனிந்தபடி இருக்கவேண்டும். இதுவும் பிசிஓஎஸ் இருப்பவர்கள் செய்யவேண்டிய ஆசனம்.

புஜங்காசனம்
புஜங்காசனம்

புஜங்காசனம் செய்வதால் சினைப்பை நீர்க்கட்டிகள் கரையும். உடல் சோர்வு இல்லாமல், தொடர்ந்து மாதவிடாய் வர இந்த ஆசனம் உதவும்.

Vikatan

அடுத்தது மூச்சுப் பயிற்சிகள். குறிப்பாக கபாலபதி மூச்சுப்பயிற்சியைச் செய்யலாம். முழுவதுமாக மூச்சை உள்ளே இழுத்து கொஞ்சம் கொஞ்சம் ஆக மூச்சை வெளியே விடவேண்டும். இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்வதால் பிசிஓஎஸ் பிரச்னைகள் குணமாகும். ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் முறையாக வேலை செய்யும். இவற்றை பல்வேறு ஆய்வுகளும் ஒப்புக்கொள்கின்றன.