Published:Updated:

மாதவிடாய் கால விடுப்பு... `சலுகை அல்ல, உரிமை!' - ஜொமேட்டோவுக்கு குவியும் பாராட்டுகள் 

தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் வருடத்தில் 10 நாள்கள் மாதவிடாய்க் கால விடுப்பு வழங்கப்படும்’ என ஜொமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

கொரோனா தொற்றால் பல்வேறு துறைகளில் வேலை இழப்புகள் அதிகரித்துள்ளன. பணிச்சூழல் நிச்சயமற்றதாக மாறியிருக்கிறது. இப்படியான நெருக்கடியான நிலையில், `தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் வருடத்தில் 10 நாள்கள் மாதவிடாய்க் கால விடுப்பு வழங்கப்படும்’ என ஜொமேட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

``எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்துப் பெண்கள், திருநங்கைகளுக்கு வருடத்துக்கு 10 நாள்கள் மாதவிடாய்க் கால விடுப்பு வழங்கப்படும். எந்தத் தயக்கமும் இல்லாமல் மாதவிடாய்க் கால விடுப்புக்குப் பெண் ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். நீங்கள் பணியாற்றும் இடத்தில், குழுவிடம் நான் மாதவிடாய் விடுப்பு எடுத்திருக்கிறேன் என்று தயக்கமில்லாமல் போன் மூலமாகவோ மெயில் மூலமோ தெரிவியுங்கள்.

நம்முடைய பெண் ஊழியர்கள் மாதவிடாய் விடுப்பு கோரும்போது, சங்கடமான சூழலை ஏற்படுத்தும் வகையில் ஆண் ஊழியர்கள் நடந்துகொள்ளக் கூடாது. பெண்களுக்கு மாதவிடாய் நாள்கள் எந்தளவு வேதனையுள்ளதாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஜொமேட்டோ நிறுவனத்தில் உண்மையான கூட்டுக் கலாசாரத்தைக் கட்டமைக்க விரும்புவோமாயின், பெண்களுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும்” என ஜொமேட்டோ நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

`மாதவிடாய்க் காலத்தில் பெரும்பாலான பெண்களால் இயல்பாக இருக்க முடியாது. அவர்களுக்கு அப்போது நிச்சயம் ஓய்வு தேவை’ என்பது தெரிந்திருந்தும் அந்த நாள்களில் சிறப்பு விடுப்பு அளிப்பதை தேவை இல்லாத விஷயமாகவோ தங்கள் லாபத்தை பாதிக்கும் விஷயமாவோதான் நிறுவனங்கள் கருதி வருகின்றன. பெண்கள் நடத்தும் நிறுவனங்களில்கூட `மாதவிடாய்க் கால விடுப்பு’ போன்ற முன்னெடுப்புகளுக்கு வழியில்லாமல்தான் இருக்கிறது.

மாதவிடாய்
மாதவிடாய்

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் `கல்ச்சர் மிஷன்’ என்ற டிஜிட்டல் மீடியா நிறுவனம் 2017-ம் ஆண்டு, தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாயின் முதல் நாளில் விடுப்பு அளிப்பதாக அறிவித்ததுடன், `ஃபர்ஸ்ட் டே ஆஃப் பீரியட்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிட்டது. அந்த வீடியோவின் வாயிலாக, மாதவிடாயின்போது பெண்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்கியதுடன் மாதவிடாய்க் கால விடுப்பை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுத்தனர். இப்படியான கோரிக்கைகள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வந்தாலும் அவை பெரியளவில் கண்டுகொள்ளப்படுவதில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பெண்களுக்கான பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரான உ.வாசுகியிடம் இதுகுறித்துப் பேசினோம்.

``மாதவிடாய்க் காலம் என்பது பல பெண்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிக்கலை ஏற்படுத்தக் கூடியது. ஓய்வெடுப்பது மட்டும்தான் அதற்குச் சரியான தீர்வு. ஆனால், `மாதவிடாய் என்பது பெண்ணின் உடலில் மாதா மாதம் ஏற்படக்கூடிய இயற்கையின் சுழற்சிதானே... இதுக்கெல்லாமா விடுப்பு கொடுக்க முடியும்’ என்கிற கேள்விகள் அதிகமாகக் கேட்கப்படுகின்றன.

உ.வாசுகி
உ.வாசுகி

கடைகளில் பணியாற்றுபவர்கள் மணிக்கணக்காக நிற்க வைக்கப்படுகின்றனர் என்பதற்காகக் கேரளாவில் சமீபத்தில், `உட்காரும் உரிமை’ என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்துப் பேசிய பெண் ஊழியர்கள் பெரும்பாலும் குறிப்பிட்டது, மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலத்தையும்தான். ``அந்தக் காலத்தில் நின்றுகொண்டே இருப்பது என்பது மரண அவஸ்தை. `எப்போதுதான் உட்காருவோம்’னு இருக்கும். ஆகையால், உட்காரும் உரிமை என்பது பெண்களுக்கு பெரும் வரப்பிரசாதம்” என்று மனம் நெகிழ்ந்தனர்.

மாதவிடாய் சுழற்சியைப் பாதித்த லாக்டௌன்... காரணங்கள், தீர்வு!

இதிலிருந்து பணிக்குச் செல்லும் பெண்கள் மாதவிடாய் நாள்களில் எதிர்கொள்ளும் வலியையும் வேதனையையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். வேலைக்கு வந்தால் அனைவரும் சமம் என்ற வாதம் பொதுவான நியதியாக இருந்தாலும் பெண்களுக்கு பிரத்யேகமாக இருக்கக்கூடிய பிரச்னைகளுக்கான தீர்வை சலுகையாக அல்லாமல் உரிமையாக வழங்க வேண்டும் என்பதையும் நாம் உணர வேண்டும். மகப்பேறு கால விடுப்பைக்கூட வழங்காமல் பல நிறுவனங்கள் பெண்களை வஞ்சிக்கும் வேளையில், ஜொமேட்டோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டிய விஷயம்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு