ஹெல்த்
தொடர்கள்
Published:Updated:

தொற்றுநோய்களின் உலகம் - 40

தொற்றுநோய்களின் உலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
தொற்றுநோய்களின் உலகம்

ஹெல்த் - 40

தொற்றுநோய்களின் உலகம் - 40

ல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு ஆப்பிரிக்காவில் இனம்காணப்பட்டது தொழுநோய். இந்தநோயை கிராமப்புறங்களில் `குஷ்டநோய்’, `பெருவியாதி’ என்றெல்லாம் சொல்வார்கள். ‘குணப்படுத்தவே முடியாத ஒரு பெருநோய்’ என்பதுதான் தொழுநோய் குறித்த பெரும்பாலானோரின் நம்பிக்கை. தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை முழுமையாக ஒதுக்கிவைத்துவிடுவார்கள். உண்மையில், தொழுநோய் 100 சதவிகிதம் குணப்படுத்தக்கூடியது. ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடியது என்றாலும், அவ்வளவு எளிதாகப் பரவிவிடாது.

தொற்றுநோய்களின் உலகம் - 40

சரி, ஏன் தொழுநோய் பற்றி இவ்வளவு கற்பிதங்கள் இருக்கின்றன?

காரணம் இருக்கிறது. மருத்துவத்துறை எவ்வளவோ வளர்ச்சிகளை எட்டிவிட்டது. தினந்தோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் புதிது புதிதாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள். புதிய புதிய தீர்வுகள் வருகின்றன. ஆனால், தொழுநோய் உருவாக்கியிருக்கும் பிரச்னைக்கு மட்டும் இன்றுவரை தீர்வுகாண முடியவில்லை.

ஒரு நோய் ஏற்படுகிறதென்றால், அதை உருவாக்கும் கிருமியின் தன்மையைக் கண்டறிய ஆய்வுக்கூடத்தில் அந்தக் கிருமியை வளர்ப்பார்கள். அப்படி வளர்த்து, அதன் தன்மையைப் புரிந்துகொண்டு அதன் பிறகே அந்தக் கிருமியை அழிக்கும் மருந்துகளைக் கண்டறிய முடியும். காசநோய் முதல் ஹெச்.ஐ.விவரை எல்லாக் கிருமிகளையும் அப்படி வளர்த்தே கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், தொழுநோயை உருவாக்கும் `மைக்கோபாக்டீரியம் லெப்ரே’ கிருமியை அப்படி ஆய்வுக்கூடத்தில் வளர்க்க முடியாது.

`ஆர்மடில்லோ’ (Armadillo) என்றொரு விலங்கு உண்டு. விக்கிபீடியாவில், ‘நல்லங்கு’ என்று இந்த விலங்குக்குத் தமிழ்ப்பெயர் வைத்திருக்கிறார்கள். கீரியையும் எறும்புத்தின்னியையும் கலந்துசெய்த கலவை மாதிரியிருக்கும் இந்த விலங்குகள், தென் அமெரிக்க நாடுகளில் கொஞ்சமாக வாழ்கின்றன. அந்த விலங்கின் பாதத்தில் மட்டும்தான் இந்தக் கிருமியை வளர்க்க முடியும். அதனால், `ஆர்மடில்லோ’ விலங்கே இல்லாத ஆசிய நாடுகளில் தொழுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் மிகவும் குறைவாகவே நடக்கின்றன. இப்படியொரு சிக்கல் இருப்பதால்தான் தொழுநோய் பற்றி நாம் அதிகம் தெரிந்துகொள்ள முடியவில்லை. இப்போதும்கூட நாம் இது பற்றிக் குறைவாகத்தான் தெரிந்துவைத்திருக்கிறோம்.

தொழுநோயின் பாதிப்பு, உடலிலுள்ள எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து மாறுபடும். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களின் உடலில் `மைக்கோபாக்டீரியம் லெப்ரே’ கிருமி அதிகளவில் இருக்கும். ஆனால், அறிகுறிகள் குறைவாக இருக்கும். எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவர்களின் உடலில் கிருமி குறைவாகவே இருக்கும். ஆனால் அறிகுறிகள் அதிகமாகத் தெரியும். முதல் வகையை ‘லெப்ரோமேட்டஸ் லெப்ரஸி’ (Lepromatous Leprosy) என்றும், இரண்டாவது வகையை ‘டியூபர்குளாய்டு லெப்ரஸி’ (Tuberculoid Leprosy) என்றும் மருத்துவம் வகைப்படுத்துகிறது.

தொழுநோய் இருப்பவர்களுக்கு உடலில் சிறு தேமல்போல ஒரு வெண்திட்டு உருவாகும். அந்தத் திட்டைத் தொட்டால் உணர்ச்சியிருக்காது. அதுதான் அறிகுறி. இந்த நோய், நேரடியாக நரம்பை பாதிக்கக்கூடியது. `மைக்கோபாக்டீரியம் லெப்ரே’ கிருமி, பொதுவாக காதுகளிலும் மூக்கிலும்தான் வாழும். பாதிக்கப்பட்டவரின் காதில் சிறு சதையை எடுத்துச் சோதித்தால், அந்தக் கிருமி குவியலாகத் தெரியும். தொடுதல், சுவாசித்தல் மூலம் இந்தக் கிருமிகள் பிறருக்குப் பரவும். ஆனால், தொழுநோய் பாதித்த ஒருவர் தும்முகிறார் என்றால், உடனே அருகில் உள்ளவர்களுக்கும் நோய் வந்துவிடாது. தொழுநோய் பாதித்த ஒருவர் பேருந்தில் பயணம் செய்கிறாரென்றால், அவருக்கருகில் அமர்ந்து பயணிப்பவருக்கு தொழுநோய் வந்துவிடாது. பல மாதங்கள் அருகிலேயே இருப்பவர்கள், நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களுக்கு வரலாம். மரபு சார்ந்தோ, பிறப்பிலேயோ இந்த நோய் வராது.

இந்த நோய், உணர்ச்சியில் கை வைக்கிறது. குறிப்பாக, `லெப்ரோமேட்டஸ் லெப்ரஸி’ இருப்பவர்களுக்கு படிப்படியாக உடலில் உணர்ச்சி குறைந்துகொண்டேவரும். உணர்ச்சி இல்லாததால் தேய்ந்து, அடிபட்டு அவர்களை அறியாமலேயே உடல் குறுகிக்கொண்டே போகும். நரம்புகளெல்லாம் தடித்துவிடும். கை மூட்டுக்கருகே ஒரு நரம்பு ஓடும். அது தடித்து, தனியாகத் தெரியும். `டியூபர்குளாய்டு’ வகைத் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய விளைவுகள் ஏதும் ஏற்படாது. உடலில் எங்கேனும் வெண்திட்டுகள் ஏற்படலாம். அந்த இடத்தில் உணர்ச்சி இல்லாமல் போகும். மற்றபடி உடல் பாகங்களில் பெரியளவில் பாதிப்பு ஏற்படாது. இவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுவதும் குறைவு.

சரி, இந்தியாவில் தொழுநோய் பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது..? அடுத்த இதழில் பார்க்கலாம்!

- களைவோம்...