தொடர்கள்
ஹெல்த்
Published:Updated:

ஹெல்த்: தண்ணீரைக் கண்டால் பயம்... நாய்க்கடியும் காரணமாகலாம்!

ரேபிஸ் விழிப்புணர்வு தினம்
பிரீமியம் ஸ்டோரி
News
ரேபிஸ் விழிப்புணர்வு தினம்

உலக ரேபிஸ் விழிப்புணர்வு தினம் செப்டம்பர் 28

உலகளவில் ஆண்டுக்கு 59,000 பேர் ரேபிஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 15,000 பேர் உயிரிழக்கின்றனர். ‘ரேபிஸ் பாதிப்பால் ஏற்படும் மொத்த உயிரிழப்பில், 45 சதவிகிதம் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில்தான் ஏற்படுகின்றன’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். அந்த வகையில் இந்த பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ரேபிஸ்நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்த லூயி பாஸ்டரின் பிறந்ததினமான, செப்டம்பர் 28-ம் தேதி ஆண்டுதோறும் `உலக ரேபிஸ் விழிப்புணர்வு தின’மாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

சிவராமக் கண்ணன்
பொது மருத்துவர்
சிவராமக் கண்ணன் பொது மருத்துவர்

சிவராமக் கண்ணன்பொது மருத்துவர்

`2030-ம் ஆண்டுக்குள் ரேபிஸ் இறப்பில்லாத உலகத்தைப் படைக்க வேண்டும்’ என்பதே உலக சுகாதார நிறுவனம் உட்பட, ரேபிஸுக்கு எதிரான பல அமைப்புகளின் கொள்கை முழக்கமாக இருக்கிறது.

‘’ரேப்டோ வைரஸ்’ குடும்பத்தைச் சேர்ந்த வைரஸ்தான் `ரேபிஸ்.’ இது நாய், பூனை, குதிரை, வௌவால் போன்ற விலங்குகளைத் தாக்கும். அந்த விலங்குகளின் மூலம் மனிதர்களுக்கும் பரவக்கூடியது. ரேபிஸ் பாதிப்பை எந்தப் பரிசோதனைகள் மூலமாகவும் கண்டறிய முடியாது. சில அறிகுறிகள் மூலமாக மட்டுமே கண்டறிய முடியும்” என்கிறார் பொது மருத்துவர் சிவராமக் கண்ணன்.

ஹெல்த்: தண்ணீரைக் கண்டால் பயம்... நாய்க்கடியும் காரணமாகலாம்!

“இந்தியாவில் பெரும்பாலும் நாய் மூலம்தான் இந்த வைரஸ் பரவுகிறது. ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாயின் கீழ்த்தாடை வழக்கத்துக்கு மாறாக கீழே தொங்கிக் கொண்டிருக்கும். வாயில் எச்சில் ஒழுகிக்கொண்டே இருக்கும். வெளிச்சத்தைப் பார்த்தால் பயப்படும். கண்ணில்படும் மனிதர்களையெல்லாம் கடிக்கும். வளர்ப்பவர்கள் கூப்பிட்டால்கூடத் திரும்பிப் பார்க்காது. மனிதர்களை இந்த வைரஸ் தாக்கியிருக்கிறது என்பதை சில அறிகுறிகளின் மூலமாக அறியலாம். அதிகமான காய்ச்சல், தலைவலி, தொண்டைப்பகுதித் தசைகளில் நடுக்கம் உண்டாகும். மிக முக்கியமாக ‘ஹைட்ரோபோபியா’ எனப்படும் தண்ணீரைக் கண்டால் அச்சப்படும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். வாயில் அளவுக்கு அதிகமாக எச்சில் சுரக்கும். மன அழுத்தம், பதற்றம், பயம் உண்டாகும். இந்த அறிகுறிகள் பெரும்பாலும் ரேபிஸ்நோய் பாதித்த மூன்றாவது வாரத்திலிருந்து எட்டாவது வாரத்துக்குள் தெரியவரும். சிலருக்கு இந்தக் கால அளவுகளில் மாறுபாடு இருக்கலாம்.

ஹெல்த்: தண்ணீரைக் கண்டால் பயம்... நாய்க்கடியும் காரணமாகலாம்!

அதேபோல், ரேபிஸால் பாதிக்கப்பட்டு இறந்த விலங்குகளை வெறும் கையால் தூக்கக் கூடாது. கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும். பிளீச்சிங் பவுடர் போட்டுப் புதைக்க வேண்டும். வீட்டில் நாய் வளர்ப்பவர்கள், நாய்களுக்கு முறையாகத் தடுப்பூசி போட வேண்டும். இந்த வைரஸ் பாதிப்புக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், நாய் கடித்தவுடனே தடுப்பூசி போட்டுக்கொண்டால் ரேபிஸ் வைரஸ் தாக்காமல் தப்பிக்க முடியும்.

நாயோ அல்லது வேறு ஏதேனும் விலங்கோ கடித்துவிட்டால், கடித்த இடத்தை ஓடும் நீரில் உடனே நன்றாகக் கழுவ வேண்டும். உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும். துணியால் கட்டக் கூடாது. நாய் கடித்த தினம், மூன்றாவது நாள், ஏழாவது நாள், இருபத்தெட்டாவது நாள் என நான்கு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். இந்தத் தடுப்பூசிகள், அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் இலவசமாகக் கிடைக்கும்’’ என்கிறார் மருத்துவர் சிவராமக் கண்ணன்.

- இரா.செந்தில்குமார்