சமூகத்துக்கு நன்கு அறிமுகமானவர்கள் கொரோனா தொற்றிலிருந்து தாங்கள் மீண்டு வந்ததை, சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் போஸ்ட்டாகப் பகிரும்போது, அதை வாசிக்கிற பலருக்கும் அதே பாசிட்டிவிட்டி பரவ ஆரம்பிக்கும். அப்படி, கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனின் மனைவி சாந்தா பாலகுமாரன். தானும், தன் சகோதரி கமலா பாலகுமாரனும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தைத் தன் முகநூல் பக்கத்தில் நேற்றைய தினம் பகிர்ந்திருந்தார். அவரிடம் பேசினோம்.

``வியாழக்கிழமை (ஜூலை 2) நைட்டுதான் நானும் கமலா அக்காவும் ஹாஸ்பிட்டல்லயிருந்து டிஸ்சார்ஜ் ஆனோம். நாங்க ரெண்டு பேருமே வயசானவங்க. நோய் எதிர்ப்பு சக்தி குறைச்சலாத்தானே இருக்கும்’’ என்று சிரித்தவர் தொடர்ந்து பேசினார். ``ரெண்டு பேருக்குமே நீரிழிவுப் பிரச்னை இருக்கு. அக்காவுக்கு மொதல்ல லோ சுகர் வந்துச்சு. அப்படியே யூரினரி இன்ஃபெக்ஷனும் வந்துடுச்சு. நானும் ரொம்ப பலவீனமா உணர ஆரம்பிச்சேன். செக் பண்ணிப் பார்த்தா, ரெண்டு பேருக்குமே கொரோனா பாசிட்டிவ்’’ என்கிற சாந்தா பாலகுமாரன், லாக்டெளன் ஆரம்பத்தில், சிலருக்கு மளிகைப் பொருள்கள் கொடுப்பது போன்ற உதவிகளைச் செய்து வந்திருக்கிறார்.
``லாக்டெளன் ஆரம்பிச்சப்போ கேட் வரைக்கும் ஒண்ணு, ரெண்டு தடவை வந்திருப்போம். அதுக்கப்புறம் வீட்டைத் தாண்டி நானும் அக்காவும் எங்கேயுமே போகலை. அப்படியும் அவங்களுக்கு கொரோனா வந்துடுச்சு. கூட இருந்த எனக்கும் பரவிடுச்சு. இப்போ சிகிச்சையெல்லாம் முடிஞ்சு நெகட்டிவ் ஆயிடுச்சு. ஆனா, ரெண்டு பேருமே ரொம்ப பலவீனமா இருக்கோம் என்பதால, மகள் ஸ்ரீகெளரியும் அவள் மகனும்தான் இப்போ எங்களைப் பார்த்துட்டு இருக்காங்க. இன்னும் 14 நாள்கள் க்வாரன்டீன்ல இருக்கணும்’’ என்பவர் நோயை வெல்லலாம் என்ற தன்னம்பிக்கை தந்து புன்னகைக்கிறார்.
குருவருளால மகன் சூர்யாவுக்கும் அவன் மனைவி, பிள்ளைக்கும் கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்னு வந்துடுச்சு.சாந்தா பாலகுமாரன்
``ஹாஸ்பிட்டல் சிகிச்சை பத்தி சொல்லியே ஆகணும். உணவே மருந்துங்கிற கான்செப்ட்டை ரொம்ப அழகா ஃபாலோ செஞ்சாங்க. கொரோனா மருந்துகளோடு ரெண்டு வேளையும் ஒரு கப் நிறைய ஆப்பிள் துண்டுகள், தினமும் எலுமிச்சை ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ்னு நீரிழிவுக்கு ஏத்தபடி கொடுத்தாங்க. காபி, டீ, பால் எதுவும் கிடையாது. சீக்கிரம் உடம்பு தேறணும் என்பதற்காக டாக்டர்ஸ் கொடுத்த எல்லாத்தையும் சாப்பிட்டோம். குருவருளால மகன் சூர்யாவுக்கும் அவன் மனைவி, பிள்ளைக்கும் கொரோனா ரிசல்ட் நெகட்டிவ்னு வந்துடுச்சு’’ என்கிறார் நிம்மதியுடன்.