
என் சமையலறையில்...
நாம் சமைக்கும் உணவுப்பொருள்கள் மட்டுமல்ல, சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள்கூட உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை. அந்த வகையில் எவர்சில்வர், அலுமினியம், இரும்பு, செம்பு என நாம் பயன்படுத்தும் பாத்திரங்களின் தன்மை, அவை தரக்கூடிய நன்மைகள் போன்ற தகவல்களைத் தருகிறார் இயற்கை மருத்துவர் தீபா.
செம்புப் பாத்திரங்கள்...
சருமப் பிரச்னைக்கு டாட்டா!
செம்புப் பாத்திரம் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ரத்த அணுக்கள் சீராக இயங்கத் தொடங்கி, ரத்தச் சோகை பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
செம்பில் உள்ள ஆன்டிபயாடிக் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மூட்டுவலியைக் குணப்படுத்தும். எனவே, மூட்டுவலி பிரச்னை உள்ளவர்கள் செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிவைத்து நான்கு மணி நேரம் கழித்துப் பருகலாம்.

செம்புப் பாத்திரத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது உடலில் செல் உருவாக்கம் அதிகரிக்கும். மேலும், தைராய்டு சுரப்பைச் சீராக்கும்.
உடலின் மெலனின் உற்பத்தி அதிகரிக்கும். மேலும், சருமம் சார்ந்த பிரச்னைகளுக்கு டாட்டா சொல்லலாம்.
செம்புப் பாத்திரத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிடும் தன்மை கொண்டது என்பதால் சோர்வை நீக்கி சுறுசுறுப்புடன் வைக்கும்.
உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்க உதவும்.

பயன்படுத்தும் முறை
செம்பு எளிதில் பாசி பிடிக்கும் தன்மை உடையது. சரியாகச் சுத்தம் செய்யாவிட்டால் பாத்திரத்தின் நிறம் மாறுவதோடு அதன் தன்மையும் மாறிவிடும். அதனால் செம்புப் பாத்திரத்தைச் சமையலுக்குப் பயன்படுத்துபவர்கள் அதை உடனே சுத்தம் செய்துவிட வேண்டும். தண்ணீர் வைக்கப் பயன்படுத்தினால் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். செம்புப் பாத்திரத்தைச் சுத்தம் செய்ய சோப்பைப் பயன்படுத்துவதைவிட எலுமிச்சைப்பழத் தோல் அல்லது புளி பயன்படுத்துவது நல்லது.
மண் பாத்திரங்கள்...
வயிற்றுக்கு நல்லவை!
மண் பாத்திரங்கள் உணவின் சூட்டை நீண்ட நேரம் தக்கவைத்துக்கொள்ளும் என்பதால், அவற்றில் சமைத்து சேமித்து வைக்கும் உணவுகள் சீக்கிரம் கெட்டுப்போகாது.
மண் பாத்திரங்களைத் தண்ணீரில் கழுவும்போது அதன் துகள்களில் நீர் தேங்கி, சமைக்கும்போது அது ஆவியாகி வெளியேறுமே தவிர, உணவில் உள்ள சத்துகள் ஆவியாவது தடுக்கப்படும். மேலும் மண்சட்டியில் உணவு சீக்கிரமே வெந்துவிடும் என்பதால், உணவில் உள்ள சத்துகள் ஆவியாகி வெளியேறாமல் உணவிலேயே தங்கி ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
மண்சட்டியில் சமைக்கும் உணவு ஆவியில் வேகவைத்த உணவுக்கு ஈடானது என்பதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படாது.
உலோகப் பாத்திரங்கள்போல அமிலத்தன்மை பாதிப்பு மண்சட்டியில் இல்லை என்பதால் செரிமானப் பிரச்னை ஏற்படாது; உணவுக்குழாய்க்கும் உகந்ததாக அமையும்.
உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவல்லது என்பதால் உடல் வெப்பத்தால் ஏற்படும் மலச்சிக்கல் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
மண்சட்டியிலிருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உணவுப்பொருளில் ஆரோக்கியத்தைச் சேர்க்கும்.
மண்சட்டியில் சமைக்கும்போது உணவுப்பொருள் சட்டியில் ஒட்டாது என்பதால் அதிக எண்ணெய் பயன்படுத்த வேண்டியிருக்காது.
உடலின் வெப்பநிலையைச் சீராக வைக்க உதவும்.

பயன்படுத்தும் முறை
புதிதாக வாங்கி வந்த மண் பாத்திரங்களை இரண்டு நாள்கள் தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவி வெயிலில் வைத்து எடுத்த பின்னரே சமையலுக்குப் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். மண்சட்டியில் உள்ள துகள்களில் உணவில் உள்ள பாக்டீரியாக்கள் தங்க வாய்ப்புள்ளது என்பதால் மண்சட்டியைத் தேங்காய் நார் பயன்படுத்தி, சாம்பல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அலசி வெயிலில் உலரவைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும். ஒருமுறை வெப்பமான மண்பாத்திரம் நீண்ட நேரம் அந்த வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் என்பதால், ஒரே பாத்திரத்தை அடுத்தடுத்து வெவ்வேறு உணவுகளைச் சமைக்கப் பயன்படுத்தலாம். காஸ் மிச்சமாகும்.
அலுமினியப் பாத்திரங்கள்...
அல்சர் பாதிப்பு உஷார்!
அலுமினியப் பாத்திரம் எளிதில் சூடாகும் தன்மை கொண்டது என்பதால் சீக்கிரமே சமைத்துவிடலாம்.
அலுமினியப் பாத்திரத்தில் தொடர்ந்து சமைக்கும்போது அந்த உலோகத் துகள்கள் உணவில் கலந்து வயிற்றுப்புண், அல்சர் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, கீறல் விழுந்த பாத்திரங்களில் சமைக்கும்போது இதற்கான வாய்ப்பு அதிகமாகும். இந்த உலோகத் துகள்களை நமது சிறுநீரகத்தால் சுத்திகரிக்க முடியாது என்பதால் சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்புண்டாகலாம்.
அலுமினியப் பாத்திரத்தில் புளிப்பு சுவையுள்ள உணவுகளைச் சமைக்கும்போது அது எதிர்வினை புரிந்து உணவுப்பொருள்கள் நச்சுத்தன்மை அடைய வாய்ப்பு அதிகம்.
டெஃப்லான் கோட்டிங் செய்யப்பட்ட அலுமினியப் பாத்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது அதில் உள்ள உலோகம் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணியாக மாறலாம்.
பயன்படுத்தும் முறை
அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும் போது மரக் கரண்டிகளைப் பயன்படுத்தவும். பாத்திரத்தில் புள்ளிகள், கீறல்கள் விழுந்துவிட்டால் அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். எளிதில் அடிப்பிடிக்கும் இந்தப் பாத்திரங்களில் உணவுப் பொருள்களை நீக்க சுத்தமாகக் கழுவ வேண்டும். இரும்பு நார் பயன்படுத்தித் துலக்கக் கூடாது.

இரும்புப் பாத்திரங்கள்...
ரத்தச் சோகைக்குத் தீர்வு!
இரும்புப் பாத்திரங்களில் சமைத்த உணவுகள் ரத்தச் சோகையை குணப்படுத்த உதவும்.
வெண்புள்ளி போன்ற சருமம் சார்ந்த பிரச்னைகள் சரியாகும்.
உடலின் சூட்டைத் தணிக்கும் என்பதால் அசைவ உணவுகள் தயாரிக்க ஏற்றது.
பயன்படுத்தும் முறை
இரும்புப் பாத்திரத்தில் சமைத்து முடித்த உடனே உணவை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றிவிட வேண்டும். வாழைப்பூ போன்ற துவர்ப்புச் சுவை கொண்ட உணவுப்பொருள்களை இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும்போது அதன் தன்மையும் நிறமும் மாறும் என்பதால் துவர்ப்புச் சுவை கொண்ட உணவுகளை இதில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். பாத்திரத்தில் கீறல்கள் விழுந்து இரும்புத்துகள் உணவில் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எவர்சில்வர் பாத்திரங்கள்...
அதிக எண்ணெய் தேவைப்படும்!
எவர்சில்வர் பாத்திரங்களில் உணவு சீக்கிரம் தயாராகிவிடும்; நேரம் மிச்சமாகும்.
எளிதில் துருப்பிடிக்கும் தன்மை கொண்டது என்பதால் அடிக்கடி பாத்திரத்தை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
நன்மை அளிக்கும் சத்துகளோ, தீங்கு விளைவிக்கக்கூடிய கூறுகளோ இரண்டுமே இல்லாதவை எவர்சில்வர் பாத்திரங்கள்.
எளிதில் அடிப்பிடிக்கும் தன்மை கொண்டவை என்பதால் அதிக எண்ணெய் செலவாகும்.
பயன்படுத்தும் முறை
சிறிய கீறல்கள் விழுந்தாலும் பாத்திரத்தை மாற்றிவிட வேண்டும். சோப்பு, சாம்பல் என எதைக்கொண்டு வேண்டுமானாலும் சுத்தம் செய்யலாம். தண்ணீர் சேமிக்கும் எவர்சில்வர் பானைகளை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.
பித்தளைப் பாத்திரங்கள்..
வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்!
பித்தளைப் பாத்திரத்தில் இருக்கும் துத்தநாகம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரவல்லது.
பித்தளைப் பாத்திரங்களைச் சமையலுக்குத் தொடர்ந்து பயன்படுத்தும் போது அஜீரணம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
வளர்சிதை மாற்றத்துக்குத் துணைபுரியும்.
பித்தளைப் பாத்திரத்தில் உள்ள தாமிரம் ரத்தச் சோகையைக் குணப்படுத்தும்.
பயன்படுத்தும் முறை
புளிப்புச் சுவையுள்ள பொருள்களைச் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். சாம்பல் அல்லது எலுமிச்சைச்சாறு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.