Published:Updated:

குழந்தையின்மை சிகிச்சைக்கு முன்... கவனிக்க வேண்டியவை! மருத்துவ வழிகாட்டல்

குழந்தையின்மைக்கான சிகிச்சை தொடர்பாக ஆலோசனை அளிக்கிறார் மருத்துவர் கமலா செல்வராஜ்.

குழந்தை
குழந்தை

குழந்தையின் சிரிப்பைப்போல ஒரு வீட்டை நிறைப்பது எதுவும் இல்லை. ஆனால், பல்வேறு காரணங்களால் தற்போது குழந்தைப்பேறு பலருக்குத் தள்ளிப்போகிறது. சிலருக்கு இயல்பாக நிகழ்வதில்லை. அந்தச் சூழலில் உள்ளவர்கள் மருத்துவர்களை அணுகுவதும் கர்ப்பம் தரிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் பெறுவதும் இயல்பு. அது குறித்து, சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

கமலா செல்வராஜ், மகப்பேறு மருத்துவர்
கமலா செல்வராஜ், மகப்பேறு மருத்துவர்

குழந்தையின்மைக்கான முக்கியக் காரணங்களாக எவற்றை வரையறுக்குறீர்கள்?

முதன்மையாக ஆறு காரணங்களைச் சொல்லலாம்.

* வயது தாமதித்து திருமணம் செய்துகொள்வது

* கர்ப்பப்பையில் சதைக்கட்டி (Fibroids)

* கருவகத்தில் ரத்தக்கட்டி (Chocolate Cysts)

* கர்ப்பப்பையில் தொற்று (PID - Pelvic inflammatory disease )

* காசநோய் (Tuberculosis)

* கணவன், மனைவி இருவரும் குழந்தைப்பேற்றுக்கான தங்களின் உடல் தகுதியில் குறை உள்ள நிலையில் அதுபற்றி அறியாமல் தரித்த கர்ப்பத்தையும் கலைப்பது மற்றும் கர்ப்பத்தைத் தவிர்க்க குழந்தை பிறப்பு தடுப்பு முறைகளை (Oral contraceptive pills, intrauterine device(IUD)) கையாள்வது குழந்தையின்மைக்கு முக்கியக் காரணங்களாக அமையும்.

குழந்தையின்மை சிகிச்சையில் பின்பற்றப்படும் மருத்துவத் தொழில்நுட்பங்கள் பற்றி..?

குழந்தை
குழந்தை

* இன்ட்ரா யூட்ரைன் இன்செமினேஷன் (Intrauterine insemination - IUI)

* இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன்( In vitro fertilisation - IVF)

* இன்ட்ராசைட்டோப்ளாஸ்மிக் ஸ்பெர்ம் டிரான்ஸ்ஃபர் (Intracytoplasmic sperm injection - ICSI)

* இன்ட்ராசைட்டோப்ளாஸ்மிக் மார்ஃபாலாஜிக்கலி செலக்டட் ஸ்பெர்ம் இன்ஜெக்‌ஷன் (Intracytoplasmic morphologically selected sperm injection - IMSI)

* ப்ரீஇம்ப்லான்டேஷன் ஜெனெடிக் ஸ்கிரீனிங் (Pre-implantation genetic screening - PGS)

இவையெல்லாம் குழந்தையின்மை சிகிச்சைக்கான அதிநவீன சிகிச்சை முறைகள். இதில் யாருக்கு என்ன சிகிச்சை என்பது, சம்பந்தப்பட்ட தம்பதியின் உடல்நிலையின் அடிப்படையில் முடிவுசெய்யப்படும். அதற்கான பரிசோதனைகளில், பெண்களுக்கு கருப்பையின் அளவு மற்றும் வடிவம் ஸ்கேன் பரிசோதனை மூலமாகவும், கருப்பையின் தோற்றம், இணைக்குழாய் அடைப்பு போன்றவை பிரத்யேக எக்ஸ்-ரே மூலமாவும் (HSG), கர்ப்பப்பை, கருவகம், கருஇணைக்குழாய் ஆகியவற்றை லாப்பரோஸ்கோப்பி மூலமும் பரிசோதனை செய்யப்படும். ஆண்களுக்கு விந்தணு பரிசோதனை (Semen analysis) செய்யப்படும்.

இந்தச் சிகிச்சை முறைகளால், குழந்தையில்லாத ஆயிரக்கணக்கான தம்பதிகள் பெற்றோர்கள் ஆகியிருக்கிறார்கள். இந்தத் தொழில்நுட்ப சிகிச்சைகளில், தம்பதிகளின் பிரச்னையை நன்கு ஆராய்ந்து அதற்குத் தேவையான சரியான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.'

இந்த மெடிக்கல் டெக்னிக்குகள் மூலம் குழந்தை பிறப்பதற்கான சாத்தியக் கூறுகள் எத்தனை சதவிகிதம்?

சராசரியாக 30% - 60% வரை.

இந்தச் சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும் தம்பதிகள் கவனிக்க வேண்டிய மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் எனென்ன?

குழந்தைப்பேற்றுக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வரும் தம்பதிகள், கொஞ்சமும் காலம் கடத்தாமல், நல்ல திறமையும் அனுபவமும் நிறைந்த மருத்துவரைத் தேர்வு செய்து அவரிடம் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். மருத்துவமனையைப் பொறுத்தவரை, விளம்பரங்கள், சலுகைகளைப் பார்த்து ஏமாறாமல், அங்கு குழந்தையின்மைக்கான நவீன சிகிச்சைகள் அளிக்கும் வசதிகள் இருக்கின்றனவா, அதற்குத் தகுதியுடைய மருத்துவக் குழு இருக்கிறதா என்று அறிந்துகொள்ள வேண்டும். அடுத்ததாக, மருத்துவர் கூறும் ஆலோசனைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். சொல்லப்போனால், வேதவாக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் அறிவுறுத்த வேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமாக, சிகிச்சை ஆரம்பித்த நொடியிலிருந்து மனதளவில் முழு நம்பிக்கையுடனும் பாசிட்டிவிட்டியுடனும் இருக்க வேண்டும்.