Published:Updated:

`பிறந்ததற்கு நன்றி' என்பதுதான் பிறந்தநாள் வாழ்த்து! - `லெஜண்ட்' சார்லி சாப்ளின் பிறந்தநாள் பகிர்வு

உங்கள் ஆழ்மனதை அழுத்திக்கொண்டிருக்கும் வலிகளை மறந்து, உடலைத் தின்றுகொண்டிருக்கும் பிணிகளை மறந்து, வயிற்றுவலியையும் கண்ணீரையும் பசியால் அல்லாது சிரிப்பால் வழங்கும் ஒருவரை அதிகப்படியாக என்னவென்று அழைக்கலாம், ரட்சகர்? அப்படியெனில் சார்லி சாப்ளின், மனித குலத்தின் ரட்சகர்.

அமெரிக்காவுக்குப் பிழைக்க வந்தவர், அமெரிக்க அதிபரை விஞ்சிய புகழும், பணமும் ஈட்டியவர். மடுவென நிரம்பியிருக்கும் கண்ணீரை, வடுவையே கற்களாக்கி பாதையமைத்துக் கடந்தவர். சினிமாவின் வரலாற்றை இவர் பெயரின்றி இரண்டடி கவிதையாகக்கூட இயற்ற இயலாது. இவரை ரசிக்காத சினிமா கலைஞர்களே கிடையாது. கறுப்பு, வெள்ளை மௌனப் படங்களில் தன் பயணத்தைத் தொடங்கியவர், இன்று அனிமேஷன் வடிவம் வரைப் பயணித்து வந்திருக்கிறார்.

ஹென்னா ஹில் எனும் நாடக நடிகை, தன் முதல் கணவரிடமிருந்து பிரிந்து வந்து சார்லஸ் சாப்ளின் எனும் நடிகரை திருமணம் செய்துகொள்கிறார். ஹென்னாவுக்கு ஏற்கெனவே ஒரு சிட்னி ஜான் ஹில் எனும் மகன் இருக்க, சார்லஸ் உடனான பந்தத்தில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி இன்னொரு மகனைப் பெற்றெடுக்கிறார். அவனுக்கு சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் எனப் பெயரிடுகிறார்கள். காலத்தின் போக்கில், மதுபோதைக்கு அடிமையாகும் சார்லஸ், அவர் மனைவி ஹென்னா மற்றும் இரண்டு மகன்களையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். வறுமையின் காரணமாக வயிற்றில் பசியும், கண்களில் கண்ணீரும் மூவருக்கும் நிரந்தரமாகிப்போகிறது. நாடக உலகில் சோபிக்காத ஒரு நடிகை, தன் மகன்களுக்கு உணவு ஊட்ட முடியாத நிலையில், `நீ வருங்காலத்தில் இந்த உலகமே போற்றும் பெரிய வெற்றியாளனாக வருவாய்' எனும் நம்பிக்கை வார்த்தைகளை மட்டுமே ஊட்டிவளர்க்கிறார்.

charlie chaplin
charlie chaplin

சார்லி சாப்ளினுக்கு ஏட்டுக்கல்வி ஏறவில்லை. நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்கிறார். தாயின் வழியில் தானும் நடிப்புத்துறைக்கே செல்லலாம் என நினைத்துக்கொண்டிருக்கையில், எதேச்சையாக அவருக்கு நடிக்கும் வாய்ப்பொன்று அமைகிறது. சாப்ளினுக்கு இயல்பிலேயே நடிப்புத்திறன் இருக்கிறதென நம்புகிறவர் ஹென்னா. அவர் நம்பிக்கை சரிதான் எனும் வகையில், எவ்வித முன்னேற்பாடு இல்லாதபோதும் சிறப்பாக நடித்த சார்லியைக் கண்டு எல்லோரும் அதிசயித்துப்போனார்கள். மகனின் திறமை, ஹென்னாவுக்கு சிறு மகிழ்ச்சியைத் தந்திருந்தாலும், அதைவிட அவர் வாழ்க்கையில் சந்தித்த இன்னல்கள் அவரை மனநோயில் தள்ளி மனநலக் காப்பகத்தில் கிடத்துகிறது. தன் மகன் நடிகனாக அவதரித்த அதே மேடைதான், ஹென்னா அரிதாரம் பூசிய கடைசி மேடையும். இருமுறை குணமடைந்து, மீண்டும் பாதிப்படைந்து மூன்றாவது முறையோ நிரந்தர மனநோயில் சிக்கிவிட்டார் ஹென்னா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிறகு, நடிப்பையே முழுநேரப் பணியாக எடுத்துக்கொண்டு இரவு நேர பார்களின் மியூசிக் ஹால் நிகழ்ச்சிகளில் நடித்து வந்த சாப்ளினின் நடிப்புத்திறமை படிப்படியாக வளர்ச்சி கண்டது. அனுபவம் அவருக்குப் பெரும் பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. அதை அவர் உள்வாங்கிக்கொண்டார். அப்போது நாடக உலகில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த வில்லியம் ஜில்லடின் `ஷெர்லக் ஹோல்ம்ஸ்' நாடகத்தில் சாப்ளினுக்குப் பணிப்பையன் வேடம் கிடைத்தது. அதில் அநாயசமாக அடித்துநொறுக்க, சாப்ளினுக்கு மேலும் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அத்தனை வாய்ப்புகளையும் கலையின் மீது நேர்மையும், திறமையின் மீது நம்பிக்கையும்கொண்டு பயன்படுத்திய சாப்ளினுக்கு, சினிமா வாய்ப்பு தேடிவந்தது. அதன் பின் நடந்தவை பெரும் வரலாறு!

charlie chaplin
charlie chaplin

புகழ், பணத்தோடு சர்ச்சைகளும் ஒட்டிக்கொண்டு வந்தன. சார்லி, இளம்பெண்களைத் தன் காதல் வலைக்குள் சிக்கவைக்கிறார். இவர் ஒரு சமூகவிரோதி, படங்களில் தவறான கருத்துகளை முன்வைக்கிறார், குடியுரிமை ஏதுமின்றிப் பல வருடங்களாக அமெரிக்காவில் குடி கொண்டிருக்கிகிறார் எனப் பல்வேறு புகார்களைக் கிளப்பினார்கள். அவர் ஒரு கம்யூனிஸ்ட் எனக் கதறினார்கள். ஹிட்லர், பிறந்து சரியாக நான்கு நாள்கள் கழித்து சாப்ளின் பிறந்தார்.

இன்னும் ஆச்சர்யமாக, அந்த அரை இன்ச் மீசையே இருவருக்குமான அடையாளமாகிப்போனது. தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் அவல நிலையை மையமாக வைத்து தனது பாணியிலேயே `மாடர்ன் டைம்ஸ்' திரைப்படத்தை எடுத்தார் சார்லி. அப்படத்தை ஜெர்மனியில் திரையிட தடைவிதித்தார் ஹிட்லர். அதன் பின் ஹிட்லரை நையாண்டி செய்து இவர் எடுத்த `தி கிரேட் டிக்டேட்டர்' திரைப்படத்தை யாருக்கும் தெரியாமல் ஹிட்லர் இருமுறை பார்த்ததாகச் சில செய்திகள் உண்டு.

அமெரிக்க அரசாலும், சில மக்களாலும் பல சர்ச்சைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கப்பட்ட சாப்ளினின் அமெரிக்காவுடனான உறவு, ஒருகட்டத்தில் முறிந்தேபோனது. லண்டனுக்குப் படத்தை விளம்பரம் செய்யச் சென்றவரால், மீண்டும் அமெரிக்காவில் நுழைய முடியவில்லை. தான் சம்பாதித்ததைப் பெரும் அளவில் ஏழை எளிய மக்களுக்குச் செலவழித்து வந்த சாப்ளின் மீதமிருந்த சொத்துகளை விற்று சுவிட்சர்லாந்து சென்று அங்கு ஒரு மாளிகையில் குடியேறினார். அங்கிருந்தும் தனது படங்களை உருவாக்கி வந்தார். அப்படி, அவர் உருவாக்கிய `எ கிங் இன் நியூயார்க்' அமெரிக்காவின் அப்போதைய சமூகச்சுழலை அடித்துத் துவைத்தது. பிறகு 18 ஆண்டுகள் கழித்து 1971-ம் ஆண்டு அவரை நாட்டை விட்டு விரட்டிய அதே அமெரிக்கா, மீண்டும் அழைத்து சிறப்பு ஆஸ்கர் விருது வழங்கி கெளரவித்தது.

charlie chaplin
charlie chaplin

சாப்ளின் வாழ்க்கையைப் படிப்பவர்கள் அனைவரும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். சாப்ளின் அவர் வாழ்வில் சந்தித்த பிரச்னைகள் எல்லாம் நாம் நினைத்துப் பார்க்கமுடியாதவை. ஒரு மனிதனுக்கு ஏன் இத்தனை இன்னல்கள் எனக் கண்ணீர் சுரக்கவைப்பவை. உன்ன உணவின்றி லண்டனின் ஏதோவொரு தெருவோரத்தில் சுருண்டு அமர்ந்திருந்த ஒரு சிறுவன், தன் திறமையால், தன் உள்ளத்தால் மொத்த உலகையும் திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறான். தன்னைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் இன்றுவரை நேர்மறை எண்ணங்களைப் பாய்ச்சிக்கொண்டிருக்கிறான். இப்படி ஒரு வாழ்க்கையை யாராலும் வாழ்ந்திருக்க முடியாது! பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி என்னவாகப் போகிறது, நீங்கள் பிறந்ததற்கு நன்றி வேண்டுமானால் சொல்கிறேன்.

நன்றி சார்லி சாப்ளின்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு