Published:Updated:

`நாங்களும் மனிதர்கள்தான்; ஆனா மூளை இருக்கு!' - `Heil Hitler'-ஐ பகடி செய்த `ஜோஜோ ரேபிட்'

கார்த்தி

10 வயது சிறுவனான ஜோஜோவும் கற்பனை ஹிட்லரும் பேசிக்கொள்ளும் காட்சிகள், ஒரு சர்வாதிகாரியின் நம்பிக்கைகளுக்கு ஒரு நாடு கீழ்ப்படிந்தால், எத்தகைய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணங்கள்.

2019-ம் ஆண்டு ஆஸ்கருக்கு, இரு உலகப் போர் படங்கள் தேர்வாகி இருக்கின்றன. அப்படியே ரீவைண்டு பட்டனை அழுத்தினால், கடந்த ஆண்டும் `தி டார்க்கஸ்ட் ஹவர்', `டன்கிரிக்' என இரு உலகப் போர் படங்கள் ஆஸ்கர் லிஸ்ட்டில் இருந்தது நினைவிருக்கலாம். `1917' படம், ஒளிப்பதிவுக்கும் படத்தொகுப்புக்கும் பாராட்டுப்பெறும் என்றால், இந்த வாரம் வெளியாகியிருக்கும் `ஜோஜோ ரேபிட்', அரிதிலும் அரிதாக ஹாலிவுட்டில் வெளியாகும் சிறுவர் சினிமாவாகப் பளிச்சிடுகிறது.

JOJO Rabbit
JOJO Rabbit
ஆஸ்கர் வெல்லப் போவது யார்?

இரண்டாம் உலகப் போர்க் களத்தில் நடக்கும் ஒரு நகைச்சுவை மென்சோகக் கதைதான் `ஜோஜோ ரேபிட்.' ஹிட்லர் நாஜிப் படைகளின் இளைஞர் முகாமில் , தாய் ரோஸியுடன் வளர்கிறான் `ஜோஜோ.’ முயலைக்கூட கொல்லத் துணியாத ஜோஜோவுக்கு, ஹிட்லரின் உருவத்தையொத்த கற்பனை மனிதன் ஒருவன் நண்பனாகிறான். ஹிட்லர்தான் எல்லாம் என நம்ப ஆரம்பிக்கும் ஜோஜோவுக்கு, அவனின் தாய் ரோஸி, எல்சா என்ற ஒரு யூதப் பெண்ணைக் காப்பாற்ற முயல்வது தெரியவருகிறது. அந்தப் பெண்ணின் நட்புக்கான விலையாக, ஜோஜோ எவற்றையெல்லாம் இழக்கிறான் என்பதைத் தன் நகைச்சுவை கதைசொல்லலின் மூலம் திரைப்படமாக்கியிருக்கிறார் 'தோர்: ரக்னராக்' புகழ் டைக்கா வட்டிட்டி.

ஜோஜோ ரேபிட்டாக டேவிஸ். ஒரு தேசத்தில் பிறந்ததற்காகவே, யூதர்களை வெறுக்க வேண்டும் என்கிற தத்துவத்தோடு வளரும் சிறுவன். முயலை விட்டுவிடச் சொல்லி கதறுவதில் ஆரம்பித்து, அவனே வெடிகுண்டுகளைத் தூக்கியெறிந்து பீதியாக்குவது என அந்தக் கதாபாத்திரம் ரகளையோ ரகளை. மெல்ல மெல்ல அவனுக்குள் யூதர்கள் மீதான தவறான பிம்பம் விலகுவது அருமை. அதேபோல், இறுதிக் காட்சியில், முயல்குட்டிபோல் அவன் பயந்து ஓடுவது ஓர் அழகிய முரண். தாய் ரோஸியாக ஸ்கார்லெட் ஜோஹான்சன். இந்தப் படத்துக்காக `துணை நடிகை’, `மேரேஜ் ஸ்டோரி' படத்துக்காக `நடிகை’ என ஸ்கார்லெட் ஜோஹான்சனுக்கு இம்முறை இரண்டு பரிந்துரைகள். ஆனால், அந்தளவுக்கு கனமான வேடமில்லை.

JOJO Rabbit
JOJO Rabbit

படத்தின் மிகப்பெரும் பலம் அதன் வசனங்கள். ஹிட்லரின் கற்பனை உருவமாக வரும் இயக்குநர் டைக்கா வட்டிட்டி, ஹிட்லரை கொடூரத்துக்கு நக்கல் செய்திருக்கிறார். 10 வயது சிறுவனான ஜோஜோவும் கற்பனை ஹிட்லரும் பேசிக்கொள்ளும் காட்சிகள், ஒரு சர்வாதிகாரியின் நம்பிக்கைகளுக்கு ஒரு நாடு கீழ்ப்படிந்தால், எத்தகைய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`என்ன செய்யட்டும்' என ஜோஜோ கேட்க, `வீட்டைக் கொளுத்திவிட்டு , சர்ச்சிலின் மேல் பழிபோட்டுவிடலாம்' என டூப்ளிகேட் ஹிட்லர் சொல்வதெல்லாம் வேற லெவல் நக்கல். நம் நாட்டிலும் சில தலைவர்களின் பெயர்களை இவ்வாறாக சிலர் பயன்படுத்தப்படுவதால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. யூதர்களுக்கு உதவிய நாஜிக்கள், ஹிட்லரின் அரச வழக்கப்படி, தூக்கிலிடப்படுகிறார்கள். `இவர்கள் என்ன தவறு செய்தார்கள்' என ஜோஜோ கேட்க, `அவர்களால் முயன்றதைச் செய்தார்கள்' என ஜோஜோவின் தாய் ரோஸி சொல்லும் பதில் எல்லாம் அவ்வளவு ஆத்மார்த்தமானது. ஜோஜோவிடம், பதுங்கிவாழும் யூதப்பெண்ணான எல்சா, `நாங்களும் உங்களைப்போல மனிதர்கள்தாம். ஆனால், எங்களுக்கு மூளை உண்டு' என்பது போன்ற சில வசனங்கள் எல்லாம் ஷார்ப். `Heil Hitler' என்பதைக்கூட நுண்பகடி செய்திருக்கிறார்கள்.

Jojo Rabbit
Jojo Rabbit
யுத்த சாட்சியம்!

நிஜ வாழ்வில் யூதரான டைக்கா வட்டிட்டி, இதில் ஹிட்லரின் உருவத்தை மட்டும் வார்த்து, அதில் குழந்தைகளுக்கான நகைச்சுவையைக் கூட்டியிருக்கிறார். கிறிஸ்டின் லியூனென்ஸின் `கேஜிங் ஸ்கைஸ்' என்னும் நாவலைத் தழுவி எழுதப்பட்டிருக்கும் திரைக்கதையில், சுவாரஸ்யங்களுக்குப் பெரிதாக வேலையில்லை.

அதேபோல், சிறுவர்களுக்கான சினிமா என்பதால், உலகப் போர் படங்களுக்கே உரித்தான ரத்தம் தெறிக்கும் காட்சிகளுக்கோ, சுவர்களைத் துளைக்கும் தோட்டக்களின் சத்தங்களுக்கோ பெரிய வேலையில்லை. இத்தாலிய சினிமாவான `லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' படத்தின் இறுதிக்காட்சியை நினைவுபடுத்தும் ஜோஜோ ரேபிட்டின் இறுதிக்காட்சி, நம்முள் அவ்வளவு வலியைக் கடத்தத் தவறுவது, படத்திலிருக்கும் அதீத நகைச்சுவை காட்சிகளால்தான். ஆனால், சிறுவர்கள் எந்தப் பாதையை தங்களின் வளரும் பருவத்தில் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதை, சிறுவர்களுக்கான மொழியில் சொல்லி அசத்துகிறது ஜோஜோ ரேபிட்.

ஜெர்மன் மொழி கவிஞரான ரில்கேவின் வரிகளுடன் முடிகிறது ஜோஜோ ரேபிட்.

உங்கள் வாழ்க்கை அழகாக நேரிடலாம்.
கோரமாகவும் நேரிடலாம்.
எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.
சென்று கொண்டே இருங்கள்
இங்கு எந்த உணர்வும் நிரந்தரமல்ல..!

ஹிட்லரை நக்கல் செய்யும் படம் என்றதும் நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சார்லி சாப்ளினின் `தி கிரேட் டிக்டேட்டர்'தான். அதேபோல், கோமாளி ஹிட்லர் என்றதும் நமக்கு `ஜோஜோ ரேபிட்'டில் வரும் டைக்காவின் முகமும் இனி பளிச்சடலாம்.

ஜோஜோ ரேபிட் டிரெய்லர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு