2022 குருப்பெயர்ச்சி விருச்சிகம் ராசிபலன்கள்

5ஏப்ரல்2022

வாக்கு சாதுர்யம் மிகுந்தவர் நீங்கள். குருபகவான், தற்போது 14.4.22 முதல் 22.4.23 வரை ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்கிறார். உங்களைப் புதிய பாதையில் பயணிக்க வைப்பார். வாழ்வில் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெளிவாக முடிவுகளை எடுப்பீர்கள்.

ல்யாணம், கச்சேரி என்று வீடு களைகட்டும். குடும்பத்தில் கலகமூட்டியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்கித் தள்ளுவீர்கள். கணவன்-மனைவிக்குள் இனி அந்நியோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல இடத்தில் மணப்பெண் அமையும். அவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பங்கு கைக்கு வரும். தாயாருக்கு இருந்த நோய் விலகும்.

வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். அதேநேரம், சொந்த இடம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் குணம் தளரும். குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள்.

சிலருக்கு, பெரிய நோய் இருப்பது போன்ற பிரம்மை விலகும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்த வர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். நீண்டகாலமாக தள்ளிப் போய்க் கொண்டிருந்த வழக்கில் தீர்ப்பு உங்களுக்குச் சாதக மாகும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை கொஞ்சம், கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். நட்பு வட்டத்தால் பலன் அடைவீர்கள். கடந்த காலத் தவறுகள் மீண்டும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.

குருபகவானின் பார்வை பலன்கள்

குரு 9-ம் வீட்டைப் பார்ப்பதால் தந்தையுடன் கருத்துவேறுபாடுகள் மறையும். நாடாளுபவர்கள், உதவுவார்கள். உங்களுடைய லாப வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வாகனத்தை மாற்றுவீர்கள். இழுபறியான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பழுதான எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை மாற்றுவீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் சேரும். பழைய கடன் சுமை குறையும். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவார்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்

14.4.22 முதல் 29.4.22 வரையிலும் உங்களின் தன பூர்வப் புண்யாதிபதியான குரு, தனது நட்சத்திரத்திரமான பூரட்டாதியில் 4-ம் பாதத்தில் செல்வதால், சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தள்ளிப்போன திருமணம் கூடி வரும். வீடு, மனை வாங்குவீர்கள். பேச்சில் தடுமாற்றம் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். புண்ணிய ஸ்தலங்களில் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும்.

30.4.22 முதல் 24.2.23 வரையிலும் தைரிய சுகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். ஆலயத்தைப் புதுப்பிக்க உதவுவீர்கள். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குருபகவான் வக்ரத்தில் செல்வதால், வேலைச் சுமையும் அதனால் பதற்றமும் அதிகரிக்கும். அதேநேரம் எதிர்பாராத சில காரியங்கள் எளிதில் முடிவடையும். தாயாருக்கு மூட்டு வலி வரக்கூடும்.

24.2.23 முதல் 22.4.23 வரை குரு உங்கள் அஷ்டம லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத் தில் செல்வதால், கொஞ்சம் அலைச்சல் இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். மூத்த சகோதரர் உதவுவார். தூக்கம் குறையும். அயல்நாட்டுப் பயணம் அமையும்.

வியாபாரத்தில்:

போட்டியாளர்களைத் திணறடிப்பீர் கள். வருமானம் உயரும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அரிசி, எண்ணெய், மருந்து, ரசாயன வகைகள், ஏற்றுமதி-இறக்குமதி வகை களால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களுடனான கருத்து வேறுபாடுகள் மறையும்.

உத்தியோகத்தில் உங்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி வலிய வந்து பேசுவார். வேலைச்சுமை குறையும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி பதவி உயர்வு வாய்க்கும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, நினைத்ததை நிறைவேற்றும் வல்லமையைத் தருவதாக அமையும்.

பரிகாரம்: அசுவினி நட்சத்திர நாளில் திருச்செந்தூரில் அருள்புரியும் ஶ்ரீமுருகப்பெருமானையும், ஶ்ரீதட்சிணாமூர்த்தியையும் வணங்கி வாருங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்; நிம்மதி பெருகும்.

மேஷம்