Vikatan

குருவுக்கெல்லாம் குரு!

'மனம் முழுவதும் தாயார் விநதையைப் பற்றிய ஏக்கமும் தவிப்புமாக, இரண்டு இறக்கைகளையும் விரித்து விண்ணில் பறந்து கொண்டிருந்தான் கருடன்! உடல் வேகமாக இயங்கினாலும் மனசு மட்டும் துக்கத்தில் துவண்டிருந்தது. காரணம்... தாயார் இப்போது அடிமையாக இருக்கிறாள். அதுவும் யாரிடம்? மாற்றாந்தாயான கத்ருவிடம்! அன்னையை மீட்டாக வேண்டும்.

'அமிர்தக் கலசத்தைக் கொண்டு வந்தால், உன் அன்னையை அந்தக் கணமே விட்டுவிடுகிறேன்' என்று கத்ரு சொல்ல... அதனைக் கொண்டுவரத்தான் பறந்து கொண்டிருக்கிறான் கருடன்!

தேவலோகத்தில் இருந்து அமிர்தக் கலசத்தைக் கொண்டு வருவது என்றால் சும்மாவா? கருடனின் எண்ணத்தை அறிந்த இந்திரன், வஜ்ராயுதத்தை கருடன் மீது ஏவினான்; பெருமை மிக்க ஆயுதத்துக்கு தன்னால் களங்கம் ஏதும் வந்து விடக்கூடாது என பதறியவன், தன் இறக்கையில் இருந்து சில சிறகுகளை வஜ்ராயுதத்துக்கு பலி கொடுத்தான்! இதில் மகிழ்ந்த இந்திரன், கருடனை அணைத்துக் கொண்டான்; அவனுக்கு நெருங்கிய தோழனானான்.

பின்னர் இந்திரனின் உதவியுடன் அமிர்தக் கலசத்தை எடுத்துக் கொண்டு, உற்சாகமும் குதூகலமும் பொங்க பறந்து வந்த கருடன், அப்படியே தரையிறங்கி, குருவுக்கும் குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியை தரிசித்து, அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டான். அதை அடுத்து கருடன், தாயை மீட்ட கதைதான் தெரியுமே!

இப்படி ஸ்ரீகருடாழ்வார் அமிர்தாபிஷேகம் செய்து வழிபட்ட தட்சிணாமூர்த்தி குடிகொண்டிருக்கும் தலமே ஆலங்குடி!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடி எனும் ஊரில் அழகுற அமைந்துள்ளது ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் திருக் கோயில். கும்பகோணத்தில் இருந்து சுமார் 17 கி.மீ. தொலைவு. நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவு!

சிவபெருமான், ஆலகால விஷத்தை அருந்தி தேவர்களைக் காப்பாற்றினார் அல்லவா? எனவே, இந்தத் தலத்து இறைவனுக்கு ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் என்று திருநாமம்! அம்பாள் ஏலவார்குழலியம்மையும் சக்தி வாய்ந்தவள்; கருணைத் தெய்வம்! இங்கே... கலங்காமற் காத்த விநாயகரும் அருள்புரிகிறார்! இவர்கள் அனைவரும் அருள்பாலிக்கும் அற்புதத் தலத்தின் நாயகன்- ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்திதான்!

திருமால், பிரம்மா, ஸ்ரீலட்சுமி, கருடாழ்வார், ஐயனார், வீரபத்திரர் ஆகிய தெய்வங்கள், தனித்தனியே லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அற்புதத் தலம்; விஸ்வாமித்திரர், அகத்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகபிரம்மம் ஆகிய முனிவர்கள் வழிபட்ட பிரமாண்ட ஆலயம்; அஷ்டதிக் பாலகர்கள், முசுகுந்த சக்கரவர்த்தி, சுந்தரர் ஆகியோரும் வணங்கி அருள் பெற்ற திருக்கோயில்; ஞானசம்பந்தர் பாடிப் பரவிய புண்ணிய பூமி என சிறப்புகள் பல கொண்ட தலம்!

அமைச்சரை சிரச்சேதம் செய்த தோஷத்துக்கு ஆளான மன்னன் ஒருவனுக்கு தோஷ நிவர்த்தி தந்த தலம், இன்றைக்கும் பக்தர்களின் சகல தோஷங்களையும் நீக்கி அருள் மழை பொழிகிறது!

குறைகள் களையும் குரு வழிபாடு

ஆதிசங்கரர், குருமாலா மந்திரத்தால் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு, ஆய கலைகளையும் பெற்ற இந்தப் புண்ணியத் திருத்தலம், குருவருளுடன் ஈசனின் திருவருளையும் பெற்றுத் தரும் மகத்துவம் வாய்ந்தது. இங்கே, வெகு விமரிசையாக நடைபெறும் குருப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு, அம்மையப்பனையும், ஆலமர்ச் செல்வரையும் தரிசித்தால்... இன்னல்கள் நீங்கும்; இல்வாழ்வு செழிக்கும்!