தனுசு - Guru Peyarchi Palangal 2023 - 2024 (TAMIL)

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2023-2024 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

தனுசு - குரு பெயர்ச்சிப் பலன்கள்

எப்போதும் சமாதானத்தை விரும்பி சாந்தமாக உரையாடும் தனுசு ராசி அன்பர்களே... இதுவரை உங்கள் சுகஸ்தானமான மீனத்தில் அமர்ந்து பலன்தந்துகொண்டிருந்த குருபகவான் இனி பூர்வ புண்ணிய ஸ்தானமான மேஷத்தில் அடியெடுத்து வைக்க இருக்கிறார். இதுவரை எதையும் அனுபவிக்க முடியாமல் திண்டாடினீர்களே... அந்த நிலை மாறும். இழப்புகளும் ஏமாற்றங்களும் தந்த வலியிலிருந்து மீள்வீர்கள். குருபகவான் 5 ம் வீடான மேஷத்தில் 22.4.2023 முதல் 1.5.2024 அமர்ந்து பலன் தரப்போகிறார் என்பதால் இனி எதிலும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருந்துவந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். வீட்டில் சந்தோஷம் குடிகொள்ளும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்திருந்த தம்பதியினருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தடைப்பட்டுக்கொண்டிருந்த சுபகாரியங்கள் நடந்தேறும்.

குருபகவான் உங்கள் ராசியை 9 - ம் பார்வையால் பார்ப்பதால் நிம்மதிபிறக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சிலர் வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்குக் குடிபுகுவார்கள். அந்தஸ்து உயரும். மேலும் உங்கள் ராசிக்கு 9,11 ஆகிய வீடுகளையும் குருபகவான் பார்ப்பதால் சொந்தங்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வழக்குகளில் வெற்றிகிடைக்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

22.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை

குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு கொஞ்சம் அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். யோகா, தியானம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை

இந்தக் காலகட்டத்தில் பரணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பூராடம் நட்சத்திரக்காரர்கள் புதியவர்களை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம். என்றாலும் புதிய திட்டங்கள் நிறைவேறும். சவாலான காரியங்களைக் கூட எளிதில் முடிப்பீர்கள்.

17.4.2024 முதல் 1.5.2024 வரை

குருபகவான் உங்கள் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1 - ம் பாதத்தில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் புதிய வேலை கிடைக்கும். அரசால் ஆதாயமடைவீர்கள். திடீர் பணவரவு உண்டு.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்: 11.9.2023 முதல் 20.12.2023 வரை

குருபகவான் வக்ர கதியில் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் வந்து நீங்கும். வாகனப் பழுது, பணப்பற்றாக்குறை வந்து செல்லும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

வியாபாரிகள் : போட்டியாளர்களுக்கு மத்தியில் திணறிய வியாபாரத்தை மீண்டும் புதுப் பொலிவு பெறச் செய்வீர்கள். உங்களின் அணுகுமுறை மாறும்.கடையை விரிவுபடுத்தி நவீனமாக்குவீர்கள். சலுகைகள் மூலம் வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உணவு, தங்கும் விடுதி, கமிசன், எண்டர்பிரைஸ், துணி வகைகளால் லாபமடைவீர்கள். ஜூன், ஜூலை மாதங்களில் புதிய முதலீடு செய்வீர்கள். சங்கத்தில் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் : அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். இனி சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு கூடும். வேலைச்சுமையும் குறையும். மேலதிகாரியுடனான பனிப்போர் நீங்கும். ஜூன், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் எதிர்பார்த்த பதவி உயர்வு தேடி வரும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி வாடியிருந்த வாழ்வைவில் புது வசந்தம் வீசுவதாகவும் பணவரவையும், பதவி சுகத்தையும் தருவதாகவும் அமையும்.

முழுமையான குருப்பெயர்ச்சி பலன்கள் இங்கே..!