Vikatan

Guru Peyarchi Palangal 2018 to 2019 in Tamil - தனுசு

அக்டோபர் 4-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2018-2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

Astro icon

உழைப்புக்கு முக்கியத்துவம் தருபவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருந்த குருபகவான் 4.10.18 முதல் 28.10.19 வரை உங்கள் ராசிக்கு விரயஸ்தானமான 12-ல் அமர்கிறார். வேலைச்சுமையும் அலைச்சலும் அதிகரித்தபடி இருக்கும். செலவுகள் அதிகரித்தபடி இருக்கும். பிரசித்தி பெற்ற புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீட்டைப் புதுப்பித்துக் கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிக்கனமாக இருக்க நினைத்தாலும் செலவுகள் அவசியமான செலவுகள் ஏற்பட்டபடி இருக்கும். குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவற்றைப் பெரிதுபடுத்தவேண்டாம்.

பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் பொறுமையுடன் அனுசரித்துச் செல்லவும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட பயணங்கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். மனதில் பட்டதைப் பேசி மற்றவர்களின் மனக்கசப்புக்கு ஆளாக நேரிடும் என்பதால் கவனம் தேவை. பழைய கடன்களால் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். மகனின் கல்வி, வேலை பற்றிய கவலை வந்து செல்லும். மகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து முடிவு செய்யவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. மற்றவர்களுக்கு அநாவசிய வாக்குறுதி எதுவும் தரவேண்டாம்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குரு உங்கள் சுகஸ்தானத்தை பார்ப்பதால் தாயாரின் உடல் நிலை சீராகும். அடிக்கடி பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்கு மாறிச் செல்வீர்கள். குரு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒருபகுதியைத் தந்து முடிக்க வழி கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.

குரு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். ஷேர் மூலம் பணம் வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பார்த்த காரியங்கள் உடனே முடியும். பணவரவு உண்டு. நவீன டிசைனில் ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். தாயார், தாய்மாமன், அத்தை வழியில் ஆதரவு பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வந்தாலும் பாசம் குறையாது. வேற்றுமொழி பேசுபவர்கள், வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களுடன் சேர்ந்து புது வியாபாரம் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டாகும்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், வேலைச்சுமை, எதையோ இழந்ததைப் போல் ஒரு வித கவலைகள், தாழ்வுமனப்பான்மை, பிறர் மீது நம்பிக்கையின்மை வந்து செல்லும். புதிதாக அறிமுகமாகும் நபர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பால்ய நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்குள்ளேயே கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரயம், ஏமாற்றம், கை, கால், மூட்டு வலி, மனக்குழப்பம் வந்து நீங்கும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்வதால், கொஞ்சம் அலைச்சலும், ஏமாற்றங்களும் இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் சாதகமாகும். வீடு கட்டுவீர்கள்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கியிருக்கும் சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். வேலையாள்கள் ஒத்துழைப்பு தந்தாலும் அவ்வப்போது முரண்டு பிடிப்பார்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடையையும் நவீனமயமாக்குவீர்கள். இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரிகளுடன் சின்னச் சின்ன முரண்பாடுகள் வந்து போகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம் பழைய சம்பள பாக்கியும் கைக்கு வரும்.

மாணவர்களுக்கு:

விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக்கொண்டு பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும். ஆசிரியர்கள் உதவி செய்வார்கள். கணிதம், மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.

கலைத்துறையினருக்கு:

உங்களை சிலர் விமர்சித்துக்கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், அதனால் பாதிக்கப்படாமல், முன்னேறவே செய்வீர்கள். இந்தி, தெலுங்கு பேசுபவர்களால் புது வாய்ப்புகள் வரும்.

இந்த குருப்பெயர்ச்சி சுபச் செலவுகளைத் தருவதாகவும், நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் அமையும்.

பரிகாரம்: திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீகயிலாசநாதரை பிரதோஷ நாளில் சென்று வில்வதளத்தால் அர்ச்சனை செய்து வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மற்ற ராசிகளுக்கான குருப்பெயச்சி பலன்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...