Vikatan

செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தும் குருபகவான்!

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கிரஹங்களில், குருவை ‘பிரகஸ்பதி’ என்பர். அது, வேதம் அளித்த திருநாமம். சூட்சுமமான அறிவுக்கு, ஸ்தூல வடிவம் கொடுத்து, பிரஹஸ்பதி எனப் பெயரும் வைத்திருக்கிறோம். கிரக வரிசையில் செவ்வாய்க்கும் சனிக்கும் நடுவில் இருப்பார், குரு. அண்டவெளியில் அவரின் ஓடு பாதை, இந்த இரண்டுபேருக்கு இடையே அமைந்திருக்கும்.

ரஜோ குணம், சுறுசுறுப்புடன் நிற்காமல், அகங்காரம், இறுமாப்பு, அலட்சியம் ஆகியவற்றையும் ஏற்படுத்தும். ஏளனம் மற்றும் சூளுரைத்தல் ஆகியவற்றையும் அது தரவல்லது! ஆராயாமல் திடீரென முடிவு எடுத்தல், பொறுமை இல்லாமை ஆகியவற்றையும் தந்து அலைக்கழிக்கும்! செவ்வாய் கிரகத்தின் இயல்பும் அதுதான்! 7-ல் செவ்வாய் அவர்களின் ரஜோ குணத்தைத் தட்டி எழுப்பி, கருத்து மாறுபாடுகளைக் கொடுத்து, தாம்பத்தியத்தில் கசப்பையும் ஏற்படுத்துவான் எனும் நோக்கில், ஜாதகத்தில் செவ்வாய் தோஷத்தைத் தவிர்க்கின்றனர்.

சோம்பல், மெத்தனம், உறக்கம், மயக்கம், அறியாமை, உள்ளதை உள்ளபடி அறிகின்ற திறமையின்மை ஆகியன தமோ குணத்தின் வெளிப்பாடு; இது, சனியின் இயல்பு.

ஸத்வ குணம் பொருந்தியவன் குரு. தன் இரண்டு பக்கங்களிலும் உள்ள செவ்வாயையும் சனியையும் கட்டுப்படுத்தி, இருவரையும் ஸத்வ குணத்துடன் இணைத்து உலக இயக்கத்தின் பயனை உணர வைப்பவர், பிரஹஸ்பதி! ராசிச் சக்கரத்தில் 9 மற்றும் 12-ஆம் வீடுகள் குருவின் ஆதிக்கத்தில் இருக்கும். தனுர் மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதி இவர்தான்! மீனத்தில் இருக்கும் குரு, தனக்குப் பிந்தைய ராசியில், அதாவது கும்பத்தில் சனியையும், முன் ராசியான மேஷத்தில் செவ்வாயையும் வைத்திருக்கிறார். தனுர் ராசியில் இருக்கும் குரு, பின் ராசியில் அதாவது விருச்சிகத்தில் செவ்வாயையும் முன் ராசியில் அதாவது மகரத்தில் சனியையும் வைத்துக் கொண்டிருக்கிறார். அண்டவெளி வரிசையில் அவர், இருவருக்கும் இடையில் வழித்தடத்தை வைத்துக் கொண்டிருக்கிறார். இங்கேயும் ராசிச் சக்கரத்தில், இருவருக்கும் இடையே தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார். குருவானவர், சிஷ்யனை அருகில் அமர்த்திக்கொண்டு, அவனது அறியாமையை அகற்றுவது போல், இருவரது செயல்பாட்டையும் தூய்மைப்படுத்தி அவர்களையும் அரவணைத்தபடி செயல்படுகிறார் அவர்!

நமது அத்தனை இன்னல்களுக்கும் அடிப்படைக் காரணம், நம்மில் உறங்கிக்கிடக்கிற ரஜோ மற்றும் தமோ குணங்கள்தான்! அவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க, ஸத்வ குணம் வலுப்பெற்றிருக்க வேண்டும். காரத்தையும் கசப்பையும் கட்டுப் படுத்த, இனிப்பும் உப்பும் உதவும். அதேபோல் இனிய வாழ்க்கைக்கு மூன்று குணங்களும் தேவை. வாழ்க்கையின் திசையையே தடம் புரளச் செய்யும் ரஜோ மற்றும் தமோ குணங்களைக் கட்டுப்படுத்த, ஸத்வ குணம் அவசியம். அதனைத் தந்து அருள்பவர், குரு. வாழ்க்கையுடன் என்றைக்கும் நம்முள் இணைந்திருப்பவரும் கூட! எதிர்பாராத இன்னல்களின்போது, அந்தச் சிக்கல்களில் இருந்து நம்மை விடுவிப்பவர், ஸத்வ குணத்தின் குன்றெனத் திகழும் குரு பகவான்!

பிரம்மாவின் முதல் படைப்பு, தண்ணீர். உலகை ஆட்கொள்வது பிரளயம்; அதாவது தண்ணீர். இரண்டையும் சுட்டிக்காட்டும் ஜலமயமான மீன ராசியில் இருந்தபடி, முடிவுக்கும் ஆரம்பத்துக்கும் இணைப்பாக வீற்றிருக்கிறார் அவர்! ஸத்வ குணத்துடன் சும்மா இருந்த குரு, தனக்கு அருகில் உள்ள மேஷ ராசியில் அமர்ந்த ரஜோ குண செவ்வாயின் துணையுடன் படைப்பைத் துவங்க உதவி புரிகிறார். அதேபோல், உலகை ஆட்கொள்ள, துயரத்துக்குக் காரணமான தமோ குண சனியின் உதவியால், அனைத்தையும் அழித்து பிரளயத்துக்கு வழி வகுக்கிறார். நீரில் இருந்து ஜீவராசிகளின் தோற்றத்தை உணர்த்தி, பரிணாம வாதத்தை வெளியிட்ட ஆய்வாளர்களின் முடிவை, குருவின் மீன ராசியின் இருக்கை, சொல்லாமல் சொல்கிறது!

அதிர்ஷ்டம், புண்ணியம், பெருமை, புகழ், சந்நியாசம், அதன் மூலம் கிடைக்கிற விடுதலை, அறிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ராசிச் சக்கரத்தின் 9-ஆம் இடமான தனுர் ராசியிலும் அமர்ந்திருக்கிறார் குரு. சுத்தமான ஸத்வ குணத்துக்கு அடையாளமான குணங்களைப் பறைசாற்றும் அந்த ராசி, அவரது சாந்நித்தியத்தில் வளர்ச்சி பெற்று, நல்ல குடிமகனாக மாற்றும் திறனைப் பெற்றிருக்கிறது. லோகாயத வாழ்வைச் செம்மைப்படுத்தவும், ஆன்மிக வாழ்வின் எல்லையை அடையவும் குருவருள் தேவை என்பதை 9 மற்றும் 12-ஆம் வீடுகளில் அமர்ந்து வெளிப்படுத்துவதை உணரவேண்டும். இகபர சுகத்தை அள்ளித் தரும் குரு பகவானைப் போற்றி வணங்குதலே சிறப்பு!

சந்திரனுடன் குரு இணையும்போது, மனமானது அறிவுடன் இணைகிறது. அறிவின் உதவியில், செயலானது சிறப்புற்று, செல்வத்தில் திளைக்கச் செய்கிறது. இதனால் இது, கஜகேஸரி யோகம் எனும் பெருமையைப் பெறுகிறது. சூரியனுடன் குரு இணையும் வேளையில், ஆன்மாவுடன் அறிவு இணைகிறது; அவன், ஆன்மிக அறிவைப் பெற்று வீடுபேறு எனும் நிலையை அடைகிறான்.

சீடரான சூரியன் வீட்டுக்கு அதாவது சிம்ம ராசிக்கு குரு விஜயம் செய்யும்போது, ஆன்மாவும் அறிவும் சந்திக்கின்றன. அப்போது, சிற்றின்பமான திருமணம் முதலானவற்றைத் தவிர்த்து, குருவுக்குப் பெருமையளிப்பார்கள்! மாமாங்க வருடத்தில் திருமணத்தைத் தவிர்ப்பது, அதன் வெளிப்பாடு. செவ்வாய் மற்றும் சனியுடன் இணையும்போது, இரண்டு குணங்களின் தாக்கங்களைக் கட்டுப்படுத்தி, ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் வாழ்வின் உயர்வுக்குச் சாதகமாக மாற்றி அமைப்பார் குரு பகவான். அவரின் பார்வை பட்டாலே, இரண்டு கிரகங்களும் தனது இயல்பை மாற்றிக்கொண்டுவிடும்.

7-ல் இருக்கும் செவ்வாயை, குரு லக்னத்தில் இருந்து பார்க்கும்போது, இடையூறைத் தருகிற இயல்பை மாற்றி, செவ்வாய்க்கு ஒத்துழைக்கும் தன்மையை வரவழைக்கிறார் குரு. அப்போது சம்பந்தப்பட்டவர்களின் தாம்பத்தியத்தில் இன்னல்கள் ஏதும் நேராது. குரு பார்வைபட்ட வீடுகளும் கிரகங்களும் தங்களது விபரீத எண்ணங்களை அடக்கிக்கொள்ளும்; நல்ல எண்ணங்களை வாரி வழங்கும்.

ரஜோ குணமும் தமோ குணமும் சேரும்போது, ஒன்று மற்றொன்றை வளர்த்து, பேரிழப்பு வரக் காரணமாக அமையும். சனியும் செவ்வாயும் இணைந்தால், இரண்டு குணங்களும் பெருகும். அதற்கு அக்னி மாருத யோகம் என்ற பெயர் உண்டு. நெருப்பு காற்றுடன் இணைகிறபோது, அணைக்க முடியாமல் திணறுவோம், இல்லையா?! அதேபோல், வாழ்வில் பிரச்னைகளின் இணைப்பால், நாமும் படாதபாடுபடுவோம். இந்த இருவரையும் குரு பார்த்துவிட்டால், அக்னி மாருத யோகம் செயலற்றுவிடும். குருவின் பார்வை, பிரச்னைகள் பலவற்றையும் அழித்துவிடும். குருவின் சேர்க்கை அல்லது பார்வை, கிரகங்களுக்கு இருக்கும் நல்லது- கெட்டது என்கிற இரு தன்மைகளில், கெட்டதை அழித்து, நல்லதைப் பெருக்கி உதவும்.

இத்தனை இருந்தும் ஒரு விதிவிலக்கும் உண்டு. ராகுவோடு சேர்ந்த குரு செயல்பட இயலாமல் தவிப்பார். ராகு இருள் வடிவு; அறியாமை! அறியாமையானது அறிவை ஆட்கொண்டு விடுகிறது. செயல்பாடு முடக்கப்படுகிறது. சூரியனால் உருவாக்கப்பட்ட மேகம், சிலநேரம் சூரியனின் கிரணத்தைப் பரவவிடாமல் தடுப்பதுண்டு.

மற்ற சுப கிரகங்கள் பாப கிரகத்துடன் இணைந்தால், பாப கிரகத்தின் தன்மை சுப கிரகங்களுக்கும் வந்துவிடும். ஆனால், குருவோடு சேர்ந்த பாப கிரகங்கள், தனது இயல்பை மாற்றி, குருவின் இயல்பை ஏற்றுக்கொண்டு விடும். இப்படியொரு பெருமை குருவுக்கு மட்டுமே உண்டு. இந்தப் பெருமை, பரம்பொருளான- உலக குருவான தட்சிணாமூர்த்தியிடமிருந்து கை மாறியது. பரம்பொருள் பேரறிவு. அறிவுக்கு ஈசனை நாடு என்கிறது சாஸ்திரம் (ஞானம் மஹேச்வராதி ச்சேத்). ‘சூரியனுக்கு ஒளியை வழங்கியவர் ஒளி மயமான பரம்பொருள்’ என்கிறது உபநிடதம் (தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி). அதுபோல, உலக குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் அறிவுத் திறன், நவக்கிரக குருவுக்குள் ஊடுருவியது.

குருவை என்றும் வணங்கவேண்டும். ஒட்டு மொத்தமான மகிழ்ச்சிக்கு அது உதவும். வேதம் ஓதுபவர்களும் ‘ஸ்ரீகுருப்யோ நம:’ என்று குரு வணக்கத்தோடு செயல்படுவார்கள். ‘கும் குருப்யோ நம:’ என்று சொன்னால், அது மந்திரமாக மாறிவிடும். அதைச் சொல்லி 16 உபசாரங்களை செயல்படுத்தவேண்டும்.

குருர் பிரம்மா, குருர் விஷ்ணு: குருர் தேவோ மஹேச்வர: குரு: ஸாஷாத் பரம்ப்ரம்ம தஸ்மை ஸ்ரீகுருவே நம: என்று செய்யுளைச் சொல்லி வணங்குங்கள். நன்மை நம்மைத் தேடி வரும்.