கடகம் - Guru Peyarchi Palangal 2022 - 2023 (TAMIL)

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2022-2023 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

கடகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசும் அன்பர் நீங்கள். அஷ்டமத்தில் இருந்து கஷ்டம் தந்துகொண்டிருந்த குரு, இப்போது 14.4.22 முதல் 22.4.23 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் அமர்வதால், உங்களின் திட்டங்கள் யாவும் வெற்றியடையும். அடிப்படை வசதிகள் உயரும்; அந்தஸ்து பெருகும்.

தொட்டதெல்லாம் துலங்கவைப்பார் குரு பகவான். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகளுக்குத் தீர்வு கிடைக்கும். தள்ளிப்போன திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். அறிஞர்களின் நட்பால் ஆதாயம் உண்டு. குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்திருக்கும் தம்பதிக்குக் குழந்தை வரம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணைவர் வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிள்ளைகளைப் பொறுத்தவரையிலும் மகளின் திருமணம் நினைத்தபடி அமையும்; மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவுவீர்கள். செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்

14.4.22 முதல் 29.4.22 வரை

குரு பகவான் பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்கிறார். திடீர் யோகம், பண வரவு, சொத்துச் சேர்க்கை எல்லாம் உண்டு. மகளுக்கு நல்லவிதத்தில் திருமணம் முடியும். புது வேலை அமையும். செல்வாக்கு கூடும்.

30.4.22 முதல் 24.2.23 வரை

சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டு. காலில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். வி.ஐ.பிகளின் உதவி திக்குமுக்காட வைக்கும். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு பகவான் வக்ரத்தில் செல்வதால், வேலைச் சுமையால் பதற்றம் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். கடன் பிரச்னையால் அச்சம் எழும்.

24.2.23 முதல் 22.4.23 வரை

குருபகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். இளைய சகோதரர் உதவுவார்.

வியாபாரத்தில்

இதுவரையிலும் இருந்து வந்த மந்த நிலை மாறும். நவீன யுக்திகளால் வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்குவீர்கள். உங்களின் செயல்பாடுகள் போட்டியாளர்களைத் திணறவைக்கும். ரியல் எஸ்டேட், கணினி உதிரி பாகங்கள், கெமிக்கல் வகைகளால் ஆதாயம் உண்டு. சில தருணங்களில் பங்குதாரர்களுடன் மனஸ்தாபம் வந்து போனாலும் உங்கள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

உத்தியோகத்தில்

உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்த மேலதிகாரி இனி, உங்கள் பணியைப் பாராட்டுவார்; உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார். சக ஊழியர்களும் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பதவி உயர்வு தேடிவரும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களைக் குன்றிலிட்ட விளக்காக ஒளிரவைக்கும்.

முழுமையான குருப்பெயர்ச்சி பலன்கள் இங்கே..!