கன்னி - Guru Peyarchi Palangal 2021 - 2022 (TAMIL)

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2021-2022 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

கன்னி- குரு பெயர்ச்சிப் பலன்கள்

கலகலப்பான பேச்சால் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் கன்னி ராசி அன்பர்களே... இந்த குருப்பெயர்ச்சி எப்படிப்பட்ட மாற்றங்களை உங்களுக்குத் தரும் என்பதைப் பார்ப்போம்.

இதுவரை உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்கிவந்த குருபகவான் இப்போது ஆறாம் வீடான கும்பத்தில் அடி எடுத்து வைக்க இருக்கிறார். ஆறாம் வீடு என்பது அத்தனை உகந்த இடம் அல்ல. நற்பலன்கள் கிடைக்காது என்று கவலைப் படுகிறீர்களா... சகட குரு சங்கடங்கள் தருவார் என்று வருந்துகிறீர்களா... அந்த வருத்தமே தேவையில்லை. குருபகவான் தன் பார்வை பலத்தால் சில அதிர்ஷடங்களையும் உங்களுக்கு வாரி வழங்குவார்.

குருபகவான் இரண்டாம் இடமான தன குடும்ப வாக்குஸ்தானத்தைப் பார்ப்பதால் பேச்சில் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் தீர்ந்து இல்லறம் நல்லறமாகும். குருபகவான் உங்களின் 10 ம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். பதவியுயர்வு தேடிவரும். பணவரவும் அதிகரிக்கும்.

குருபகவானின் பார்வை சிம்மராசியின் மீது படுவதால் வீண் செலவுகளை எல்லாம் கட்டுப்படுத்துவார். மகன் கல்விக்காகச் செலவு செய்வீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். விட்டுப்போன பணிகளை எடுத்துச் செய்யும் நிலை வரும்.

குருபகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் அவிட்ட நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற கோபம், செலவு ஆகியன ஏற்படும். சகோதரர்களால் சங்கடங்கள் உண்டாகும். உடல் ஆரோகியத்திலும் அக்கறை செலுத்துங்கள். முன்பின் தெரியாதவர்களை நம்பி எதிலும் இறங்க வேண்டாம். பயணத்தின் போதும் உரிய கவனம் தேவை.

31.12.2021 முதல் 02.03.2022 வரை

குருபகவான் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவீர்கள். பரம்பரை சொத்தை விற்கும் நிலை ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் நடவடிக்கையில் கவனம் செலுத்துங்கள். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணியுங்கள். கர்ப்பிணிகள் இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

குருபகவான் தனது நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் வாழ்க்கைத்துணையோடு அனுசரித்துச் செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் சண்டைக்குச் செல்லாதீர்கள். யாரிடமும் அவர்களை விட்டுக்கொடுத்துப் பேச வேண்டாம். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். காதுபடவே சிலர் உங்களைக் குறித்து அவதூறு பேசுவார்கள். அதை எல்லாம் கண்டும் காணாமலும் விடுங்கள். வெளிப்படையாக யாரையும் விமர்சிக்க வேண்டாம். பணியிடத்தில் இடமாற்றம் இருந்துகொண்டேயிருக்கும்.

வியாபாரிகளுக்கு :

புதிய முதலீடுகளுக்கான நேரம் இதுவல்ல என்பதை உணருங்கள். பணியாள்கள் தேவையில்லாமல் தொந்தரவு கொடுப்பார்கள். போட்டிகள் அதிகரிக்கும். அதனால் லாபம் குறைவாகவே வரும். வரவேண்டிய நிலுவையை வசூலிக்க ஒருமுறைக்கு இருமுறை அலைய வேண்டிவரும். என்றாலும் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். இரும்பு, கெமிக்கல், ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். யார் எவ்வளவு சொன்னாலும் தெரியாத வணிகத்தைத் தொடங்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால் மேலதிகாரிகள் உங்களை மனம் திறந்து பாராட்டுவார்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் பலன் தரும். புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும். தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் உற்சாகமாகவே காணப்படுவார்கள்.

கலைஞர்களே! இழந்த புகழை மீண்டும் பெற எதார்த்தமான படைப்புகளை கொடுங்கள். அரசு பாராட்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களை அலைகழித்தாலும் மறைமுக வெற்றியையும் பல முக்கிய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதாகவும் அமையும்.

பரிகாரம்: சிதம்பரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீநடராஜப் பெருமானை வணங்குங்கள். வாய் பேச மாற்றுத் திறனாளிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2021-2022 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..?