கும்பம் - Guru Peyarchi Palangal 2020 - 2021 (TAMIL)

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2020-2021 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

கும்பம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

இதுவரை 11 ம் இடத்திலிருந்து லாபங்களை வழங்கிய குருபகவான் ராசிக்கு 12-ல் பிரவேசிக்கிறார். அங்கு அமர்ந்து குருபகவான் 4, 6, 8 ஆகிய வீடுகளைப் பார்வை செய்கிறார். 4-ம் வீட்டுக்கு ஏற்படும் அவருடைய பார்வையின் பலனாக உடல் ஆரோக்கியம் மேம்படும். தாயாரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். தாய்வழியில் பணவரவுக்கும் சொத்துச் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. வீடு கட்டுவதில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும்.

குருபகவான் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், உறவுகளிடையே இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கடன்களால் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கும். உங்களைப் பற்றி மற்றவர்கள் கொண்டிருந்த தவறான அபிப்பிராயங்கள் நீங்கும்.

குருபகவான் 8-ம் இடத்தைப் பார்ப்பதன் மூலம் ஆயுள் பலம் கூடும். நீண்டநாள் நிலுவையில் இருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். வெளிவட்டாரத்தில் பெயரும் புகழும் பெறும் வாய்ப்பு ஏற்படும். மன பிரமைகள் நீங்கி மனத்தில் தெளிவு பிறக்கும்.

உறவினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்துவீர்கள். அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு பிரச்னைகளைப் பெரிதுப்படுத்தவேண்டாம். கர்ப்பிணிகள் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.

பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை, கல்யாணம் குறித்து கவலைகள் வந்துபோகும். மகளுக்கு வரன் தேடும்போது விசாரித்துத் திருமணம் முடிப்பது நல்லது. மகனின் நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பேச்சில் கவனம் தேவை; வீண் விமர்சனங்கள் எழும். பழைய கடனை நினைத்து வருந்துவீர்கள். சொத்து ஆவணங் களைக் கவனமாகப் பாதுகாப்பது நல்லது.

குருபகவானின் சஞ்சார பலன்கள்:

15.11.2020 முதல் 5.1.2021 வரை

சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் வாழ்க்கைத்துணையின் உடல்நிலை பாதிக்கும். அவர் வழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். அரசுக் காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.

6.1.2021 முதல் 4.3.2021 வரை

சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் செலவுகள் கூடும். ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. பயணங்களும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கு விஷயத்தில் குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். காப்பீடுகளைச் சரியாகப் புதுப்பிக்கவும்.

5.3.2021 முதல் 22.5.2021 வரை மற்றும் 23.7.2021 முதல் 13.11.2021 வரை

அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால், இளைய சகோதர வகையில் உதவியுண்டு. சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களில் சிலர் வேலை மாறவும் வாய்ப்பு உண்டு.

23.5.2021 முதல் 22.7.2021 வரை

சதயம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். வாயுக் கோளாறு, தலைச் சுற்றல், யூரினரி இன்பெக்சன் வந்து செல்லும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

6.4.2021 முதல் 14.9.2021 வரை

குருபகவான் உங்கள் ராசிக்குள் அதிசாரமாகியும், வக்ரமாகியும் செல்வதால் உணர்ச்சிவசப் படாதீர்கள். வருங்காலத்தைப் பற்றிய கவலைகள் வரும். சந்தேகத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் வந்து நீங்கும்.

வியாபாரிகளுக்கு:

புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புதிய நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். கடையை நவீன மயமாக்குவீர்கள். வணிகச் சங்கத்தில் உங்களுக்கென்று தனி இடம் - பதவி உண்டு.

உத்தியோகஸ்தர்களுக்கு:

திறமைகள் பளிச்சிடும். அலுவலகத்தில் சின்னச் சின்ன முரண்பாடுகள் ஏற்பட்டாலும் பாதிப்பு ஏற்படாது. வெளிநாட்டு நிறுவனங்களால் ஆதாயம் கிடைக்கும். அரசுப் பணியாளர்கள் அலுவலக ரகசியங்களை வெளியிடாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வையும் எதிர்பார்க்கலாம்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, சுபச் செலவுகளைத் தருவதாகவும் நட்பு வட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் அமையும்.

பரிகாரம்: சென்னை - திருவல்லிக்கேணியில் அருளும் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளை, ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்கி வழிபடுங்கள்; எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2020-2021 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..?