மகரம் - Guru Peyarchi Palangal 2022 - 2023 (TAMIL)

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2022-2023 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

மகரம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

பிரச்னைகளைக் கண்டு பின்வாங்காத திடசிந்தனை மிக்க மகர ராசி அன்பர்களே! இதுவரையில் 2-ம் வீட்டில் அமர்ந்து ஓரளவு பணப் புழக்கத்தைத் தந்துகொண்டிருந்தார் குருபகவான். 14.4.22 முதல் 22.4.23 வரை, ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்கிறார். ஆகவே, எதையும் திட்டமிட்டுச் செய்யப் பாருங்கள். ஒவ்வொரு பணியையும் இரண்டு மூன்று முறை முயன்று போராடி முடிக்கவேண்டி வரும். சிலருக்கு வாயுக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டு.

வீண் கெளரவத்துக்காக சேமிப்பைக் கரைக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். புதிய அன்பர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம். வாகனத்தில் செல்லும்போதும் பயணத்திலும் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி குறுக்கு வழியில் செல்ல வேண்டாம்.

வீட்டில் வாழ்க்கைத் துணைவருடன் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது. முக்கியமான வேலைகள் பொறுப்புகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காதீர்கள். தவறுகள் நிகழ வாய்ப்பு உண்டு. ஆகவே, எதையும் நீங்களே முன்னின்று முடிக்கப்பாருங்கள்.

தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. நேரில் நல்லவிதமாகத் தங்களைக்காட்டிக் கொள்ளும் சிலர், உங்களுக்குப் பின்னால் உங்களைப் பற்றி தவறாக சொல்லிக் கொண்டிருப்பார்கள். அத்தகைய நபர்களிடம் இருந்து தள்ளியே இருங்கள். உறவினர், நண்பர்களிடமும் அதே நிலைதான். அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வீண் விமர்சனங்களைத் தவிருங்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

14.4.22 முதல் 29.4.22 வரை

உங்களின் சேவக, விரயாதிபதியான குரு பகவான் தன் நட்சத்திரத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால் வீடு கட்டுவது, வாங்குவது நல்ல விதத்தில் முடியும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும்.

30.4.22 முதல் 24.2.23 வரை

சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். ஆனால் செலவுகளும் துரத்தும். வயிற்றுவலி, முதுகுவலி வந்து நீங்கும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குருபகவான் வக்ரத்தில் செல்வதால், குடும்பத்தில் அடுத்தடுத்து மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்குப் புது வேலை கிடைக்கும்.

24.2.23 முதல் 22.4.23 வரை

குருபகவான் உங்களின் ரோக, பாக்கியாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்கிறார். கௌரவப் பதவிகள் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வீடு களை கட்டும். தந்தையுடன் மோதல் போக்கு நீங்கும். பிதுர் ராஜ்ஜிய சொத்துக்கள் வந்து சேரும்.

வியாபாரத்தில்

யன்றவரையிலும் சுய ஆளுமையுடன் செயல்படுங்கள். மற்றவர்களின் பேச்சைக் கேட்கவேண்டாம். புதிய முதலீடுகள் செய்யும்போது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப செயல்படுங்கள். அதேபோல், பாக்கிகளை வசூலிப்பதில் கனிவுடன் நடந்துகொள்ளுங்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களில் வசூல் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் குடைச்சல் கொடுக்கத்தான் செய்வார்கள். மருந்து, ரியல் எஸ்டேட், ஹோட்டல் வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகத்தில்

வ்வித மனக்குறைகள் இருந்தாலும் உள்ளுக்குள் வைத்துக்கொள்ளுங்கள். எவரிடமும் விமர்சனங்களை வெளிப்படுத்த வேண்டாம். மேலதிகாரி சிற்சில தருணங்களில் உங்களோடு முரண்பட்டாலும், முக்கிய பொறுப்புகளை உங்களிடமே ஒப்படைப்பார். சிலருக்குத் திடீர் இடமாற்றமும் உண்டு. சில நேரங்களில் அடிப்படை உரிமைக்காகக்கூட போராட வேண்டி வரும். ஆனாலும் பொறுமை மிக அவசியம். விரைவில் உங்களுக்குச் சாதகமான சூழல் வரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள். மார்ச், ஏப்ரல் மாதங்களில் வேலைச்சுமை குறையும். வேறு நல்ல வாய்ப்புகளும் வரும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதாகவே அமையும்.

முழுமையான குருப்பெயர்ச்சி பலன்கள் இங்கே..!