மேஷம் - GURU PEYARCHI PALANGAL 2018 TO 2019 IN TAMIL

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2018-2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

உயர்ந்த குறிக்கோள்களுடன் வாழ்பவர்களே!

உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்த குருபகவான், வரும் 4.10.18 முதல் 28.10.19 வரை 8-ம் வீட்டில் மறைவதால், எதையும் சமாளித்து மீளும் சாமர்த்தியத்தையும், சோதனைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் தருவார். அலைச்சலுடன் ஆதாயம் கிடைக்கும். அடிக்கடி பயணங்களும், அடுக்கடுக்கான செலவுகளும் ஏற்படும். செலவுகளுக்கு ஏற்ப வருமானமும் இருக்கும். சுற்றியிருப்பவர்களைப் புரிந்துகொள்வீர்கள். ராஜதந்திரமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

பழைய கடன்கள் விஷயத்தில் இதமாகப் பேசி வட்டியைத் தருவீர்கள். ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளுக்கு மாறுபட்ட கோணத்தில் யோசித்துத் தீர்வு காண்பீர்கள். கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் மூன்றாவது நபரின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். வழக்குகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். மறைமுக எதிரிகளால் ஆதாயம் கிடைக்கும். ஒரே நேரத்தில் பல இரண்டு, மூன்று வேலைகளைச் சேர்த்துச் செய்யவேண்டி வரும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டு விவகாரங்களில் தலையிடவேண்டாம்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குருபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவல் கிடைக்கும். அரசாங்க வகையில் அனுகூலம் உண்டாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு சாதகமாக முடியும். உறவினர்களும் நண்பர்களும் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பது அவசியம். குரு உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தைப் பார்ப்பதால், பிரசித்தி பெற்ற புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். .

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

4.10.18 முதல் 20.10.18 வரை உங்கள் ராசிக்கு 9 மற்றும் 12-ம் வீடுகளுக்கு உரிய குருபகவான், தன் சாரமான விசாக நட்சத்திரத்தில் செல்வதால், சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வி.ஐ.பி.க்களின் நட்பு கிடைக்கும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் உதவி கிடைக்கும். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். வழக்குகள் சாதகமாக முடியும்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், வேலைச்சுமை, பணப்பற்றாக்குறை, குடும்பத்தில் சலசலப்பு, உத்தியோகத்தில் தொந்தரவுகள் ஏற்படக்கூடும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். மூத்த சகோதர வகையில் உதவி கிடைக்கும்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், வீண் செலவுகள், உங்களைப் பற்றிய வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். பழைய கடன்களைப் பற்றிய கவலை ஏற்படும். இளைய சகோதர வகையில் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் ராசிக்கு 9-ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். அரசாங்க விஷயங்கள் அனுகூலமாக முடியும். தந்தை ஆதரவாக இருப்பார். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியிலும் செல்வதால், அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதியைத் தந்து முடிப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பாதியில் நின்ற வீடுகட்டும் வேலையைத் தொடங்குவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

வியாபாரத்தில் கவனமாக இருக்கவேண்டிய காலக்கட்டம் இது. சிறுசிறு நஷ்டங்கள் ஏற்படக்கூடும். தரமான பொருள்களை விற்பனை செய்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கவும். வேலையாள்களிடம் போதுமான ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. கடையை வேறு இடத்துக்கு மாற்றும் முயற்சியில் அவசரம் வேண்டாம். இரும்பு, கடல் உணவுகள், ஹோட்டல், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

வியாபாரிகளுக்கு:

அலுவலகத்தில் பணிகளில் அலட்சியம் வேண்டாம். மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். உயரதிகாரிகள் உங்களைப் புரிந்துகொள்ள மாட்டார்கள். உங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் பொறுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை விட வயதிலும் அனுபவத்திலும் குறைவானவர்களிடமும் பணிந்து செல்லவேண்டிய நிலை ஏற்படும். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லவேண்டிய வாய்ப்பு ஏற்படும்.

மாணவர்களுக்கு:

பாடங்களில் கூடுதல் கவனம் தேவை. அன்றன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது. விளையாட்டுப் போட்டிகளில் கவனமாக ஈடுபடவும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவேண்டியது அவசியம்.

கலைத்துறையினருக்கு:

சின்னச் சின்ன வாய்ப்புகளைக்கூட போராடித்தான் பெறவேண்டி வரும். மூத்த கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.

இந்த குருப்பெயர்ச்சி சற்று போராடி புதிய முயற்சிகளை முடிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: கரூர் மாவட்டம் வெண்ணெய்மலை என்ற ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீபாலசுப்பிரமணியரை கிருத்திகையன்று நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.