மீனம் - GURU PEYARCHI PALANGAL 2018 TO 2019 IN TAMIL

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2018-2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

தன்னம்பிக்கையுடன் சாதிப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து பாடாய்ப்படுத்திய குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 9-ல் அமர்ந்து பலன் தரவிருக்கிறார். புது வியூகங்களை அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். புது முயற்சிகள் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தினமும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்குக் கிடைக்கும். தந்தையுடன் இருந்து வந்த மோதல் போக்கு மாறும். தந்தைவழி சொத்துகள் சேரும். குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சி வெற்றி பெற உதவி செய்வார். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் விருப்பம் இப்போது நிறைவேறும். ஒதுங்கியிருந்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால், சோகமும் சோர்வும் நீங்கி, உற்சாகமும் மகிழ்ச்சியுமாக காணப்படுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனை அடைக்க குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். குரு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குரு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், குழப்பம் தடுமாற்றம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பழைய பிரச்னைகள் தீரும். புது வேலை கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், ஷேர் மூலம் பணம் வரும். அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகி வரும். கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாய்வழி சொத்து கைக்கு வரும்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 10-ல்கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், ஒரே நாளில் முக்கியமான இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வீண் பழிச்சொல் வரும். மற்றவர்களைச் சார்ந்து இருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்வதால், திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வாழ்க்கைத்துணை உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களும் உதவியாக இருப்பார்கள்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். வேலையாள்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஷேர், ஸ்பெக்குலேஷன், உணவு, எண்டர் பிரைசஸ், ஜுவல்லரி, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து சேர்வார். மூத்த வியாபாரிகளின் ஆதரவால் புதிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உத்தியோகத்தில் உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி தகுந்த பதிலடி கொடுப்பீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் திறமையை மேலதிகாரி பாராட்டுவார். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

மாணவர்களுக்கு:

நல்ல கல்வி நிறுவனத்தில் மேல்படிப்பைத் தொடங்குவீர்கள். மொழித் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள். இலக்கியம், ஓவியப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு:

உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களுடைய படைப்புகளுக்கு அரசாங்க விருதும் பாராட்டும் கிடைக்கும். மூத்த கலைஞர்களால் ஆதாயம் உண்டாகும்.

இந்த குருபெயர்ச்சி உங்களை வெற்றி பெற வைப்பதுடன், வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவ தாகவும் அமையும்.

பரிகாரம்: தேனி மாவட்டம் வேதபுரி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.