Vikatan

GURU PEYARCHI PALANGAL 2017 TO 2018 IN TAMIL - மீனம்

செப்டம்பர் 2-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்கிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2017-2018 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் இருக்கும். முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

Astro icon

எப்போதும் நல்லவழியில் செல்பவர்களே!

குருபகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அறிவுப்பூர்வமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடன்களை நினைத்து அவ்வப்போது கலக்கம் உண்டாகும். திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும். வழக்குகளில் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும்.


குருபகவானின் பார்வை:

ககுருபகவான் தனது 5-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீக சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குருபகவான் தனது 7-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் ஆரோக்கியம் சீராகும். அவருடனான மனத்தாங்கல் நீங்கும். தாய்வழி சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

குருபகவான் தனது 9-ம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றி உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள். அரசால் ஆதாயமடைவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிக்கு 2, 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3,4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குருபகவான் பயணிப்பதால், பண வரவு திருப்திகரமாக இருக்கும். வீடு, மனை வாங்குவது விற்பது நல்லபடி முடியும். அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தையாரின் ஆரோக்கியம் சீர்படும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.

உங்களின் ராசிக்கு 10-ம் இடத்துக்கும் உரிய குருபகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், வங்கிக் கடன் கிடைக்கும். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

குருபகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்:

14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குருபகவான் சென்று அமர்வதால், அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவிகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். இளைய சகோதரியின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

குருபகவானின் வக்கிர சஞ்சாரம்:

7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குருபகவான் வக்கிர கதியில் செல்வதால், பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் ஏற்படும்.

வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். வேலையாட்களின் குறை,நிறைகளை பக்குவமாக எடுத்துச் சொல்லி அரவணைத்துச் செல்லவும். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். மூலிகை, தேங்காய் மண்டி, எலெக்ட்ரிகல், துரித உணவகங்கள், பெட்ரோகெமிக்கல் வகைகளால் லாபம் உண்டாகும்.

உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி இருப்பதால் பணிச் சுமை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றம் உண்டாகும். சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவேண்டி இருக்கும். புதுப் பதவிகளும் பொறுப்புகளும் வரும். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.

மாணவ மாணவிகளே! முதலில் இருந்தே பாடங்களை கவனமாகப் படிப்பது அவசியம். உங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொள்ளப் பாருங்கள். சக மாணவர்களிடம் அளவோடு பழகுவது அவசியம்.

கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். பெரிய நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரும். அரசால் அனுகூலம் உண்டாகும்.

இந்த குரு மாற்றம் கடின உழைப்பு, குறைந்த வருமானம் என ஒரு பக்கம் அலைக்கழித்தாலும், சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: மகம் நட்சத்திர நாளில், உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ர புரீஸ்வரரையும் ஸ்ரீசிம்மகுரு தட்சிணா மூர்த்தியையும் வணங்குங்கள்; வாழ்வில் சாதிப்பீர்கள்.

மற்ற ராசிகளுக்கான குருப்பெயச்சி பலன்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...