மிதுனம் - Guru Peyarchi Palangal 2022 - 2023 (TAMIL)

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2022-2023 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

மிதுனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் எனும் உயர்ந்த நோக்கம் கொண்ட அன்பர் நீங்கள். உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் அமர்ந்து பலன் கொடுத்து வந்த குருபகவான், இனி 14.4.22 முதல் 22.4.23 வரையிலும் 10-வது வீட்டிற்குள் நின்று பலன் தரப்போகிறார்.

`பத்தில் குரு பதவியைப் பறிப்பார்’ என்று பயமோ பதற்றமோ தேவையில்லை இந்தக் குருப் பெயர்ச்சியில் உங்களுக்கு வேலைப்பளு அதிகமாகும்; அவ்வளவுதான். மற்றபடி முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எவருக்காகவும் வாக்குறுதி தராதீர்கள். வேலைகளோ, முக்கிய காரியங்களோ மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். முக்கிய கோப்புகளைக் கையாளும்போது மிகுந்த கவனம் தேவை. உறவுகள் மதிக்கவில்லையே என்று கவலைப்படாதீர்கள். எவரிடமும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வீண்பழி வந்து சேர வாய்ப்பு உண்டு. விலையுயர்ந்த நகை, பணத்தை இழக்க நேரிடும். வங்கிக் காசோலையில் முன்னரே கையப்பமிட்டு வைக்காதீர்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம்.

குருபகவானின் நட்சத்திரப் பலன்கள்

14.4.22 முதல் 29.4.22 வரை

குரு உங்களின் பாதகாதிபதி ஆவார். அவர் 14.4.22 முதல் 29.4.22 வரை பூரட்டாதி 4-ம் பாதத்தில் பயணிக்கிறார். ஆகவே, உத்தியோகத்தில் இடையூறுகள், கணவன் மனைவிக்குள் கருத்து மோதல், சிறு சிறு விபத்துகள், வீண் வதந்திகள் வந்து நீங்கும்.

30.4.22 முதல் 24.2.23 வரை

இந்த காலக்கட்டத்தில் உங்களின் அஷ்டம, பாக்கியாதிபதியான சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் செல்வீர்கள். புதுத் திட்டங்கள் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை விற்று விட்டு, புதிய சொத்து வாங்குவீர்கள்.அதேநேரம் சகோதரருடன் மனத்தாங்கல் வரும். 8.8.22 முதல் 16.11.2022 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குரு வக்ரத்தில் செல்வதால் வருமானம் உயரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

24.2.23 முதல் 22.4.23 வரை

இந்த காலக்கட்டத்தில் குரு உங்கள் ராசிநாதனும், சுகாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்கிறார். எதையும் சாதிப்பீர்கள். வருமானம் உயரும். தங்க ஆபரணம் சேரும். வீடு கட்ட லோன் கிடைக்கும்.

வியாபாரத்தில்

நிதானம் அவசியம், எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து தொடங்குங்கள். சந்தை நிலவரத்தைக் கவனத்தில் கொள்வது நல்லது. பழைய பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலியுங்கள். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். புதிய பங்குதாரர்கள் சேர்வார்கள்.

உத்தியோகத்தில்

வேலைச்சுமை இருக்கும். அலுவல ரகசியங்களைப் பாதுகாப்பது நல்லது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிம்மதியுண்டு. மூத்த அதிகாரிகளுடன் முரண்பட வேண்டாம். புதிய வாய்ப்புகளை யோசித்து ஏற்பது நல்லது.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, யதார்த்த அணுகுமுறையால் முன்னேற்றத்தைத் தருவதாக அமையும்.

முழுமையான குருப்பெயர்ச்சி பலன்கள் இங்கே..!