Vikatan

04.10.2018 முதல் 28.10.2019 வரை

நிகழும் விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18ம் தேதி வியாழக்கிழமை (04.10.2018) கிருஷ்ணபட்சத்து, ஏகாதசி திதி, கீழ்நோக்குள்ள ஆயில்யம் நட்சத்திரம், சித்தி நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திரம், ஜுவனம் நிறைந்த சித்த யோகத்தில், சுக்கிரன் ஓரையில், ஏழாம் சாமத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடை பயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்யகால வர்ஷ ருதுவில், இரவு மணி 10க்கு சூரிய உதயம் 39.55 நாழிகைக்கு, ரிஷப லக்னத்திலும் நவாம்சத்தில் சிம்ம லக்னத்திலும் வேத உபநிஷதங்களுக்குரிய மெய்ஞான கிரகமான பிரகஸ்பதி எனும் குருபகவான் சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்கிறார்.

13.03.2019 முதல் 09.04.2019 வரை அதிசாரமாகவும், 10.04.2019 முதல் 18.05.2019 வரை வக்ர கதியிலும் தன் சொந்த வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கிறார்.

குருபகவான் தனது இந்த பெயர்ச்சியின் போது அரிதும் பெரும்பான்மை காலம் ஏறக்குறைய 243 நாட்களுக்கு கேட்டை நட்சத்திரத்திலேயே பயணம் செய்ய இருப்பதால் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் அதிலும் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் ஆரோக்யம் பாதிக்கும். பணப்பற்றாக்குறை, குடும்பத்தில் பிளவும் வரும். பயணங்களின் போதும் கவனமாக இருக்க வேண்டும்.

ஒரு லிட்டர் பாலில் கலந்திருக்கும் தண்ணீரைப் பற்றி குறை சொல்லாமல் பாலை மட்டும் பிரித்து அருந்தி செல்லும் அன்னப்பட்சி போன்றவர்களெல்லாம் குருபகவானின் ஆதிக்கத்தில் வந்தவர்கள். அரசுக்கு ஒரு கணக்கு, ஆடிட்டரிடம் ஒரு கணக்கு என தராமல் வரவு செலவை மறைக்காமல் வருமான வரி செலுத்துவோரின் வாய்மையில் வாழ்ந்து கொண்டிருப்பவர் இந்த குருபகவான் தான். வானளவிய வளர்ச்சியை பதிவியாலும், பணத்திலும் அடைந்த போதிலும் கஷ்ட காலத்தில் உதவியவர்களை நெஞ்சுக்குள் நிறுத்தி நன்றிக் கடனுடன் இருப்பவர்களின் நாணயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவரும் இந்தக் குருபகவான் தான்.

அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் கைநிறைய சம்பாதித்தாலும் முதுமை அடைந்த தாய் தந்தைக்கு உடம்பு முடியவில்லை என்றால் அலறி அடித்து ஓடிவரும் பிள்ளைகளின் அன்பில் வாழ்பவர் குருபகவான் தான்.

செவ்வாயின் வீடான விருச்சிக ராசியில் குரு வந்து அமர்வதால் ரசாயனப் பொருட்கள், உணவுப் பொருட்கள் பாதிப்படையும். ரசாயன தொழிற்சாலைகள் சீரமைக்கப்படும். உலகெங்கும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கும், மாசுக்கட்டுப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும். மருத்துவர்களுக்கு வருமானம் அதிகமாகும். மருத்துவத்துறையில் அறுவைசிகிச்சை சாதனங்கள் அதிகரிக்கும். இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களில் அதிகமானவர்கள் பாதிக்கப்படுவார்கள். சூறாவளிக் காற்றுடன் 3.10.2018 முதல் 16.12.2018 வரைக்குமே கனமழை பொழியும். புதிய புயல் சின்னங்கள் உருவாகும். புயலால், இடிகளால் பேரழிவு உண்டு. மயானம், சமாதிகளில் பிரச்சனைகள், பிரிவினைகள் ஏற்படும்.

காலப்புருஷ ராசிக்கு 8ம் ராசியில் குரு அமர்வதால் ரியல் எஸ்டேட் சுமாராக இருக்கும். மழை, வெள்ளத்தால் விளைநிலங்கள், பயிர்கள், அடித்துச் செல்லப்படும். நாட்டின் கடன் அதிகரிக்கும். எதிர்பார்த்திராத ஒரு தலைவர் இறப்பார். அறிவியலறிஞர்கள் புதிய ஏவுகணைகளை விண்ணில் ஏவுவார்கள். தகவல் தொழில்நுட்பத் துறை நவீனமாகும். செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும்.

வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். ஷேர்மார்க்கெட் மற்றும் தேர்தல் கணிப்புகள் பொய்யாகும். மாமிச ஏற்றுமதி அதிகரிக்கும். அணுஉலைகள், அணுகுண்டுகள், அணுவை பிளத்தல் பற்றிய ஆராய்ச்சிகள் நம் நாட்டில் அதிகரிக்கும். ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். மொழி, இனம், மதத்தால் மாணவர்கள் துாண்டப்பட்டு பாதை மாறி செல்வார்கள். மதுபான வகைகளின் உற்பத்தி அதிகரிக்கும். விற்பனையும் அதிகமாகும். மக்களிடையே மூர்க்க குணம் பெருகும். வேதம் படித்தவர்கள், சுவாமிஜிகள், பாதிரியார்கள் பாதிப்படைவர். இரயில் விபத்துகள் அதிகரிக்கும். ரயிலில் வழிப்பறிச் சம்பவங்கள் பெருகுவதுடன், தரமற்ற உணவால் தொற்று நோய் பரவும். வனத்துறையில் ஊழல் பெருகும். அரிய மூலிகைகள் விதைகள் வெளிநாட்டிற்கு கடத்தப்படும். காடுகள் தீப்பற்றி எரியும். சிறுநீரகப் பாதிப்பால் புகழ் பெற்றவர்களின் உடல்நிலை பாதிக்கும். செவ்வாய் வீட்டில் குரு அமர்வதால் பெண்கள் மாதவிடாய்க் கோளாறாலும், சிறுநீர்த் தொற்றாலும் அதிகம் பாதிப்படைவார்கள்.

கச்சா எண்ணெய் விலை அதிகமாகும். சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை உயரும். 21.12.2018 முதல் 14.01.2019 மற்றும் 15.3.2019 முதல் 13.4.2019 வரை உள்ள காலக்கட்டங்களில் விமான விபத்து அதிகரிக்கும். கடல் வாழ் உயிரினங்கள் கரை ஒதுங்கும்.

ரஷ்யாவின் கை மீண்டும் ஓங்கும். அமெரிக்காவின் வல்லரசு அந்தஸ்து கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்புகள் மேலும் வலுவடையும். வாஷிங்டன் டிசி, கலிபோர்னியா, சான்பிரான்சிஸ்கோ, சிரியா ஆகியவை பாதிக்கும்.

மத்திய அரசின் நலதிட்டங்கள் மக்களை சென்றடைய தாமதம் ஏற்படும். மத்தியல் பா.ஜ.க தலைமையில் கூட்டணி ஆட்சி மீண்டும் அமையும். மாநிலக் கட்சிகள் உதவும். பிரதமரின் உடல்நிலை பாதிக்கும், அவரது பாதுகாப்பிலும் கவனம் தேவை.

கோவாவில் ஆட்சி கவிர வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, கர்நாடகாவின் மகாராஷ்ட்ரா எல்லைப் பகுதிகள் இயற்கை சீற்றங்களால் பாதிப்படையும். உலகெங்கும் நிலநடுக்கம் அதிகரிக்கும். 23.12.2018 முதல் அரசியல்களம் சூடு பிடிக்கும். தென்னிந்தியாவில் அரசியல் கூட்டணிகள் மாறும்.

ரிஷபம், கடகம், மீனம் ஆகிய ராசிகளின் மீது குருவின் பார்வைப்படுவதால் மேற்கண்ட ராசிகளில் பிறந்தார்க்கு யோகப்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். 4.10.2018 முதல் 20.10.2018 வரை விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், 21.10.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், 20.12.2018 முதல் 12.3.2019 வரை மற்றும் 9.8.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், 13.03.2019 முதல் 18.05.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது.

குருபகவானின் நட்சத்திர பயணம்

04.10.2018 முதல் 20.10.2018 வரை விசாகம் 4ல்

21.10.2018 முதல் 05.11.2018 வரை அனுஷம் 1ல்

06.11.2018 முதல் 19.11.2018 வரை அனுஷம் 2ல்

20.11.2018 முதல் 04.12.2018 வரை அனுஷம் 3ல்

05.12.2018 முதல் 19.12.2018 வரை அனுஷம் 4ல்

20.12.2018 முதல் 05.01.2019 வரை கேட்டை 1ல்

06.01.2019 முதல் 23.01.2019 வரை கேட்டை 2ல்

23.01.2019 முதல் 13.02.2019 வரை கேட்டை 3ல்

14.02.2019 முதல் 12.03.2019 வரை கேட்டை 4ல்

13.03.2019 முதல் 18.05.2019 வரை மூலம் (தனுசு&அதிசார வக்ரத்தில்)

19.5.2019 முதல் 12.6.2019 வரை கேட்டை 4ல் (வக்ரம்)

13.6.2019 முதல் 11.7.2019 வரை கேட்டை 3ல்

12.7.2019 முதல் 08.8.2019 வரை கேட்டை 2ல்

9.8.2019 முதல் 7.9.2019 வரை கேட்டை 2ல் (வக்ர நிவர்த்தி)

8.9.2019 முதல் 7.10.2019 வரை கேட்டை 3ல்

8.10.2019 முதல் 27.10.2019 வரை கேட்டை 4ல்