ரிஷபம் - GURU PEYARCHI PALANGAL 2018 TO 2019 IN TAMIL

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2018-2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்ப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் இருந்த குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 7-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள் வீர்கள். வீண் சண்டை, விவாதங்களில் இருந்து ஒதுங்குவீர்கள். உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.

திருமணம் கூடி வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். சிலர் வங்கிக் கடனுதவி பெற்று வீடு கட்டி கிரகபிரவேசம் செய்வீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணை உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் இருந்த மோதல் போக்கு நீங்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை நீங்களே முன்னின்று நடத்துவீர்கள். புதிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு ஏற்படும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குருபகவான் உங்கள் லாப வீட்டைப் பார்ப்பதால், பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். கடினமான காரியங்களையும்கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சமூகத்தில் கௌரவப் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். வெளி மாநிலங்களில் இருக்கும் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும்.

மூத்த சகோதர வகையில் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் நீங்கும். ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால், சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பாதிப் பணம் தந்திருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கோயில் விழாக்களில் கலந்துகொள்வீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், வேலைச்சுமையால் சோர்வு உண்டாகும். திடீர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அடிக்கடி தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு விலகும். மூத்த சகோதர வகையில் சச்சரவு ஏற்படும். புதுப் பொறுப்புகளை நன்றாக யோசித்து ஏற்றுக்கொள்வது அவசியம்.

21.10.18 முதல் 19.12.18 வரை சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் செல்வதால், எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். சொந்தமாக வீடு கட்டுவீர்கள். வேலை கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். திருமணம் கூடிவரும். சிலருக்குப் புதுத் தொழில் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை புதனின் கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும். பணப்பற்றாக்குறையும், மனதில் இனம் தெரியாத கவலைகளும் ஏற்படக்கூடும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும், 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், மனக்குழப்பம், பூர்வீகச் சொத்துப் பிரச்னை, வீண் டென்ஷன் ஏற்படக்கூடும். பிள்ளைகளை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் கருத்துகளை அவர்களிடம் திணிக்க முயற்சி செய்யவேண்டாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்வது அவசியம். கோயில் கும்பாபிஷேகங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் சூட்சுமங்களைத் தெரிந்துகொண்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர் களின் ரசனையைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். புதிய நண்பர்களின் தொடர்பால் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு உற்சாகம் தரும் பங்குதாரர் அமைவார். சிலர் புதுத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு. கமிஷன், ஏற்றுமதி - இறக்குமதி, கட்டடத் தொழில், அரிசி வியாபாரம் ஆகிய வகைகளில் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு:

அலுவலகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளுடன் இணக்கமான போக்கு காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அதிகாரிகளின் மனநிலைக்கேற்ப நடந்துகொண்டு பாராட்டு பெறுவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் பணியின் காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

மாணவர்களுக்கு:

விருப்பங்கள் நிறைவேறும். வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை ஆர்வத்துடன் கவனிப்பீர்கள். நண்பர்களுடன் பழகுவதில் கவனமாக இருப்பீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு:

எதிர்பார்த்து கிடைக்காமல் போன வாய்ப்புகள் இப்போது கிடைக்கும். புதுப் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வருமானம் அதிகரிக்கும். பிரபலமான கலைஞர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

இந்த குருப்பெயர்ச்சி சோர்ந்து துவண்டிருக்கும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருப்பதுடன், எதிர்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அருகிலுள்ள தேவதானம் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீரங்கநாதரை ஏதேனும் ஒரு சனிக்கிழமை துளசி மாலை அணிவித்து வழிபடுவது நன்மை தரும்.