சிம்மம் - Guru Peyarchi Palangal 2023 - 2024 (TAMIL)

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2023-2024 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

சிம்மம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

நேர்மையான உழைப்பால் எதையும் சாதிக்கவேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து மனப்போராட்டத்தையும், பணப்போராட்டத்தையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 22.4.2023 முதல் 1.5.2024 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார்.

'ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் வீட்டில் குரு' என்பது பழமொழி. அதற்குகேற்ப இனி எதைத் தொட்டாலும் வெற்றியில் போய் முடியும். குடும்பத்திலிருந்த வீண் விவாதங்கள், சண்டை சச்சரவுகள் அனைத்தும் விலகும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வருமானத்தில் கொஞ்சத்தைச் சேர்த்து வைக்க முடியும். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். பணவரவு சரளமாக இருக்கும். வீடு, மனை வாங்கும் ஆசை நிறைவேறும்.

குருபகவான் உங்கள் ராசியையே பார்ப்பதால் மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். செயல்கள் அனைத்தும் முதல் முயற்சியிலேயே வெற்றியாகும். 3,5 ஆகிய வீடுகளையும் குருபகவான் பார்ப்பதால் இளைய சகோதர, சகோதரிகளுடன் இருந்த கோபதாபங்கெல்லாம் விலகும். அடிப்படை வசதிகள் சேரும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வசதியான வீட்டில் குடி புகுவீர்கள். ஆன்மீகவாதிகள், சித்தர்களின் சந்திப்பு வாய்க்கும். மகனுக்கு எதிர்பார்த்தபடி அயல் நாட்டில் படிப்பு, வேலை கிடைக்கும். மகளின் கல்யாணத்தை விமர்சையாக நடந்துவீர்கள். பழைய சொந்தம்-பந்தங்கள் தேடி வந்து உறவுபாராட்டுவார்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

23.4.2023 முதல் 23.6.2023 வரை மற்றும் 23.11.2023 முதல் 6.2.2024 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் அசுவனி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது சின்னச் சின்ன உடல் உபாதைகள் வந்து செல்லும். பணவரவு நிச்சயம் உண்டு. செல்வாக்குக் கூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

23.6.2023 முதல் 22.11.2023 வரை மற்றும் 6.2.2024 முதல் 17.4.2024 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் பரணி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் மகம் நட்சத்திரத்திரக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டு. எதிரிகளை வீழ்த்துவீர்கள், கடன் பிரச்னை தீரும். ஆனால் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு தேவையற்ற அலைச்சலும், சிறுசிறு தடைகளும் வந்து நீங்கும். என்றாலும் முன்னேற்றம் நிச்சயம்.

17.04.2024 முதல் 01.05.2024 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் உங்கள் ராசிநாதனான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்வதால் நிர்வாகத் திறமை பளிச்சிடும். அரசால் ஆதாயம் உண்டு. புதிய வேலை கிடைக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம் - 11.09.2023 முதல் 20.12.2023 வரை

இந்தக் காலகட்டத்தில் குருபகவான் அசுவினி மற்றும் பரணி நட்சத்திரங்களில் வக்ர கதியில் செல்வதால் தள்ளிப் போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பணவரவுக்கு வாய்ப்புண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் கூடிவரும்.

வியாபாரிகள் : தொழிலில் இருந்த சுணக்கம் மாறி புத்துணர்ச்சி பிறக்கும். பெரிய முதலீடுகள் செய்து தொழிலை சீர் செய்வீர்கள். போட்டியாளர்கள் உங்களைக் கண்டு விலகிப்போவார்கள். பாக்கிகளைக் கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். பழைய சரக்குகள் விற்றுத்தீரும். எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டு.

உத்தியோகஸ்தர்கள் : திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். மேலதிகாரி நட்புபாராட்டுவார். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சிலருக்கு வேறு நல்ல புது வாய்ப்புகளும் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி ஒடுங்கியிருந்த உங்களை ஓங்கி வளர வைப்பதுடன் எங்கும் எதிலும் வெற்றியையும், எதிர்பாராத வளர்ச்சியையும் தரும்.

முழுமையான குருப்பெயர்ச்சி பலன்கள் இங்கே..!