Vikatan

தென்முக தெய்வமும் தேவகுருவும்!

அக்டோபர் 4-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். இதையொட்டி அன்பர்கள் யாவரும் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள்.

ஆனாலும், அன்பர்கள் மனதில் ஒரு சந்தேகம் எழுவது உண்டு. குருப்பெயர்ச்சியில் வழிபட வேண்டியது யாரை? தென்முகக் கடவுள் ஶ்ரீ தட்சிணாமூர்த்தியையா, நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருளும் ஶ்ரீ பிரகஸ்பதியையா?

இரண்டு தெய்வங்களையும் வழிபடவேண்டும் என்பதே முறை.

மெய்ப்பொருள் ஒன்றுதான்; அதைப் பல பெயர்களில் அழைக்கின்றனர் சான்றோர் என்கிறது வேதம். ஆக, இறைவன் என்பவன் ஏகன்; ஒருவனே! ஆன்றோர் பெருமக்களின் வழிகாட்டுதலால், இறைவனை பலவிதத் தோற்றங்களில் வழிபடுகிறோம்.

ஶ்ரீ தட்சிணாமூர்த்தி தென்திசை பார்த்தபடி அருள்பவர்; குருவுக்கும் குருவானவர். தேவர்களின் குரு பிரகஸ்பதி, வடக்குத் திசை பார்த்தபடி காட்சி தருபவர்.

ஶ்ரீ தட்சிணாமூர்த்தி, பேசாமல் மௌனமாக இருந்தே சனகாதி முனிவர்களுக்குப் பேருண்மையை உபதேசித்து அருளினார் (மௌனம் வ்யாக்யானேன) என்று தெரிவிக்கின்றன புராணங்கள்.

குரு பகவான் பிரகஸ்பதி, மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவரான ஶ்ரீ வாமனருக்கு ஆசிரியராகத் திகழ்ந்தவர் என்கின்றன புராணங்கள். பிரகஸ்பதியை பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர் எனப் போற்றி வணங்குகிறோம். ஆனால், ஶ்ரீ தட்சிணாமூர்த்தியை, சிவாம்சமாகவே வழிபடுகிறோம். மனிதனுக்கு யோகம் ஸித்திக்க வேண்டும் எனில், அதன் முதல் பயிற்சியான மௌனத்தைப் பழக வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. ஆனால் இந்த உலகில், சாதாரணர்களாகிய நாம், எதையுமே பேசித்தான் செயல்பட வேண்டியிருக்கிறது. ஆகவே, உலகாயத வாழ்வில், முதலில் பேசும் குருவை வணங்கிப் பிரார்த்தித்துவிட்டு, அடுத்து மௌன குருவை, தட்சிணாமூர்த்தியை வணங்கிப் பேரருளைப் பெறுவோம்.

Guruvesaranam

'தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே்'

எனத் தெளிவுற விளக்குகிறார் திருமூலர்.

அறியாமை இருட்டுக்கு அப்பால் எந்தவொரு பொய்த் தோற்றமும் இன்றி, குறையே இல்லாத பரிசுத்தமான, மனதுக்கும் சொல்லுக்கும் எட்டாத அறிவும் ஆனந்த உருவும் கொண்டவர் ஞானம் அளிக்கும் ஶ்ரீ தட்சிணாமூர்த்தி. இதைத்தான், பேசா அநுபூதி பிறந்ததுவே என்று போற்றுகிறார் அருணகிரிநாதர். அதாவது, சொல்லாமல் சொல்லி, பேரானந்தத்தை அளிப்பவர் ஶ்ரீ தட்சிணாமூர்த்தி.

அதேபோல், தேவகுரு பிரகஸ்பதியும் வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர். ஆங்கீரஸரின் மைந்தன்; அற்புத வல்லமை கொண்டவர்; ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில், ஸப்த ரிஷிகளில் முக்கியமானவர்; பேரறிஞராகத் திகழ்ந்தவர் எனப் புராணங்கள் பிரகஸ்பதியை விவரிக்கின்றன.

பகவான், வாமன அவதாரத்தின்போது, பிரகஸ்பதியிடம் இருந்து வேதங்கள், அதன் அங்கங்கள், உப அங்கங்கள், ஆறு சாஸ்திரங்கள், ஸ்மிருதி மற்றும் ஆகமம் ஆகிய அனைத்தையும் கற்றறிந்தார் எனத் தெரிவிக்கிறது ப்ருஹத் தர்ம புராணம்.

ஆக, உலக வாழ்வில், அனைத்திலும் வெற்றி பெற, அருள் நிதியும் அறிவுநிதியும் அள்ளித் தரும் பிரகஸ்பதியை, அனுதினமும் வழிபட்டுப் பேரானந்தம் அடையலாம்.

ஒருவரது ஜாதகத்தில் குருபகவான் எங்கிருந்தாலும், அதற்காகக் கவலைப்படாமல், கலங்கித் தவிக்காமல், மாதந்தோறும் பூச நட்சத்திர நாளில் வழிபட்டால், குருவின் பேரருளைப் பெறலாம். அதேபோல், வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் ஒருசேர வருகிற நாளில் குருபகவானை வழிபட்டால், இழந்த பதவி மற்றும் செல்வங்களைப் பெற்று வாழலாம் என்பது ஐதீகம்.

ஆகமத்தில் ஆலமர் செல்வன்!

சிந்தை மகிழ்விக்கும் சிவவடிவங்களில் தலைசிறந்ததாக தட்சிணாமூர்த்தி வடிவம் விளங்குகிறது. இந்த வடிவத்திலும் பலவகையான உருவ வேறுபாடுகள் உள்ளன. இவை அறுபத்து நான்கு என்றும், முப்பத்து இரண்டு என்றும், இருபத்து நான்கு என்றும், எட்டு என்றும் சிற்பநூல்களில் விவரிக்கப் பட்டுள்ளன. இங்கு, காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ள எட்டு வகையான தட்சிணாமூர்த்தி வடிவங்களைக் காணலாம்.

யோக தட்சிணாமூர்த்தி: சந்திரனைப் போல் வெண்மையாகப் பிரகாசிக்கும் இவர், வீராசனத்தில் அமர்ந்துள்ளார். இடையில் பாம்பு தவழ்கிறது. முழங்காலின்மீது கையை நீட்டியுள்ளார். முனிவர்களால் சூழப்பட்டுள்ளார். மூன்று கண்களைக் கொண்டவர்.

வீணாதர தட்சிணாமூர்த்தி: முத்துப்போல் வெண்மையான நிறம் கொண்டவர். பாம்பைப் பூணூலாக அணிந்தவர். அக்னி, அட்ச மாலை ஏந்தியவர். பொன்னாலான வீணையை ஏந்தி மீட்டுபவர். கயிலை மலை மீது விளங்குபவர்.

மேதா தட்சிணாமூர்த்தி: ஸ்படிகம் போல் தூய வெண்ணிறம் கொண்டவர். ஞானமுத்திரை, புத்தகம், அக்னி, நாகம் ஆகியவற்றைத் தாங்கியவர். அழகிய முகத்துடன் விளங்குபவர். முத்து மாலை அணிந்து கிரீடம் தரித்தவர். ஆல மரத்தடியில் அமர்ந்து சிவாகமப் பொருளை விளக்குபவர்.

ஆசீன தட்சிணாமூர்த்தி: வெண்மை நிறம் கொண்டவர். மூன்று கண்களுடன் திகழ்பவர். வலது கரங்களில் மழுவும் அம்பும், இடது கரத்தில் மானும் வில்லும் ஏந்தியவர். வியாக்யான பீடத்தில் அமர்ந்துள்ளவர். புலித்தோலை ஆடையாக அணிந்தவர். பாம்பைப் பூணூலாகத் தரித்தவர் (இத்தகைய தட்சிணாமூர்த்தி வடிவம் ஆலங்களில் இல்லை).

வர தட்சிணாமூர்த்தி: முழங்கால் மீது கால்போட்டு அமர்ந்திருப்பவர். முயலகனை மிதித்துக் கொண்டிருப்பவர். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சனகாதியருக்கு சின்முத்திரை மூலம் வேதாந்தங்களை போதிப்பவர். ஞான முத்திரை, அட்ச மாலை, அக்னி, வேதச் சுவடிகளைத் தாங்கியவர்.

யோக பட்ட அபிராம தட்சிணாமூர்த்தி: ஒரு முகமும் மூன்று கண்களும், விரிந்த சடையும் கொண்டவர். வீணை வாசித்துக்கொண்டு வியாக்யான பீடத்தில் அமர்ந்திருப்பவர். பாம்பைப் பூணூலாக அணிந்தவர்.

ஞான தட்சிணாமூர்த்தி: ஒரு முகம், மூன்று கண்கள் கொண்டவர். ஸ்படிகம் போன்று ஒளிர்பவர். நான்கு கைகளில் சூலம், கபாலம், வீணை மற்றும் சின் முத்திரை கொண்டவர். சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை உபதேசிப்பவர்.

சக்தி தட்சிணாமூர்த்தி: ஸ்படிகம் போன்ற தூய நிறம் கொண்டவர். முத்துக்களால் ஆன அட்ச மாலை, பூரணமான அமுதக்கலசம் கொண்டவர். சின்முத்திரையுடன் பாம்பைக் கைகளில் தரித்தவர். சந்திரனைச் சூடியவர்.

சாக்த தந்திர நூல்களிலும் எட்டு வகையான தட்சிணாமூர்த்தி வடிவங்கள் சொல்லப்பட்டுள்ளன. அவை: மேதா தட்சிணா மூர்த்தி, கீர்த்தி தட்சிணாமூர்த்தி, லட்சுமி தட்சிணாமூர்த்தி, ஞான தட்சிணாமூர்த்தி, சாம்ப தட்சிணாமூர்த்தி, வீர தட்சிணா மூர்த்தி, சம்ஹார தட்சிணாமூர்த்தி, குரு தட்சிணாமூர்த்தி.

திருவிடைமருதூர் தட்சிணாமூர்த்தித் தலமாகும். இங்கு, பெருமான் சாம்பவி தட்சிணாமூர்த்தி வடிவில் எழுந்தருளியுள்ளார் என்கிறது புராணம். இங்கு விமானம், கோபுரம், சித்திரப் பிராகாரம் மற்றும் அலங்கார மண்டபத்தின் தூண்கள் ஆகிய இடங்கிளில் அநேக தட்சிணாமூர்த்தி வடிவங்கள் இடம்பெற்றுள்ளன.

இவைபோக 24 என்ற எண்ணிக்கையிலும் அருள்மிகு தட்சிணாமூர்த்தியின் திருவடிவங்களைப் பட்டியலிடுகின்றன ஞானநூல்கள்.

1. திருவெண்காடு - வீராசனர்

2. திருமாந்துறை - யோக வீராசனர்

3. கும்பகோணம் - கங்கா கிருபாகரன்

4. திருவையாறு - குருபரர்

5. திருவீழிமிழலை - பத்மபாதர்

6. திருவாரூர் - ஜகத் வீராசனர்

7. மாங்குடி - குரு உபதேசர்

8. கஞ்சனூர் - அக்னி தட்சிணாமூர்த்தி

9. கருவிலி - பவ அவுஷதர்

10. ஆலங்குடி - மகா தட்சிணாமூர்த்தி

11. திருவிடைமருதூர் - சாம்பவி தட்சிணாமூர்த்தி

12. மயிலாடுதுறை - மேதா தட்சிணாமூர்த்தி

13. மதுரை - சித்த பரமேஸ்வரர்

14. காசி, திருநெல்வேலி - தாரகேஸ்வரர்

15. பெருவேளூர், திருவிடைக்கழி - ஸந்த உபதேசிகள்

16. கொல்லம்புதூர் - அந்தண உபதேசிகர்

17. திருநாவலூர் - ஊழி முதல்வர்

18. திருப்புறம்பயம் - அறம் பயந்த பெருமாள்

19. திருநாவலூர் - ஊழி முதல்வர்

20. திருப்பெருந்துறை - அருவ தட்சிணாமூர்த்தி

21. தென் திருவாலங்காடு - வம்ச விருத்தீஸ்வரர்

22. தக்கோலம் - உத்குடி தாசனார்

23. ஓமாம்புலியூர் - ஓங்கார ரூபர்

24. கேதார்நாத் - கவுரி அனுகிரகர்