துலாம் - Guru Peyarchi Palangal 2022 - 2023 (TAMIL)

ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2022-2023 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

துலாம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

ற்றவர்களின் மனதைப் படித்தறியும் திறமைசாலிகள் நீங்கள். இதுவரையிலும் உங்கள் ராசிக்கு 5-ல் அமர்ந்து பலன் தந்த குருபகவான், இனி 14.4.22 முதல் 22.4.23 வரை 6-ம் வீட்டில் அமர்கிறார். இந்த காலக் கட்டத்தில் புதிய அனுபவங்களால் சில பாடங்களையும், முன்னேற்றத்துக்கான வழியையும் வழங்குவார்.

ஆகவே, `சகட குருவாச்சே!’ என்று அச்சப்படாதீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சனி மற்றும் புதனின் நட்சத்திரத்தில் குரு செல்வதால், அவ்வப்போது உங்களுக்கு யோக பலன்களையும் அள்ளித் தருவார் குரு.

அதேநேரம் வீண் செலவுகளும் உங்களைப் பற்றிய வீண் அவதூறுகளும் அதிகரிக்கும். காரியங்களில் அலைச்சல் உண்டு. சாதாரணப் பிரச்னைகளும் சண்டையில் முடியலாம்; கவனம் தேவை. வீட்டில் வீண் ஈகோ பிரச்னைகளுக்கு நீங்கள் காரணமாக வேண்டாம். எதிலும் சற்று விட்டுக்கொடுத்துப் போகவும். அதேபோல் எந்தவொரு காரியத்திலும் எவருக்கும் எவ்விதமான வாக்குறுதியும் தராதீர்கள். பணவரவு உண்டு என்றாலும் செலவுகளும் துரத்தும். சுபச் செலவுகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

சிற்சில தருணங்களில் ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை வந்துசேரும். மனதைத் தளரவிடாதீர்கள். சிலர், தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்களுடன் கருத்துமோதல்கள், சலசலப்புகள் உண்டாகும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சார பலன்கள்

14.4.22 முதல் 29.4.22 வரை

குரு பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்கிறார். சுபச் செலவுகள், திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வி.ஐ.பிகள் உதவுவார்கள். சிலநேரங்களில் இனம் தெரியாத கவலைகள், வேலைச்சுமை, பொருள் இழப்பு வந்து செல்லும். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

30.4.2022 முதல் 24.2.23 வரை

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், மனஅமைதி கிட்டும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதிதாக வீடு- வாகனம் வாங்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். 8.8.22 முதல் 16.11.22 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்திலேயே குருபகவான் வக்ரத்தில் செல்வதால், புதிய யோசனைகள் பிறக்கும். பிள்ளைகளிடம் கொஞ்சம் கண்டிப்பு தேவை.

24.2.23 முதல் 22.4.23 வரை

குருபகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள், நணபர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொத்துத் தகராறு தீரும். அடகிலிருந்த பழைய நகையை மீட்பீர்கள். வாகனம் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில்

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். புது ஒப்பந்தங்களும் அமையும். வாடிக்கையாளர்களிடம் இதமாகப் பேசுங்கள். மரவகைகள், உணவு, கமிஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் முரண்டு பிடிப்பார்கள்.

உத்தியோகத்தில்

நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியது வரும். அதேநேரம், மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் மார்ச் மாதத்தில் அமையும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி, வளைந்துகொடுத்து செயல்படவைத்து பெரும் வெற்றிகளைப் பெற்றுத் தருவதாக அமையும்.

முழுமையான குருப்பெயர்ச்சி பலன்கள் இங்கே..!