Vikatan

கொட்டிக் கொடுப்பார் குரு பகவான்!

'க'வாழ்வில் முன்னேற வேண்டும்; மேலும் மேலும் பல வெற்றிகளை அடைய வேண்டும் ' என்கிற எண்ணம் இல்லாத மனிதர்கள் இருக்கிறார்களா என்ன?

இந்த எண்ணம் அவருக்கும் இருந்தது. வாழ்வில் மிக உயர்ந்த இடத்தைப் பெறவேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்டிருந்தார். இதற்காக நான்கு வேதங்களையும் கற்றறிந்தார்; யாகங்களும் ஹோமங்களும் செய்து இறைவனை வழிபட்டார். அஸ்வமேத யாக வழிபாடுகளை நூறு முறைக்கும் மேல் செய்தார். மந்திரங்கள் சொல்லச் சொல்ல மனமும் புத்தியும் நேர்க்கோட்டில் இணைந்து செயல்பட்டன. யாகங்கள் நடத்த நடத்த, உடலும் உள்ளமும் கைகோர்த்து, அனைத்து செயல்பாடுகளுக்கும் உதவி செய்தன. வேதங்களிலும் யாகங்களிலும் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர் எனும் பெயரைப் பெற்றார்.

இந்த அனுபவமே தேவர்களுக்கெல்லாம் குரு எனும் உயர்ந்த பீடத்தை அவருக்கு வழங்கியது. தேவ குருவானார்! அவர்... பிரகஸ்பதி; ஆங்கிரஸ முனிவரின் மகன்!

ஆதிபரம்பொருள், தன்னுடைய சக்தியை பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று அம்சங்களாக்கியது. இந்த மூவரில் பிரம்மா தனது படைப்புத் தொழிலுக்கு உதவியாக, சப்த ரிஷிகளை உருவாக்கினார். இந்த ரிஷிகளால்தான் மனித இனமும் அசுரக் கூட்டமும் தோன்றியது. ஏழு ரிஷிகளில் ஒருவரே ஆங்கிரஸ முனிவர்.

இப்பேர்ப்பட்டவரின் மகன்; தேவர்களுக்கெல்லாம் குரு.. ஆனாலும் பிரகஸ்பதி, இன்னும் இன்னும் உயர வேண்டும் என விரும்பினார். அடர்ந்த வனப்பகுதிக்கு வந்தவர், அங்கே கோயில் கொண்டிருக்கும் இறைவனை வணங்கி, கடும் தவத்தில் மூழ்கினார். இப்படி தவத்தில் ஆழ்ந்திருப்பதற்கு, கற்றிருந்த வேதங்களும் செய்திருந்த யாகங்களும் பெருந்துணை புரிந்தன.

பிரகஸ்பதியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்குக் காட்சி தந்தார். அதுமட்டுமா? நவக்கிரக பதவியையும் வழங்கி, அடுத்த கட்டத்துக்கு... மிக முக்கியமான இடத்துக்கு பிரகஸ்பதியை உயர்த்தி ஆசீர்வதித்தார். அன்று முதல், குரு பகவானாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் துவங்கினார் பிரகஸ்பதி.

இவர், குருபகவானாக பதவி உயர்வு பெற்ற திருத்தலம்- திட்டை; தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருள்மிகு சுகந்தகுந்தளாம்பிகை சமேத அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் குடியிருக்கும் திட்டை திருக்கோயிலில், ஸ்வாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவே தனிச் சந்நிதி கொண்டிருக்கிறார் குரு பகவான்.

பதவியில் உயர்ந்தவர் மட்டுமல்ல; பலம் மிக்கவரும்கூட! பார்வதிதேவி, சிவனாரை திருமணம் செய்து கொள்வதற்காக கடும் தவம் புரிந்தாள். நாட்கள், வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, ஆண்டுகளாகவும் ஆகிவிட்ட நிலை! ஆனாலும் திருமணம் நடந்தேறவில்லை. இதுகுறித்து சிவனாரிடம் சென்று தேவர்கள் பிரார்த்திக்க, ''தேவியை திருமணம் செய்துகொள்ள நான் தயார். ஆனால், தேவிக்கு இன்னும் குருபலம் வரவில்லையே'' என்றாராம்!

இதனால்தான், 'குரு பலம் கூடி வரவேண்டுமே...' என அனைவரும் பிரார்த்திக்கிறோம்.

ஆகவே, திட்டை குருபகவானை அர்ச்சனை செய்து வழிபட்டால், பதவி உயர்வு உண்டு; தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவோம்; அந்தக் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்!

பின்னே... குரு பார்க்க கோடி நன்மை என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்?!

பரிகார ஹோமம்

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, திட்டை திருத்தலத்தில் லட்சார்ச்சனை மற்றும் குரு பரிகார ஹோமங்கள் நடைபெறுகின்றன. இந்த பரிகார வழிபாடுகளில் கலந்து கொண்டு, குரு பகவானை வழிபட்டால் அனைத்து நலனும் உண்டாகும்.