Vikatan

சர்வ வல்லமையும் தரும் ஸப்த குரு மூர்த்திகள்!

குருவின் பார்வை பட்டால் கோடானுகோடி பலன்கள் உண்டு என்கின்றன புராணங்கள். அதிலும், ஒரே நேரத்தில் ஏழு குருபகவான்களின் பார்வை நம் மீது விழுந்தால்?! இப்படியொரு புண்ணிய பாக்கியத்தைப் பெற, நாம் உத்தமர்கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

திருச்சி- சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகில் உள்ளது பிச்சாண்டார் கோவில். இங்கேதான் சிவபெருமான், ஸ்ரீமந் நாராயணன் மற்றும் பிரம்மதேவர் ஆகிய மூவரும் ஒருங்கே இருந்து அருள்வழங்கும் உத்தமர்கோவில் உள்ளது.

தனிச் சந்நிதியில் பிரம்மன் எழுந்தருள, கலைவாணி... கல்விச் செல்வத்தை அள்ளித் தரும் ஸ்ரீஞான சரஸ்வதியாக அருள்பாலிக்கும் அழகே அழகு!

பெருமாள்- ஸ்ரீபுருஷோத்தம பெருமாளாக கம்பீர தோற்றத்துடன் காட்சி தருகிறார். ஸ்ரீபூரணவல்லி எனும் திருநாமத்துடன் அருளும் தாயாரின் திருமுகத்தில் அப்படியொரு பிரகாசம்.

இங்கே பிச்சாண்டார், பிச்சாடனர், பிச்சாண்டவர் என்றெல்லாம் போற்றப்படுகிறார் சிவபெருமான். அம்பாளின் திருநாமம் ஸ்ரீசௌந்தர்ய பார்வதி; வடிவுடை நாயகி என்றும் ஒரு பெயர் உண்டு. பக்தர்களது பயம் நீக்கி மனதைரியம் தரும் தேவி இவள் என்கிறார்கள்.

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம்; 108 திருப்பதிகளில் ஸ்ரீரங்கத்துக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படும் திருக்கோயில்; 63 சிவ மூர்த்தங்களில் ஒன்றான பிச்சாடனர் திருக்கோலத்தில் சிவனார் காட்சி தரும் தலம்; விமானத்துடன் கூடிய தனிச் சந்நிதியில் குருபகவான் ஸ்தானத்தில் பிரம்மா அருளும் அற்புதம்... இப்படி இந்த ஆலயத்தின் பெருமைகளை பட்டியலிடலாம்!

முக்கியமாக... பிரம்ம குரு, விஷ்ணு குரு, சிவ குரு, சக்தி குரு, சுப்ரமண்ய குரு ஆகியோருடன் தேவகுருவாகிய பிரகஸ்பதி, அசுர குருவான சுக்கிராச்சார்யர் என்று ஸப்த குருக்களும் ஒருசேர தரிசனம் தந்து, பக்தர்களுக்கு குருயோகத்தை வாரி வாரி வழங்கும் சிறப்பு பெற்ற திருக்கோயில் என்பது குறிப்பிடத் தக்கது.

சரணடைந்து வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு புத்திர பாக்கியம், கல்வியில் மேன்மை, நோய் நொடி இல்லாத ஆரோக்கிய வாழ்வு ஆகிய வரங்களை வாரி வாரி வழங்குகின்றனர் இந்த ஸப்த குருக்கள். இவர்களை ஒருசேர தரிசித்து, அர்ச்சித்து வழிபட்டால், தோஷங்களால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்; உத்தியோகம், வியாபார விருத்தியுடன் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்; சர்வ வல்லமையும் ஸித்திக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கல்வி கேள்விகளில் சிறக்க...

குரு ப்ரம்மா குரு விஷ்ணு குரு

தேவோ மகேஸ்வர !

குருசாட்சாத் பரப்ரம்மா தஸ்மை

ஸ்ரீகுருவே நம !!

குருவே பிரம்மன்; குருவே விஷ்ணு; குருவே மகேஸ்வரன்- என்று குருவின் பெருமை போற்றும் ஸ்லோகத்தில் முதன்மை பெறும் பிரம்மதேவன், இந்த ஆலயத்தில் தனிச் சந்நிதி கொண்டிருப்பது விசேஷமான அம்சம். கலைமகளின் பதி என்பதால் ஞானத்தின் நாயகராகத் திகழும் இந்த பிரம்மனை வழிபடுவதால், குழந்தைகள் கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்குவர்! குருப் பெயர்ச்சி நாளில், ஸப்த குரு பரிகார ஹோமங்கள் விமரிசையாக நடைபெறுகின்றன.