Vikatan

Guru Peyarchi Palangal 2018 to 2019 in Tamil - விருச்சிகம்

அக்டோபர் 4-ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது. துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார் குரு. ஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். குருப்பெயர்ச்சியால் 2018-2019 ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் ஏற்படும்..? முழுமையான குருபெயர்ச்சி பலன்கள் இங்கே..!

Astro icon

சத்தியத்தைப் போற்றி நடப்பவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு விரயத்தில் இருந்த குருபகவான், 04.10.2018 முதல் 28.10.2019 வரை உங்கள் ராசிக்குள் ஜன்ம குருவாக அமர்வதால், பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைச்சுமை கூடும். ஒரு தேடலும், நிம்மதியற்ற போக்கும் ஏற்பட்டு நீங்கும். அதிகாரத்தில் இருப்பவர்களுடன் மோதல் போக்கு ஏற்படும். அடிக்கடி கோபவசப்படுவீர்கள். வாக்குறுதிகளைத் தந்து நிறைவேற்ற முடியாமல் கஷ்டப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மன உளைச்சல் காரணமாக உறக்கம் குறையும். குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்கவேண்டாம்.

அடிக்கடி அவநம்பிக்கையும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டு நீங்கும். வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையால் கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களிடையே உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். தான் தோற்றுவிடுவோமோ என்று அடிக்கடி நினைத்து ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்கள் தன்னிடம் உண்மையான பாசம் காட்டவில்லையோ என்று சந்தேகப்படுவீர்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு எந்த வகையிலும் ஜாமீன் கொடுக்கவேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உங்கள் இயல்புக்கு மாறாமல் நடந்துகொள்ளவேண்டாம்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:

குரு உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். சிலர் தங்களது பங்கை விற்று நகரத்தை ஒட்டி இடம் வாங்குவீர்கள். தியானம், பொதுச் சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப் போன திருமணம் கூடி வரும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே சச்சரவு ஏற்பட்டாலும் பாசம் குறையாது.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

4.10.18 முதல் 20.10.18 வரை குருபகவான், தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். வி.ஐ.பி.களின் தொடர்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும்.

21.10.18 முதல் 19.12.18 வரை குருபகவான் சனிபகவானின் அனுஷம் நட்சத்திர சாரத்தில் செல்வதால், வேலைச்சுமையால் பதற்றப்படுவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் முடியாமல் போனாலும் எதிர்பாராத காரியங்கள் முடிவடையும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வரும். அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். சிலர் பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். வாகனம் வாங்குவீர்கள்.

20.12.18 முதல் 12.3.19 வரை மற்றும் 9.8.19 முதல் 27.10.19 வரை குருபகவான் புதனின் நட்சத்திரமான கேட்டை நட்சத்திரத்தில் செல்வதால், மற்றவர்களுக்காக ஜாமீன் கொடுக்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தொண்டை புகைச்சல், சளித் தொந்தரவு, மறைமுக நெருக்கடிகள் வந்து செல்லும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். அயல்நாட்டிலிருப்பவர்கள் உதவுவார்கள். நட்பு வட்டம் விரியும்.

குருபகவானின் அதிசார சஞ்சாரம்:

13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் அதிசாரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. அரசால் ஆதாயமடை வீர்கள். சிலருக்கு வீடு, மனை அமையும். திருமண முயற்சிகள் சாதகமாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். உங்களை விட வயதில் குறைந்தவர்கள் மூலமாக ஆதாயமடைவீர்கள். அரசு காரியங்கள் உடனே முடியும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:

10.4.19 முதல் 18.5.19 வரை மூலம் நட்சத்திரத்திலும் மற்றும் 19.5.19 முதல் 8.8.19 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ரகதியில் செல்வதால், நீண்ட நாள் கனவுகள் நனவாகும். வி.ஐ.பி. ஒருவரின் அறிமுகம் திருப்புமுனையை உண்டாக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரிகளுக்கு:

வியாபாரத்தில் சிந்தித்து முதலீடு செய்யவும். புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். சின்ன சின்ன நஷ்டங்களும், ஏமாற்றங்களும் இருக்கத்தான் செய்யும். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். யாருக்கும் முன் பணம் தந்து ஏமாற வேண்டாம். தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். கூட்டுத் தொழிலை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு:

உத்தியோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக் கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்ல வேண்டாம். உங்களின் திறமையை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் நற்பெயர் கிடைக்காது. உங்களைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்புவார்கள். முறைபடி தேர்வெழுதி வெற்றி பெற்றும் பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வு பெற போராட வேண்டி இருக்கும்.

மாணவர்களுக்கு:

படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். பொழுதுபோக்குகளை அறவே தவிர்ப்பது நல்லது. அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் அதிக கவனம் செலுத்தவும்.

கலைத்துறையினருக்கு:

வாய்ப்புகளைப் போராடித்தான் பெறவேண்டி வரும். உங்களைப் பற்றிய வதந்திகள் பரவும். மூத்த கலைஞர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவது நல்லது.

இந்த குருப்பெய்ர்ச்சி பல வகைகளில் சிரமங்களையும், ஆரோக்கியக் குறைவையும் தந்தாலும், அனுபவ அறிவையும், தன்னைத் தானே உணரும் சக்தியையும் தரும்.

பரிகாரம்: சிவன் கோயில்களில் இருக்கும் ஶ்ரீசரபேஸ்வரரை ஏதேனும் ஒரு திங்கட்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபட, சிரமங்கள் குறையும்.

மற்ற ராசிகளுக்கான குருப்பெயச்சி பலன்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...