Guru Peyarchi Palangal 2021 to 2022 (Tamil) - கும்பம்

12அக்டோபர்2021

கும்பம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

தாராள மனமும் தயாள குணமும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே... உங்கள் ராசிக்கு 12 ம் இடமான மகரத்தில் அமர்ந்து உங்களுக்குத் தொல்லைகள் கொடுத்துக்கொண்டிருந்த குருபகவான் தற்போது உங்கள் ராசிக்குள்ளேயே வருகிறார். ஜன்ம குரு என்றால் அத்தனை நற்பலன்கள் கிடைக்காது என்று சொல்வார்களே என்று அஞ்சவேண்டாம். உங்களின் இரண்டு மற்றும் பத்தாம் இடத்துக்கு அதிபதியான குருபகவான் ஜன்மத்துக்குள் வருவதால் கஷ்டங்கள் குறையவே செய்யும்.

செயல்களில் உத்வேகம் பிறக்கும். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பிரிந்திருந்த கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும். அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்லத் திட்டமிட்டுத் தள்ளிப்போனதே அது இப்போது கைகூடும். அதன் மூலம் பணவரவும் உண்டாகும்.

ஜன்ம குரு என்றாலே கூடுதல் பொறுப்புகள் என்று புரிந்துகொள்ளுங்கள். பணிச்சுமை அதிகரிக்கும். உங்களால் எந்த அளவுக்கு உழைக்க முடியுமோ அந்த அளவுக்கு உழைக்க முயற்சி செய்யுங்கள். அதையும் மீறிய விஷயங்களுக்கு வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பணம், நகை கடன் கொடுப்பதாக இருந்தால் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவெடுங்கள். மனதில் தேவையற்ற அச்சங்கள் தோன்றும். பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வரும். எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதோடு தைரியமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

குரு பகவானின் பார்வை 5 - ம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் நல்ல பலன்கள் உண்டாகும். ஏழரைச் சனியின் பாதிப்புகள் குறையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் 7 - ம் வீட்டையும் பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளைக் கோலாகலமாக நடத்துவீர்கள்.

பாக்கிய ஸ்தானமான 9 - ம் வீட்டுக்கும் குருவின் பார்வை கிடைப்பதால் பணவரவில் இருந்த சிக்கல்கள் குறையும். அரசியல்வாதிகள் கோஷ்டி பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது. திடீரென்று புதிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள்.

மேஷம்

குருபகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும். பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனம் வாங்குவீர்கள். சகோதரர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வீடு மனை வாங்குவது குறித்து ஆசைகள் உண்டாகும். என்றாலும் சட்டப்படியே அனைத்தையும் செய்வது நல்லது.

31.12.2021 முதல் 02.03.2022 வரை

சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்யும் இந்தக் காலகட்டத்தில் மனதில் ஒருவிதப் படபடப்பு, பயம், தாழ்வுமனப்பான்மை ஆகியன வந்து செல்லும். வேற்றுமதத்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அடிக்கடி காய்ச்சல், சளித் தொந்தரவு, நெஞ்சு எரிச்சல் ஆகிய சின்னச் சின்னக் குறைபாடுகள் வந்து போகும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் கட்டும் முயற்சிகள் பலிதமாகும். அவசரத்திற்கு கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதியில் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் புதிய முயற்சிகள் வெற்றியடையும். வீட்டுக்குத் தேவையான மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த அனுமதி மற்றும் ஒப்புதல்கள் சாதகமாகும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய பொறுப்புகள் தேடிவரும் காலம் இது என்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள்