Guru Peyarchi Palangal 2021 to 2022 (Tamil) - மகரம்

12அக்டோபர்2021

மகரம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

நினைத்ததை நினைத்தபடி சாதிக்கும் திறமையும் நிர்வாகத்தில் தலைமைப் பண்பும் கொண்ட மகர ராசி அன்பர்களே

இதுவரை உங்கள் ராசியிலேயே அமர்ந்து ஜன்ம குருவாக எந்த நற்பலன்களும் தராமல் இருந்த குருபகவான் வரும் 13.11.2021 அன்று உங்களின் தன குடும்ப வாக்குஸ்தானமான கும்பத்தில் அடியெடுத்து வைக்கிறார். இதன் மூலம் உங்களின் மனப்போராட்டம் நீங்கும். செலவுகள் கட்டுக்குள் வரும். தேவையில்லாத சிக்கல்களைப் பேசிப் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். பணபலன் அதிகரிக்கும். வீட்டில் தொலைந்துபோயிருந்த நிம்மதி குடியேறும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்தும் வாய்ப்பு கனிந்துவரும். உறவினர்கள் விருந்தினர்கள் வீடுதேடி வந்த வண்ணம் இருப்பார்கள். அவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் உண்டாகும். உடல் நலக்கோளாறுகள் படிப்படியாகக் குறையும். கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள்.

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் எதிரிகளின் தொல்லைகள் குறையும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். உங்களைப் பற்றிய வதந்திகள் காணாமல் போகும். மருத்துவச் செலவுகள் குறையும்.

குருபகவான் எட்டாவது வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அயல்நாடுப் பயணங்கள் கூடி வரும்.

குருபகவானின் பார்வை பத்தாம் வீடான துலாத்தின் மீது படுவதால் சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடிவரும். புதிய வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையுடன் நெருக்கமாக இருப்பீர்கள். பதவி கிடைக்கும்.

மேஷம்

குருபகவானின் சஞ்சார பலன்கள்:

13.11.2021 முதல் 30.12.2021 வரை

குருபகவான் இந்தக் காலகட்டத்தில் அவிட்டம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வதால் தடைகள் ஓரளவு நீங்கும். முக்கியஸ்தர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நற்பலன்கள் கிடைக்கும். சண்டை பிடித்த சகோதர உறவுகள் இனி சமாதானமாகப் போவார்கள். வழக்கில் உங்களுக்கு சாதகமான போக்கு உண்டாகும். கடன் பிரச்னைகள் படிப்படியாகத் தீரும். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் மேம்படும். குடும்பத்தில் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். அக்கம்பக்கத்தில் மட்டும் அனுசரணையாக நடந்துகொள்ளுங்கள்.

31.12.2021 முதல் 02.03.2022 வரை

இந்தக் காலகட்டத்தில் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சாரம் செய்வதால் கேட்டிருந்த கடன் தொகை முழுமையாகக் கிடைக்கும். உறவுகளுக்கு மத்தியில் கௌரவமாக வாழ்வீர்கள். உங்கள் மதிப்பு உயரும்.திருமண வயதில் இருக்கும் மகர ராசி அன்பர்களுக்குத் திருமணம் கை கூடும். புதிய வீடு அல்லது மனை வாங்கும் முயற்சிகள் பலிதமாகும். வேலையில் பணிச்சுமையும் தொந்தரவான இடமாற்றமும் வந்து செல்லும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பயணத்தின் போது உரிய பாதுகாப்பு தேவை.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

குருபகவான் இந்தக் காலகட்டத்தில் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் தடைப்பட்டுக் கொண்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். அதனால் பணப்பற்றாக்குறையும் ஏற்படலாம். பிள்ளைகளால் அலைச்சலும், செலவினங்களும் அதிகரிக்கும் என்றாலும் அது அவர்களின் நலன் சார்ந்தே இருக்கும். வங்கிக் கடன் உதவிகள் தாமதமாகலாம். தேவையில்லாமல் உணர்ச்சிவசப்படுவதைத் தவிருங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம். விலையுயர்ந்த நகை மற்றும் செல்வத்தைக் கவனமாகக் கையாளுங்கள். சகோதரர்கள் உதவுவது ஆறுதலாக இருக்கும்.