SANI PEYARCHI 2020 - 2023 IN TAMIL - மேஷம்

11ஜூலை2019

சாதுர்யமாகப் பேசி சாதிப்பவர்களே!

நம்பிக்கையுடன் செயலில் இறங்கும் மேஷ ராசி அன்பர்களே, சூழலுக்கேற்ப பேசியும் செயல்பட்டும் வெற்றிவாகை சூடுபவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து உங்கள் கையில் காசு தங்காமல் கடன் பிரச்னைகளாலும், மனக் கவலைகளாலும் கலங்கடித்த சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரையிலும் 10-ம் வீட்டில் அமர்கிறார். ஆகவே நல்லதே நடக்கும்.

‘காரியவன் காரியத்தில் அமர, காரிய பங்கமடா’என்று மூல நூல்கள் சொன்னாலும், உங்களின் ஜுவனாதிபதியும், லாபாதிபதியுமான சனிபகவான் தனது சொந்த வீட்டில் ஆட்சிப்பெற்று அமர்வதால் யோக பலன்களையே தருவார். இனி நீங்கள் விஸ்வரூபமெடுப்பீர்கள். எடுத்த காரியத்தை சாதித்துக் காட்டுவீர்கள். திறமை இருந்தும் சரியான சந்தர்ப்பங்கள் அமையாதலால் அது உபயோகமில்லாமல் இருந்தது ஆனால் இப்போது உங்கள் அனைத்து திறமையும் வெளிபடும்.

இதுவரையிலும் தந்தைக்கும் உங்களுக்கும் ஓர் இடைவெளி இருந்து வந்திருக்கும். அவருக்கு அடிக்கடி மருத்துவச் செலவுகள் வந்திருக்கும். இனி, இந்த நிலைகள் அனைத்தும் மாறும். தந்தையாருடன் சுமூகமான உறவு தொடரும். அவரின் உடல் நலமும் முன்னேறும்.

நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். குடும்பத்தில் இனி உங்கள் வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தில் கணவன்- மனைவிக்கு இடையே இருந்து வந்த வீண் சந்தேகம், பிரச்னைகள் அனைத்தும் தீரும். உங்களின் பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள்.

தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பல சிக்கல்கள் இனி முடிவுக்கு வரும். கிரகநிலைகளோ, வினைப்பயனோ... எந்தக் காரணத்தாலோ, உங்களில் சிலர் சில நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பணத்தை இழந்திருப்பீர்கள். நீங்கள் எதிர்பாராத வகையில் அந்தப் பணம் கைக்கு வரும்.

உங்கள் வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கியில் கடன் கிடைக்கும். சொந்த ஊரில் உங்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். மனஸ்தாபம் கொண்டிருந்த சகோதரர்கள் இனி வலிய வந்து பேசுவார். குழந்தை இல்லாத தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். அக்கம்பக்கத்தாருடன் மனஸ்தாபங்கள் நீங்கும். சொந்தபந்தங்களின் வீட்டு விஷேசங்களில் அதிகம் கலந்துகொள்வீர்கள்.

கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். தந்தைவழியில் நன்மை உண்டு. ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்கலாம் என்ற யோசனை பிறக்கும். அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக முடியும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 11ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பணவரவுக்கு இனி குறைவிருக்காது. சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் ஏற்படும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

மேஷம்

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனி பகவான் 27.12.2020 முதல் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்கிறார். அடுத்த இரண்டரை வருடங்களுக்கு அவரின் பார்வை உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று அறிவதும் அதற்கே செயல்படுவதும் அவசியம்.

இந்தப் பெயர்ச்சி காலத்தில் சனி பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 4, 7 மற்றும் 12-ம் வீடுகளில் அமைகிறது.

4-ம் வீட்டைப் பார்ப்பதால்...

சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.

புது வாகனம் வாங்குவீர்கள்.

தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலைத்தூக்கும்.

யாருக்கும் பொறுப்பேற்று சாட்சி கையெழுத்திட வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

7-ம் வீட்டைப் பார்ப்பதால்

சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கர்ப்பப்பைக் கோளாறு, அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். பரஸ்பரம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.

வாழ்க்கைத் துணைவருடன் விட்டுக்கொடுத்துப் போகவும். மூன்றாம் மனிதர்களிடம் குடும்ப விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

வி.ஐ.பிகளின் அறிமுகமும் அதன் மூலம் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

12-ம் வீட்டைப் பார்ப்பதால்...

சனி பகவான் இந்தப் பெயர்ச்சி காலத்தில் 12-ம் வீட்டை பார்ப்பதால், தூக்கமின்மை ஏற்பட வாய்ப்பு உண்டு. யோகா, தியானம் போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டவும்.

சுப விரயங்கள் ஏற்படலாம். அதற்காக மனச் சலனம் வேண்டாம்.

புண்ணிய திருத்தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள்.