மாத ராசிபலன்

16செப்டம்பர்2021

புரட்டாசி மாத ராசிபலன் - செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 17 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் வழிபாடுகள் குறித்து கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ'முருகப்ரியன்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் சற்று இழுபறிக்குப் பிறகே சாதகமாக முடியும். மன உறுதி அதிகரிக்கும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்களுடன் பேசும்போது கூடுமானவரை பதற்றப்படாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. புதிய வீடு அல்லது மனை வாங்கக் கூடிய வாய்ப்பு கூடிவரும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். வேலையின் காரணமாகப் பிரிந்திருந்த கண வன் - மனைவி ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்ப தற்கான வாய்ப்பு ஏற்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். செலவுகள் விஷயத்தில் நன்றாகத் திட்டமிடல் அவசியம்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். பங்குதாரர்களின் அனுபவம் பயனுள்ளதாக இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். சக வியாபாரிகளால் ஏற்படும் போட்டிகளைச் சமாளிப்பீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். மாதப் பிற்பகுதியில் உறவினர் களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்: செப்: 17, 20, 21, 26, 27, 28, 29, 30; அக்: 6, 7, 8

சந்திராஷ்டம நாள்கள்: அக் 9 மாலை முதல் 10, 11 மாலை வரை

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனுக்கு செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, நெய்தீபம் ஏற்றுவது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் துர்கை வழிபாடும் நலம் தரும்.