தனுசு - Sani Peyarchi 2020 - 2023 Tamil

2020-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

எதிலும் தனித்து நிற்பவர்களே!

மனசாட்சிக்கு பயந்து நடந்து மற்றவர்களுக்கும் உதவக்கூடிய தனுசு ராசி அன்பவர்களே... இதுவரை உங்கள் ராசிக்குள் ஜன்மச் சனியாக அமர்ந்து குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்து எந்த வேலையையும் முழுமையாகச் செய்யவிடாமல் அலையவைத்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.

இனி வற்றிய பணப்பை நிரம்பும். அலைப்பாய்ந்த மனசு இனி அமைதியாகும். அவசரப்பட்டு முடிவுகளெடுத்து சில பிரச்னைகளில் சிக்கித் தவித்தீர்களே... இனி அனுபவப்பூர்வமாக யோசிப்பீர்கள்.

இதுவரை எதிர்மறை எண்ணங்களால் மன உளைச்சலுக்கு ஆளானீர்கள். சிலர் உங்களை அசிங்கப்படுத்தினார்கள். பலரையும் நம்பி ஏமாந்தீர்கள். யாருமே தன்னை மதிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டீர்கள். கல்யாணம், காதுகுத்து போன்ற விசேஷங்களில் சிலர் உங்களை அலட்சியப்படுத்தினார்கள். இனி இவையெல்லாம் மாறும். உங்களைக் கண்டும் காணாமல் போனவர்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள். மனதில் இருந்த இனம்புரியாத பயம் விலகும். எப்போதும் தலை வலி, காது வலி, வயிற்று வலி என வலியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தவர்கள்... சாப்பாட்டுக்கு முன், பின் என்று பல்வேறு மருத்து, மாத்திரைகளை உட்கொள்ள நேர்கிறதே என்று வருத்தப்பட்டவர்கள், இனி ஆசுவாசமாவீர்கள். உங்களின் உடல் நிலை சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை நீங்கும். சர்க்கரை, ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். இனி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவி எப்போது பார்த்தாலும் எதையோ யோசித்தபடி ஒருவிதக் கவலையில் ஆழ்ந்திருந்தார் அல்லவா இனி முகமலர்ச்சியுடன் உற்சாகம் அடைவார்.

என்றாலும் பாதச்சனியாக வருவதால் கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளும், மனஸ்தாபங்களும் வந்து நீங்கும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள். வெளிப்படையாகப் பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். முடிந்தவரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களானாலும் சரி அதிகம் உரிமையுடன் பேசிப் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 03 - ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்டுச் சில காரியங்களை முடிப்பீர்கள். இக்காலக்கட்டத்தில் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவான் 2 ம் வீட்டில் அமர்ந்து, 4,8,11 ஆகிய வீடுகளைப் பார்க்கிறார். சனிபகவான் உங்களின் 4 ம் வீட்டை பார்ப்பதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

சனிபகவான் உங்களின் 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள்.

சனிபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீங்கள் சரியாக மதிப்பதில்லை என்று மூத்த சகோதரங்கள் நினைப்பார்கள் என்பதால் உங்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டிய காலகட்டம்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

சனிபகவான் 2 ம் வீட்டில் பாத சனியாக அமர்கிறார் என்று கவலைப்பட வேண்டிய அவசியம் தனுசு ராசிக்காரர்களுக்கு இல்லை. சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமைவதால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும் காலகட்டமாக இது அமையும்.

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் பாக்யாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் எதையும் துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை கிட்டும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிக்கப் படுவீர்கள். புது வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். இதற்கிடையில் 11.5.2021 முதல் 26.9.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் பழைய வழக்குகளில் கவனம் தேவை. கைப்பொருள்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

28.12.2021 முதல் 26.1.2023 வரை

உங்களின் அட்டமாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.1.2023 வரை சனிபகவான் செல்வதால் பணத்தட்டுபாடு, காரியத்தடை, திடீர் பயணங்கள் என வந்து நீங்கும். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் திடீர் யோகம், எதிர்பாராத உதவி, பண வரவு எல்லாம் உண்டு. அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் கிட்டும்.

27.1.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். புதிய சொத்துச் சேர்க்கையுண்டு. இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை உள்ள காலத்தில் சனிபகவான் வக்ரமடைவதால் பிள்ளைகளால் அலைச்சலும், டென்ஷனும் வரக்கூடும். உறவினர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள்.

தனுசு ராசிப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

கடமையைச் செய்வதில் எந்தவிதமான சோர்வும் காட்டாமல் பணியாற்றும் தனுசு ராசிப் பெண்களே... இதுவரை ஜன்மச்சனியாய் இருந்து உங்களை நாலாவிதத்திலும் புரட்டிப் போட்ட சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.

மருந்து மாத்திரைகளுக்காக மாதச்சம்பளத்தையே ஒதுக்கிய அவல நிலை மாறும். நோய் விலகும். எதைப் பேசினாலும், குடும்பத்தில் தப்பாகப் புரிந்து கொண்டார்கள். எங்கு சென்றாலும் மறைமுக, எதிர்ப்பு இருந்தது. அவையெல்லாம் இனி மறையும். இனி அடிமனதிலிருந்த அச்சம் விலகும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். சோகமே வடிவாய் இருந்த உங்கள் கணவர் முகம் இனி பிரகாசிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவிர்கள், நண்பர்களுடன் நல்ல உறவு நீடிக்கும்.

என்றாலும் சனி பகவான் இப்போது 2 - ம் வீட்டிற்கு வருவதால் கணவருடன் வாக்கு வாதங்களும், கருத்துவேறுபாடுகளும், சந்தேங்களும் வரும். மாமியார், நாத்தனாருடன் நிதானமாக பேசுங்கள். தேவைப்பட்டால் மௌனம் காப்பது நல்லது. கண்வலி, பல்வலி வந்துபோகும். காலில் அவ்வப்போது அடிபடும். பிள்ளைகள் உங்களை முன்னுதாரனமாக பின்பற்றுவதால் உங்களின் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வீர்கள். மகளுக்கு, படிப்பு இருந்தும், அழகு இருந்தும், கை நிறைய சம்பாதித்தும் வந்த வரனெல்லாம் தட்டிப்போனதே என்று ஏங்கினீர்களே! இனி பார்ப்பவர்களெல்லாம் வியக்கும்படி பொண்ணுக்கு நல்ல வரன் உடனே அமையும். சனிபகவான் உங்களின் 4 - ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும்.

சனிபகவான் உங்களின் 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. ஆனால் உங்களின் லாப வீட்டை சனிபகவான் பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.

வியாபாரம் செய்யும் தனுசு பெண்களே... முன்பு ஏற்பட்ட நஷ்டங்களை இனி அனுபவ அறிவால் சரிசெய்வீர்கள். தொழில் நுணுக்கங்களை அறிந்து பேசுவீர்கள். வாடிக்கையாளர்களிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட வேலையாள்களைப் பணியிலிருந்து நீக்குவீர்கள். நல்ல பணியாளர்களைச் சேர்ப்பீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் இனி பாந்தமாக நடந்து கொள்வார்கள். அரசாங்கத்திற்கு செலுத்தவேண்டிய வரிகளை முறையே செலுத்திவிடுவது நல்லது.

உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கு இனி நல்ல வேலை கிடைக்கும். பெரிய பதவியில் அமர வேண்டிய நீங்கள் சிலரின் மோசடிகளால் நல்ல வாய்ப்புகளை இழந்தீர்கள். இப்போது உயர்பதவி கிட்டும். தொல்லை தந்த உயரதிகாரி வேறிடத்திற்கு மாற்றப்படுவார். சக ஊழியர்கள் உங்களின் நல்ல மனதை புரிந்து கொண்டு நட்புறவாடுவார்கள். கலைத்துறைப் பெண்களே! வீண் வதந்தி, விமர்சனங்களிலிருந்து விடுபடுவீர்கள். விரும்பிய வாகனத்தை வாங்குவீர்கள். வசதி வாய்ப்புகள் பெருகும். மொத்தத்தில் இந்த சனி மாற்றம் அசுர வளர்ச்சியையும், பணவரவையும், எங்கும் எதிலும் வெற்றியையும் தருவதாக அமையும்.

தனுசு ராசி வியாபாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

ஜன்ம சனியாக உங்கள் ராசியில் அமர்ந்த சனிபகவானால் தொடர்ந்து வந்த போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள்.

2 ம் இடத்தில் அமரும் சனிபகவானால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் நிம்மதி ஏற்படும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாள்கள் இனி அடிக்கடி விடுப்பு எடுக்கமாட்டார்கள். கடையை விரிவாக்கி நவீனமயமாக்குவீர்கள். தள்ளிப் போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.

மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சியால் உங்கள் தொழிலில் புதிய மாற்றங்களும் நல்ல முன்னேற்றங்களும் உருவாகும் என்பது உறுதி.

உத்தியோகஸ்தர்களே...

ஜன்ம சனியால் வேலைபார்க்கும் இடத்தில் படாத பாடு பட்ட தனுசு ராசி அன்பர்களே... இனி அந்த சூழல் மாறும். இனி அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களைக் கடுமையாக வேலைவாங்கிய மேலதிகாரி வேறிடத்திற்கு மாறுவார். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். நீதி மன்றத் தீர்ப்பும் சாதகமாகும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். என்றாலும் சனிபகவான் உங்களின் வாக்கு ஸ்தானத்தில் அமர்வதால் அலுவலகத்தில் வீண் பேச்சை குறையுங்கள். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள். யாரையும் நம்பி எந்த ரகசியங்களையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சனியின் பார்வையால் இனி இழந்த சலுகைகள், பதவிகளை தேடி வரும். கணினிதுறையினர்களுக்கு, வெளிமாநிலம் - வெளிநாட்டிகளில் கான்ட்ராக்ட் முறையில் பணி புரிய வாய்ப்புகள் வரும். இந்த சனி மாற்றம் கொஞ்சம் அலைச்சலையும், செலவினங்களையும் தந்தாலும், உங்களை முன்னேற்றப் பாதைக்கும் அழைத்துச் செல்லும்.

பரிகாரம்:

தேனி மாவட்டம் கண்டமனூர் அருகில் உள்ள குச்சனூரில், சுயம்பு வடிவாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசனீஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சகல பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் சந்தோஷம் பொங்கிப் பெருகும்.