Vikatan

சனிபகவான் தகவல்கள்

சனியைப் போல கொடுப்பாரும் இல்லை; அவரைப் போல கெடுப்பாரும் இல்லை' என்றொரு சொல் வழக்கு உண்டு. இதனால், நம்மில் பலரும் சனி பகவான் என்றாலே பயந்து நடுங்குகிறோம். இது தவறு! தீர்க்காயுளைத் தனது பொறுப்பில் வைத்திருப்பதால் 'ஆயுள்காரகன்' எனப் போற்றப்படும் சனிபகவான்...கருணை வள்ளல்! முன்ஜன்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களைத் தந்து, நம் பாவச் சுமையைக் களையும் கிரக மூர்த்தி இவர். சூரியபகவானுக்கும் சாயாதேவிக்கும் மைந்தனான இவர், தொட்டில் குழந்தையாக இருந்தபோதே இருகரம் கூப்பி சிவபெருமானை வணங்கியவர் என்ற பெருமை கொண்டவர்.

வானியல்படி, சூரியனிடமிருந்து அதிக தூரத்தில் உள்ள பாதையில் சுற்றி வரும் சனி, மற்ற கிரகங்களைவிட மிக மெதுவாகச் சுழல்கிறார். இவர், ஒரு ராசியைக் கடக்க சுமார் இரண்டரை ஆண்டு காலம் ஆகும்; ராசி மண்டலத்தைக் கடக்க சுமார் 30 ஆண்டுகள் பிடிக்கும். எனவே இவரை, 'மந்தன்' என்பார்கள். காரி, முடவன், காகம் ஆகிய பட்டப் பெயர்களும் இவருக்கு உண்டு.

காசிக்குச் சென்ற சனிபகவான், அங்கே லிங்கப் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்து வந்தாராம். இதன் பலனால் சிவபெருமானின் அருளைப் பெற்று, இவர் நவக்கிரக வரிசையில் இடம்பெற்றதாகவும், மகேஸ்வரன் அருளால் இவருக்கு 'ஈஸ்வர' பட்டம் கிடைத்ததாகவும் சொல்கின்றன புராணங்கள். தன்னைப் போன்றே சிவனருள் பெற்ற அடியவர்களுக்கு எல்லா நலன்களையும் அள்ளி வழங்கும் மூர்த்தி இவர். இன்னொரு விஷயம் தெரியுமா? ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் அமர்ந்திருக்கிறார் எனில், நாட்டுக்கே தலைவராகும் வாய்ப்பு அந்த நபருக்குக் கிடைக்குமாம்!

அது மட்டுமா? மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பொருட்களை வெளிக்கொணரும் அரிய சக்தியையும், அந்தத் துறையில் பேரும் புகழும் அடைய வைக்கும் சிறந்த அறிவையும் தரும் ஆற்றல் பெற்றவர் சனி பகவான். தவிர... அந்நிய மொழிகளில் பாண்டித்தியம் பெற, விஞ்ஞானத்தில் தேர்ச்சி பெற, மருத்துவத்துறையில் சிறப்படைய இவரின் அருள் தேவை. ஜ்யோதிஷ் க்ரந்த எனும் வடமொழி நூலும், கௌடில்யரின் (சாணக்கியர்) அர்த்தசாஸ்திரமும் சனி பகவானின் பெருமைகளையும் மனித வாழ்வில் அவர் எப்படி பங்கு வகிக்கிறார் என்பதையும் அற்புதமாக விளக்குகின்றன.

கிரகங்களில் சேவகனான இவர், மனித உடலில் நரம்பு ஆவார். தொடை, பாதம், கணுக்கால் இவற்றின் சொந்தக்காரர். பஞ்சபூதங்களில்- காற்று! ஊழியர்களைப் பிரதிபலிப்பவர். பாப கிரக வரிசையில் முதலிடம் வகிப்பவர். இவரின் நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்திரட்டாதி.

உலோகப் பொருள்களில்- இரும்பு இவருடையது. குள்ளமான தோற்றம் கொண்டவரான சனிபகவான் கருமை நிறம் உடையவர். கிரக ரத்தினங்களில் நீலக்கல் இவருடையது. கருப்பு வஸ்திரம் அணிபவர். காக்கை, எருமை வாகனம் ஆகியவற்றில் வலம் வருபவர். சமித்துகளில் வன்னி இலைப் பிரியர். கைப்புச் சுவையில் அலாதி பிரியம் உண்டு. எள் அன்னம் இவருக்கு மிகவும் பிடிக்கும்.

இப்படி சனீஸ்வரனின் குணநலன்களை விவரிக்கும் நூல்கள், அவரால் விளையும் பலாபலன்களையும் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

ஜோதிட பாஷையில் சொல்வதானால்... லக்னத்தில் சனி நின்றால் ஆயுள் விருத்தி உண்டு. 3-ஆம் இடத்தில் இருப்பின் தீர்க்காயுள், சரளமான பணவருவாய், பெயர்-புகழ் மற்றும் அரசியல் செல்வாக்கு கிடைக்கும். 6-ல் அமர்ந்திருந்தால் தன யோகம், சத்ரு ஜெயம், தன்மான குணம், தைரியம் மற்றும் அஷ்ட லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

8-ல் சனி அமர்ந்திருப்பின் பர்வத யோகம்; மலை போன்று சொத்துகள் குவியும். சனி பகவான் 10-ல் பலமாக நிற்க, மந்திரிக்குச் சமமான பதவி, தனம், ஜெயம் உண்டு. வணிகம் செய்பவர் எனில், இயந்திர தொழிற்சாலைகள் அமைக்கும் பாக்கியமும் உண்டு. 11-ல் சனி இருக்க, அந்த நபர் புண்ணியவானாக இருப்பார். எல்லாக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். ஆம்! சனி பலம் பெற்றவரின் வாழ்வில் எந்நாளும் இன்பமயமே!

'இப்படிப்பட்ட பெருமைகளுடன் திகழும் சனீஸ்வரர், தங்கள் ஜாதகத்தில் பலமாக அமையப் பெறவில்லையே' என்று எவரும் வருந்தத் தேவையில்லை!

மிக எளிமையான பரிகாரங்கள் செய்து, சனீஸ்வரரை வழிபட்டு துன்பங்கள் நீங்கப் பெறலாம்.

சனீஸ்வர பரிகாரங்கள்...

சனிக் கிழமைதோறும் விரதம் கடைப்பிடிப்பது நன்று. பிரசித்திபெற்ற சிவன் கோயிலில் உள்ள நவக்கிரகத்தில் அமைந்திருக்கும் சனீஸ்வரருக்கு, மாலை வேளையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும் அர்ச்சனை செய்வதும் நல்ல பலனைப் பெற்றுத் தரும்.

சனிக் கிழமைகளில் ஏழைகளுக்கும் ஊனமுற்றோருக்கும் அன்னதானம், ஆடைதானம் மற்றும் காசு தானம் செய்வதும் மனதுக்கு நிம்மதியைப் பெற்றுத் தரும்.

திருநள்ளாறு தலம் சென்று சனீஸ்வரரை தரிசிப்பதும், நளதீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரை வழிபடுவதும் நற்பலன்களை உண்டாக்கும்.

சனீஸ்வரரின் பரிகாரத் தலங்களும் உண்டு. குச்சனூர், ஏரிக்குப்பம் முதலான சனி பரிகாரத் தலங்களுக்குச் சென்று அவரை தரிசிப்பதாலும் பலன் உண்டு.

இயலவில்லை எனில், தினமும் சுந்தர காண்டம் படியுங்கள் போதும். 108 முறை ஸ்ரீராமஜெயம் எழுதுவதும் நல்ல பலனைப் பெற்றுத் தரும். எல்லாவற்றுக்கும் மேலாக ஆனைமுகனையும் ஆஞ்சநேயரையும் சிக்கெனப் பற்றிக் கொள்ளுங்கள்... இவர்களின் அடியவர்களை, வாழ்வாங்கு வாழ வைப்பார் சனி பகவான்!

சனி தோஷத்துக்கு பரிகாரங்கள்

நவகிரகங்களில் சனிபகவான் நீதி தவறாதவர். அவரவர் கர்மவினைகளுக்கு உரிய பலனை தவறாமல் வழங்குபவர். கிரகங்களிலேயே ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான் ஒருவரே. பொதுவாக சனிப் பெயர்ச்சி என்றாலே எல்லோரும் பயப்படுவார்கள். அப்படி பயப்படவேண்டிய அவசியமே இல்லை. சனி கிரகத்தினால் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில், பாதிப்பில் இருந்து விடுபட பல எளிய பரிகாரங்கள் உள்ளன.

ஒரு கைப்பிடி பச்சரிசியை எடுத்துக்கொண்டு, அதை நன்றாக பொடி செய்துகொள்ளவேண்டும். பிறகு சூரியனை வழிபடவேண்டும். 'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி சூரியனை வழிபட்ட பிறகு குளக்கரையிலோ மரத்தின் அடியிலோ உள்ள விநாயகரை மூன்றுமுறை வலம் வந்து வழிபட்டுவிட்டு, பொடித்த பச்சரிசி மாவை தரையில் போடவேண்டும். அப்படி போடும் மாவை எறும்புகள் எடுத்துச் செல்லும். குறிப்பாக வன்னிமரத்தின் அடியில் இருக்கும் விநாயகரை வலம் வருவது மிகவும் விசேஷம். பச்சரிசி மாவை எறும்புகள் மழைக்காலத்தில் பயன்படுத்துவதற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். வீட்டு வாசலில் பச்சரிசி மாவினால் கோலம் போடவேண்டும் என்று சொல்வதுகூட இதற்குத்தான். இந்த பரிகாரத்தை எப்போதுமே தொடர்ந்து செய்வது மிகவும் நல்லது.

ஒருவருக்கு சனி தசை வந்து விட்டால், அவருக்கு சந்தேக புத்தி வந்துவிடுகிறது. யார் சொல்வதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். குறிப்பாக அஷ்டமத்துச் சனி மிகவும் கஷ்டப்படுத்திவிடும். ஏழரைச் சனியின் பாதிப்பை விடவும் அஷ்டமத்து சனி மிக அதிக பாதிப்பை ஏற்படுத்துவார். அஷ்டம சனி நடப்பவர்கள் சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபட இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நியதிகளைக் கடைப்பிடித்தால், பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

பிரதோஷ பூஜைகளில் பங்கேற்பது நல்லது. சனி தசை நடக்கும் போது எந்த செயல் செய்தாலும் தாமதமாகும். அதற்காக கோபப்படக் கூடாது. பொறுமையாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

தினமும் காகத்துக்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

சனிக்கிழமைதோறும் சனிபகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்.

கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமைதோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

விநாயகர் வழிபாடு செய்யலாம்.

அனுமன் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளைக் குறைக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

தேய்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

ஏழை மாணவர்களின் படிப்புச் செலவுக்கு உதவலாம்.

சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

அன்னதானத்துக்கு உதவி செய்யலாம்.

சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

சிவபெருமானுக்கு வில்வ இலை அர்ச்சனை

பிரதோஷ காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.

தினமும் ராம நாமம் ஜபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

கால்களால் நடக்க இயலாதவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்யலாம்.

இந்த நியதிகளை முறையாக கடைப்பிடித்து, சனியினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

மற்ற ராசிகளுக்கான சனிபெயர்ச்சி பலன்களைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...