கடகம் - Sani Peyarchi 2020 - 2023 Tamil

2020-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் நாள் சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்கிறார். அதையொட்டி நடைபெறும் சனிப்பெயர்ச்சி பலன்கள் இங்கே...

உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்களே!

கடின உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்கூடிய கடக ராசி அன்பர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகவும் முக்கியமான பல மாற்றங்களைக் கொண்டுவர இருக்கிறது. இதுவரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து எல்லா வகையில் முன்னேற்றத்தையும், அடிப்படை வசதி, வாய்ப்புகளையும் அதிகரிக்க வைத்த சனிபகவான், நாடாளுபவர்களின் நட்பையும், வேற்று மதத்தினர்களின் அறிமுகங்களையும் கிடைக்கச்செய்தார்.

பணப்புழக்கம் சரளமாக இருந்தது. சொத்துகள் வாங்கினீர்கள். நல்லது கெட்டது நான்கையையும் அறிந்து செயல்பட்டீர்கள். நாலு பேர் மதிக்கத்தக்க வகையில் உங்களின் தராதரத்தை உயர்த்திக் காட்டிய சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் 7 ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகத்தான் இருக்க வேண்டும்.

என்றாலும் மகர ராசியில் சனிபகவான் ஆட்சிப் பெற்று அமர்கிறார். இதனால் வீண் விவாதங்கள் வந்தாலும் பெரிதாக பாதிக்காது. கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொட்டதுக்கெல்லாம் குற்றம் குறை கண்டுபிடித்துச் சண்டையிடாதீர்கள். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்களுக்குள் சண்டை, சச்சரவை ஏற்படுத்தவும் தயங்கமாட்டார்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். விலை உயர்ந்த பொருள்கள், நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். அரசுக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி எதுவாக இருந்தாலும் தாமதிக்காமல் உடனே செலுத்திவிடுவது நல்லது. வங்கிக் காசோலைகளில் முன்னதாக கையெழுத்துப் போட்டு வைக்காதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன்பாக ஒருமுறைக்கு இருமுறை கவனமாகப் படித்துப் பார்ப்பது நல்லது. சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த காரியமும் செய்ய வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பச் சிதைவால் ஆரோக்கியம் பாதிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.

பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மகனின் உயர்கல்விக்காகச் சிலரின் சிபாரியை நாடவேண்டியிருக்கும். உத்தியோகம், வியாபாரத்தின் பொருட்டு குடும்பத்தைப் பிரிய வேண்டி வரும். சொந்த வாகனத்தில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல வேண்டுமென்று வாகனத்தில் அடித்துப் பிடித்துப் போகாமல் முன்னதாகவே செல்லப்பாருங்கள். வெளிவட்டாரம் நன்றாக இருக்கும். பிரபலங்கள், வேற்றுமொழிக்காரர்கள் உதவுவார்கள். 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 8 ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் இனம் தெரியாத கவலை, ஏமாற்றம், பொருள் இழப்பு, சின்னச் சின்ன விபத்துகள் ஆகியன ஏற்படலாம்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்

சனிபகவானின் பார்வை, ராசி, நான்கு மற்றும் ஒன்பது ஆகிய வீடுகளுக்குக் கிடைக்கிறது. உங்கள் ராசியையே சனிபகவான் பார்ப்பதால் விளம்பர மோகத்தில் மயங்குவீர்கள். புது நிறுவங்களின் சோப்பு, ஷாம்பு, பேஸ்ட் வகைகளை பயன்படுத்தி உடம்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அலர்ஜியால் தோலில் நமைச்சல், கட்டி, முடி உதிர்வதற்கும் வாய்ப்புள்ளது. எப்போதும் போல இனிமேல் நேரம் தவறி சாப்பிட வேண்டாம். செறிமானக் கோளாறு வந்து நீங்கும். உப்பு, புளி, மிளகாயை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். மறதியும், பித்தத்தால் தலைச்சுத்தலும் வந்து நீங்கும். அனைத்தில்ரும் விழிப்புணர்வு தேவை.

சனிபகவான் 4 - ம் வீட்டைப் பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அவ்வப்போது குடிநீர், கழிவுநீர் பிரச்சனைகள் வந்துபோகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கும். அவருடன் வீண் விவாதங்கள் வந்து செல்லும்.

சனிபகவான் உங்களின் 9 ம் வீட்டைப் பார்ப்பதால் கையிருப்புகள் கரையும். வெளியிலும் கடன் வாங்க நேரிடும். என்றாலும் குருபகவானின் பார்வை அடுத்த 11 மாதங்களுக்கு இருப்பதால் உங்கள் கஷ்டங்களைக் கடந்து வெற்றிபெறுவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:

27.12.2020 முதல் 27.12.2021 வரை

உங்களின் தன ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்லும் இக்கால கட்டத்தில் பிரபலங்கள் உதவுவார்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். சொத்துப் பிரச்சனைகள் தீரும். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் பணத்தட்டுபாடு, வீண்பகை, அரசு விஷயங்களில் இழுபறி நிலையும் உண்டாகும்.

28.12.2021 முதல் 26.01.2023 வரை

உங்கள் ராசிநாதனான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் திடீர் யோகம், பணவரவு, அரசு மரியாதை, வீடு, மனை வாங்குதல் போன்றவை தேடி வரும். இதற்கிடையில் 25.5.2022 முதல் 9.10.2022 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் ஏமாற்றங்கள், இழப்புகள், மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.

27.01.2023 முதல் 19.12.2023 வரை

உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகாவன் செல்வதால் சுபகாரியம், பிள்ளைகளால் பெருமை, சமூகத்தில் அந்தஸ்து, உத்தியோகத்தில் பதவியுயர்வு ஆகியன உண்டாகும். இதற்கிடையில் 27.6.2023 முதல் 23.10.2023 வரை சனிபகவான் வக்ரத்தில் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். நெடுநாள்களுக்குப் பிறகு பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். உங்களை எதிர்த்துப் பேசியவர்கள் வலிய வந்து ஆதரித்துப் பேசுவார்கள்.

கடகராசிப் பெண்களுக்கான சிறப்பு சனிப்பெயர்ச்சி பலன்கள்!

உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமரும் சனிபகவானால் அடிக்கடிக் குடும்பத்தில் சண்டைகள் வரலாம்.

கணவரின் சின்ன சின்னக் கோபங்களையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். இனி எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். வெளுத்ததெல்லாம் பாலாக நினைக்க வேண்டாம். ஐந்து ரூபாயில் முடிக்க வேண்டியதை ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் செலவுகளும், அலைச்சலும் வரும். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். மகளின் கல்யாணத்தைப் போராடி முடிப்பீர்கள். சகோதர வகையில் அதிக உரிமையெடுத்துக் கொள்ளவேண்டாம். பூர்விகச் சொத்துப் பிரச்சனைகள் தலை தூக்கும். மாமியார், நாத்தனாரின் ஆதரவைப் பெறுவீர்கள். என்றாலும் சின்னச் சின்ன மனக்கசப்புகள் வரத்தான் செய்யும். வரும் பணத்தை தாராளமாகச் செலவு செய்யாமல் உங்களுக்காகவும் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் விளம்பர மோகத்தில் மயங்கிப் புது நிறுவங்களின் பொருள்களை வாங்க வேண்டாம். சனிபகவான் 4 ம் வீட்டை பார்ப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அவ்வப்போது குடிநீர், கழிவுநீர் பிரச்சனைகள் வந்துபோகும். சனிபகவான் உங்களின் 9 - ம் வீட்டைப் பார்ப்பதால் சிக்கனமாகச் செலவு செய்யுங்கள். தந்தை வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்துபோகும்.

வியாபாரம் செய்யும் பெண்கள் மற்றவர்களை நம்பிப் புது முதலீடுகள் செய்ய வேண்டாம். இருப்பதை வைத்துத் தொழிலைப் பெருக்கப் பாருங்கள். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் லாபம் உண்டாகும். வாடிக்கையாளர்களின் அன்பைப் பெறுவீர்கள். வேலையாள்கள் முரண்டு பிடிப்பார்கள். பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம்.

உத்தியோகம் பார்க்கும் பெண்கள் தடைப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர் பாதையில் செல்வது நல்லது. உயர்அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகக் கோப்புகளை, ரகசியங்களைப் பாதுகாப்பது நல்லது. வெளி நிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறைப் பெண்களுக்குத் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். தனி நபர் விமர்சனத்தைத் தவிர்க்கவும். மூத்த கலைஞர்களின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். என்றாலும் கொஞ்சம் இடைவெளி விட்டு பழகுங்கள். இந்தச் சனிப்பெயர்ச்சி அடங்கியிருந்த உங்களை அயராத உழைப்பால் அதிரடியாக வளர்ச்சியடையச் செய்வதுடன் அனைத்திலும் முதலிடம் பிடிக்க வைப்பதாக அமையும்.

கடக ராசி வியாபாரிகளுக்கான சிறப்புப் பலன்கள்

உங்கள் ராசிக்கு7 ம் வீட்டில் சனிபகவான் அமர்கிறார். இது மிகவும் உத்தமமான அமைப்பு என்று சொல்ல முடியாது. அதனால் கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த வேண்டாம். விரலுக்குத்தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தை ஓரளவு பெருக்கப் பாருங்கள். கூட்டுத் தொழில் வேண்டாமே. வேலையாள்களிடம் தொழில் சம்பந்தப்பட்ட ரகசியங்களை வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்டாதீர்கள். முடிந்தவரை கடன் தருவதைத் தவிர்க்கப்பாருங்கள். கடையை மாற்ற வேண்டிய சூழல் வரும். அரிசி, பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும். சிலருக்குப் பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும். அனுபவமிக்க வேலையாள்களை ஊக்கத்தொகை, சலுகைகள் என கொடுத்து தக்க வைத்துக் கொள்ளுங்கள். உண்மையோடும் விழிப்புணர்வோடும் கடுமையாக உழைத்தால் உங்களே வெற்றிகிடைக்கும் என்பதால் கவலைப்பட வேண்டாம்.

கடகராசி உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்பு பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு சாதகமாக ஆறாம் வீட்டில் இருந்த சனிபகவான் தற்போது ஏழாம் வீட்டில் அமர்கிறார். சொந்த வீட்டில் ஆட்சிபலமும் பெறுகிறார். இது மிகவும் சாதகமான அமைப்பு என்று சொல்ல முடியாது. எனவே முன்புபோல் அடிக்கடி விடுப்பில் செல்லாதீர்கள். மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகளைப் பற்றிய அந்தரங்க விஷயங்களை வெளியில் பேச வேண்டாம். சக ஊழியர்கள் உங்களைப் பற்றி விமர்சித்தாலும் அனுசரித்துப் போங்கள். வெகு நாள்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சலுகைகள் தாமதமாகத்தான் கிடைக்கும். எதிர்பாராத இடத்திற்கு திடிரென மாற்றப்படுவீர்கள். பழைய அதிகாரிகள் உதவுவார்கள். ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்திட வேண்டாம். தேவையில்லாமல் கோபப்பட்டுப் பேச வேண்டாம். இந்த சனி மாற்றம் சில நேரங்களில் உங்களை சூழ்நிலை கைதியாக மாற்றினாலும் அனுபவ அறிவாலும், சமயோஜித புத்தியாலும் பிரச்சனைகளை சமாளித்து சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக் காடு எனும் ஊரில் அருளும், பொங்கு சனீஸ்வரரைத் தரிசித்து வழிபட்டு வாருங்கள்; வாழ்க்கை வளமாகும்.